தினம் ஒரு 10 ரூபா! கெலிஓயவில் இருந்து ஓர் முன்மாதிரி » Sri Lanka Muslim

தினம் ஒரு 10 ரூபா! கெலிஓயவில் இருந்து ஓர் முன்மாதிரி

IMG_5847

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Zafnas Zarook


சுமார் 1600 இற்கு மேல் குடும்பங்கள் வாழும் கெலிஓய பிரதேசத்தில் நடைபெறும் ஓர் விடயம் உன்மையில் என்னை பல வகையில் சிந்திக்க தூண்டியது.அதனை உங்களிடம் இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் கெலிஓய பெரிய பள்ளிவாயலின் நிர்வாகத்தினரால் சுமார் 1000 உண்டியல்கள் கொள்வனவு செய்யப்பட்டு ஒவ்வொரு வீடு வீடாக கொடுக்கப்பட்டது.இதன் போது தினமும் பத்து ரூபாய் உண்டியலில் இடுமாறு கூறப்பட்டதோடு மேலதிகமாக சதகாவின் மகிமையும் அவ் வீட்டில் உள்ள குடும்பத்தவருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

சுமார் ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒரு முறை உண்டியல்கள் மீள பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டு ,ஊரில் உள்ள முக்கியஸ்தர் ஒருவர் இதற்கு பொறுப்பாக்கபட்டார்.காலங்கள் ஓடியது.பெரும்பாலும் அன்றாட வருமானத்தை நம்பி வாழும் குடும்பங்கள் இருக்கும் கெலிஓய மக்களின் வீடுகளில் இருந்த உண்டியல்கள் நிறையத் தொடங்கியது. பின் அவர்களே தன் நிறைந்த உண்டியல்களை குறித்த பொறுப்பாளர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்க தொடங்கினார்.

இவ்வாறு உண்டியலை கொடுக்கும் போது தாய்மார்கள் மற்றும் குடும்பத் தலைவர்கள் கூறிய கருத்துக்கள் இவை. ‘எண்ட கடைசி மகள் சல்லிய கண்டா ஓடி போய் பள்ளிக்கு சல்லி எண்டு உண்டியல் இல போடுரால்’ ‘எனக்கு உடம்பு ஏலாம போனா 10 ரூபா போட்டு இரண்டு ரக்காத் தொழுவேன் லேசாகிடும்’ ‘நல்ல விடயத்துக்கு வெளிய போற எண்டா 10 ரூபா போட்டுட்டு துஆ ஓட போங்கோ எண்டு மனிசி கத்துறா’ என்று தன் மகிழ்ச்சியை நிர்வாகத்திடம் கூறினர்.

குறித்த நிர்வாகத்தினரின் வீட்டிலே அனைத்து உண்டியல்களும் உடைக்கப்பட்டு எண்ணப்பட்டு கணக்கு பள்ளி நிர்வாகத்திடம் கொடுக்கப்படும்.

இப்படி 3 மாதத்துக்கு ஒரு முறை சுமார் 10 தொடக்கம் 12 இலட்சம் கிடைக்கப்பெற்றது.இவ்வாறு கிடைக்கப்பெறும் பணம் ஏழைக் குடும்பங்களின் அவசர மருத்துவ தேவை,பள்ளிவாயல் தேவைகள்,ஜனாசா தேவை மற்றும் ஊர் நலன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

இந்த விடயத்தினை அக்கரைப்பற்று மண்ணில் நடைமுறைப்படுத்தினால்???

அக்கரைப்பற்று மண்ணில் சுமார் 12,000 குடும்பங்கள் வாழ்கின்றனர்.இதில் நாம் 6,000 குடும்பத்திற்கு மட்டும் இந்த செயற்திட்டத்தினை அமுல் படுத்துவதாய் எண்ணுவோம்.

மாதத்திற்கு 300/- ,ஆகவே மொத்தம் 300/- * 6,000/-= 1,800,000 ரூபா (1.8 மில்லியன்) மாதாந்தம் கிடைக்கபெறும்.இது உன்மையில் பெரும் தொகை இதன் மூலம் இன்றைய அக்கரைப்பற்று மண்ணின் பின்வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும்.
1.அவசர மருத்துவ தேவை (புற்று நோய்,சிறு நீரக பிரச்சினை…)
2.மலசல கூடம் மற்றும் நீர் இணைப்பு.
3.ஏழை மாணவர்களுக்கான கல்விக்கான உதவி.
4.பள்ளி மூஆத்தின்களை கவனித்தல்.
5.கவனிப்பாறற முதியோர்களை கவனித்தல்.

இது போன்ற விடயங்களை எம்மால் இலகுவாக செய்து விட முடியும்.

தினம் பத்து ரூபா என்பது மிக மிக சிறிய பணமே.ஆனால் இதன் மூலம் பெரும் நல்ல விடயங்களை அரங்கேற்ற முடியும்.

அத்தோடு இப்பணிக்கு அக்கரைப்பற்று 6 பிரிவுகளுக்கும் 6 பேரை வேலைக்கு அமர்த்த முடியும்.இவர்களுக்கு மாதம் ஒரு 10,000 ரூபா சம்பளம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கும் ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த முடியும் .

எனவே இது குறித்த சமூக ஆர்வளர்கள் சிந்தித்தால் உண்மையில் சிறப்பான விடயங்களை முன்னெடுக்க முடியும்

IMG_5847

Web Design by The Design Lanka