ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் நிதியில் கல்முனை ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் » Sri Lanka Muslim

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் நிதியில் கல்முனை ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(அஸ்லம் எஸ்.மௌலானா, அகமட் எஸ். முகைடீன்)       


ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் கல்முனை மாநகர ஸ்மார்ட் சிட்டி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்று (12) சனிக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகர் செட்டி, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுடீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.சி.தஸ்தீக், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களின் பொதுசனத் தொடர்பு அதிகாரி அலிகான் ஷாபி, இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, ரீ.எல்.எம்.பாறூக் ஆகியோருடன் கல்முனை மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் நகர அபிவிருத்தி அதிகாரசபை உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களுக்குமான முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகர் செட்டி, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுடீன் ஆகியோர் இத்திட்டங்களை கூடிய விரைவாக ஆரம்பித்து, நிறைவேற்றுவதற்கான அறிவுறுத்தல்களை மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு வழங்கினர்.

ஆசிய அபிவிருத்தி வங்கி எமக்கு 2000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருக்கின்ற இந்த அரிய வாய்ப்பின் ஊடாக குறித்த அபிவிருத்தி திட்டங்களை குறுகிய காலத்தினுள் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்கு மாநகர சபையின் பொறியியல் பிரிவினர் இரவு, பகல் பாராது அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வர வேண்டும் என உள்ளூராட்சி இராஜாங்க அமைச்ச ர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

எமது கல்முனை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றியமைப்பதற்கு இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கி 2000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதானது கல்முனை வாழ் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற பெரும் வரப்பிரசாதமாகும் எனத் தெரிவித்த மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், இத்திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு எமது மாநகர சபையின் பொறியியல் பிரிவு ஒரு நிமிடம் கூட தூங்காமல் 24 மணித்தியாலமும் துரிதமாக செயற்படும் வகையில் தயார்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய கருத்திட்டத்தை வகுத்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியைப் பெற்றுத்தந்தமைக்காக இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபைக்கும் இங்கு நேரடியாக விஜயம் செய்து நெறிப்படுத்துகின்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப நகருங்களுக்கான திட்ட ஆலோசகர் செட்டி அவர்களுக்கும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுடீன் அவர்களுக்கும் கல்முனை மாநகர மக்கள் சார்பில் விசேட நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் ஏ.எம்.றகீப் இதன்போது குறிப்பிட்டார்.

இக்காலந்துரையாடலை தொடர்ந்து கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை போன்ற பிரதேசங்களில் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 16 இடங்களுக்கும் இவர்கள் கள விஜயங்களை மேற்கொண்டனர்.

Web Design by The Design Lanka