தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது » Sri Lanka Muslim

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது

_102429959_8ed19137-09a1-498b-810c-d6bd0f9054d9

Contributors
author image

BBC

கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணியினை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி 10:00 மணிக்கு மீட்பு குழுவினர் குகைக்குள் நுழைந்தனர் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒரு அதிகாரி கூறினார்.

இன்று காலை, அவசியம் அல்லாத ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முக்குளிப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அங்கு உள்ளனர்.

வெளிநாட்டை சேர்ந்த 13 முக்குளிப்பவர்கள் மற்றும் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் நான்கு நாட்களில் மீட்க வாய்ப்புள்ளதாக மீட்புப்பணி குழுவின் தலைவர் முன்பு தெரிவித்திருந்தார்

தற்போது வரை அங்கு சூழ்நிலை “கச்சிதமாக” உள்ளதாக நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்தார்

கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான இந்த 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்குண்டனர்.

குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குகை அமைந்துள்ள சியாங் ராய் மாகாணத்தின் ஆளுநரான நரோங்சக், “குகையில் சிக்கியுள்ளவர்களின் உடல்நிலை, நீரின் மட்டம் மற்றும் வானிலை போன்றவற்றை பார்க்கும்போது, தற்போது முதல் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் அவர்களை மீட்பதற்கான சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது” என்று கூறுகிறார்.

பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியசிறுவர்கள்

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை நேரத்தில், குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் தங்களது குடும்பத்திற்கு எழுதியுள்ள கடிதங்களை முக்குளிப்பவர்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதில், ”கவலைப்படாதீர்கள்.. நாங்கள் தைரியமாக உள்ளோம்” எனக் கூறி தங்களது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து குகை: "சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்களில் மீட்பதற்கு இலக்கு"படத்தின் காப்புரிமைFACEBOOK/EKATOL

”ஆசிரியரே, எங்களுக்கு நிறைய வீட்டுப்பாடங்களைத் தராதீர்கள்” என ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுவர்களில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு, இச்சிறுவர்கள் அணியின் கால்பந்து பயிற்சியாளரும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

”அன்பிற்குரிய சிறுவர்களின் பெற்றோர்களே. தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். மீட்பு குழுவினர் எங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றனர்” என 25 வயதான பயிற்சியாளர் கூறியுள்ளார்.

”என்னால் முடிந்தவரைச் சிறுவர்களை கவனித்துக்கொள்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன். எங்களுக்கு உதவியளிக்க வரும் அனைவருக்கும் நன்றி” எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய திட்டம் என்ன?

அபாயகரமான இந்த பணியில் பெருமளவிலான ராணுவம் மற்றும் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவர்களுக்கு பிராண வாயு சிலிண்டர்களை வழங்க சென்ற முக்குளிப்பவர் ஒருவர் திரும்பும் வழியில் உயிரிழந்த சம்பவம், அங்கு நிலவும் மோசமான சூழ்நிலையை உணர்த்துவதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் கருதுகின்றனர்.

தாய்லாந்து குகை: "சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்களில் மீட்பதற்கு இலக்கு"

சிறுவர்கள் தற்போது ஒரு உலர்ந்த இடத்தில் உள்ளதாகவும், ஆனால் மழை தொடர்ந்து பொழியும் பட்சத்தில் அவர்கள் இருக்கும் இடத்தின் அளவு 108 சதுர அடிகளாக குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் நரோங்சக் கூறுகிறார்.

சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு முக்குளித்தல் பயிற்சி தேவையென்றும், ஆனால் இன்னமும் அதை அவர்கள் கற்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

முன்னதாக, சிறுவர்கள் குகையிலிருந்து மீட்கப்படுவதற்கு சில மாதகாலமாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ராட்ச இயந்திரங்களை கொண்டு குகையில் துளையிட்டு அங்குள்ள நீரை வெளியேற்றி, அவர்களை பத்திரமாக வெளியே அழைத்து வரும் பணி முழுவீச்சியில் நடைபெற்று வருகிறது.

Web Design by The Design Lanka