சசிகலாவுக்கு சலுகைகள்: சிறையில் நடப்பதுதான் என்ன? » Sri Lanka Muslim

சசிகலாவுக்கு சலுகைகள்: சிறையில் நடப்பதுதான் என்ன?

sasi

Contributors
author image

BBC

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக நான் கூறியது தற்போது நிரூபணமாகியுள்ளது. இனி இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறார் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மொட்கில்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளருமான வி.கே. சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி இருவரும் பெங்களூரு சிறையில் சுதந்திரமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான தகவல்களை வெளியிட்ட அப்போதைய சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா மொட்கில், பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

சசிகலாவுக்கு உண்மையிலேயே சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தான் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமாகியுள்ளதாக பிபிசியிடம் பேசிய ரூபா தெரிவித்தார்.

ஐபிஎஸ் ரூபா மொட்கில்
Image captionஐபிஎஸ் ரூபா மொட்கில்

“இந்த அறிக்கையை எனக்கு அளிக்குமாறு நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், பல முறை கேட்டும் எனக்கு தரவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோதும் எனக்கு அது கிடைக்கவில்லை. பிறகு தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்து பெற்றுக் கொண்டேன்” என்றார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் இந்த விவகாரம் தொடர்பாக 2017ல் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால், அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பது பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. 2018-ம் ஆண்டு, இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக அரசு தெரிவித்தது.

“நான் என்னவெல்லாம் குற்றச்சாட்டுகள் வைத்திருந்தேனோ அவை அனைத்தும் இதில் நிரூபணமாகி உள்ளது. ஆவணங்களை தவறாக காட்டியதும் இதில் தெரிய வந்துள்ளது.”

சசிகலாவிற்கு சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ பதிவு செய்து தகவல்களை பெற்ற நரசிம்மமூர்த்தி பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷியிடம் கூறுகையில், “நான் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வேன். அறிக்கை அளிக்கப்பட்டும் அரசு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நோட்டீஸ் அனுப்பவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் என்ன?

வினய்குமார் குழு சமர்ப்பித்த அறிக்கையில் சசிகலா தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எவை எவை என்று கேட்டபோது ரூபா குறிப்பிட்டவை:

  • சிறையில் குறிப்பிட்ட சில அறைகள் முழுவதும் சசிகலா மற்றும் இளவரசிக்காக மட்டுமே இருந்ததாக ரூபா குற்றஞ்சாட்டி இருந்தார். இது உண்மை என்று வினய் குமார் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
  • இவர்களுக்கு மட்டுமே 5 செல்கள் ஒதுக்கப்பட்டன.
  • சிறையில் இவர்கள் இருவரும் சுதந்திரமாக நடப்பது போன்ற வீடியோவை ரூபா வெளியிட்டிருந்தார். சசிகலாவும் இளவரசியும் சிறையில் சுதந்திரமாக இருந்தது உண்மை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இவர்களை யார் யார் எத்தனை மணி நேரம் பார்க்க வந்தனர் என்பது குறித்த ஆவணங்கள் ஜோடிக்கப்பட்டுள்ளன.
  • செல்களில் இருவருக்கு மட்டும் தனியாக உணவு சமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. சசிகலாவின் அறையில் இருந்த ஒரு குக்கரில் அவருக்கு தனியே உணவு சமைக்கப்பட்டுள்ளது.
  • சசிகலா அவரது சொந்த ஆடையையே அணிந்திருந்தார்.
  • சசிகலாவிற்கு நாற்காலி, பழங்கள், பிஸ்கெட்டுகள், சோப் மற்றும் டூத் பேஸ்ட் ஆகியவை அளிக்கப்பட்டன.

இந்நிலையில், “சசிகலாவிற்கு எந்தவித சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்று அப்போது சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயண ராவ் கூறியது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகியுள்ளது” என்றும் ரூபா தெரிவித்தார்.

சத்யநாராயண ராவ்
Image captionசத்யநாராயண ராவ்

“இதற்கு யார் காரணமோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைகிறேன்.”

சிறையில் நடப்பது என்ன?

சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கிறதா? அதற்கு யார் காரணம்? இதற்கு என்ன தீர்வு என்பது குறித்து ரூபா மொட்கிலிடம் கேட்டோம்.

சிறையில் இருக்கும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் பரிமாற்றத்தை முதலில் தடுக்க வேண்டும் என்கிறார் ரூபா.

இதைத் தவிர மற்றொரு பிரச்சனை, பல சிறைகளில், ஆவணக்காப்பக அறைகளை சிறைக் கைதிகளே பாதுகாக்கின்றனர். இதனால் சில வழக்குகளில் ஆவணங்கள் காணாமல் போகின்றன. நீதிமன்றங்களில் வழக்கு வரும்போது, ஆவணங்கள் இல்லை என்று கூறப்பட்டு விசாரணை பாதிக்கப்படுகிறது.

சிறைக்கு வரும் மருத்துவர்கள் சிலரும் தாக்கப்படுகிறார்கள். தங்களுக்கு பிணை வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் தங்களுக்கு சாதகமாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று கைதிகள் நினைக்கிறார்கள்.

மேலும் சிறைகளில் சிசிடிவி கேமிராக்கள் செயல்படுவதில்லை. சிறைகளில் செல் பேசிகள் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் ஜேமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சிறைபடத்தின் காப்புரிமைGOOGLE

ஆனால், பழுதடைந்திருக்கும் ஜேமர்கள் வேண்டுமென்றே சரி செய்யப்படுவதில்லை.

இவை அனைத்திற்கும் சிறை கண்காணிப்பாளர்தான் பொறுப்பாக முடியும்.

சிறைகளை சீர்திருத்தம் செய்வது மிகவும் அவசியம். சிறைகளிலும் சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ரூபா தெரிவித்தார்.

கிளாஸ் ஏ சிறைக் கைதிகள்

யார் யாருக்கெல்லாம் சிறையில் சலுகைகள் வழங்கப்படலாம் என்று சட்டம் கூறுகிறது? சிறைகளில் உண்மையில் என்ன நடக்கிறது? என்பது குறித்துதெல்லாம் வழக்குரைஞர் கண்ணதாசனை தொடர்பு கொண்டு பேசினாம்.

கிளாஸ் ‘ஏ’ : படிப்பறிவு மிகுந்த அல்லது சமூகத்தில் பெரிய நிலையில் உள்ளவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைக்கும்போது, நீதிமன்றமோ அல்லது சம்மந்தப்பட்ட மாநில அரசோ குறிப்பிட்ட கைதிகளுக்கு சில சலுகைகள் வழங்கலாம். அவர்களுக்கு கட்டில், மெத்தை, ஃபேன் போன்ற வசதிகளோடு, தனியே சமைத்துக் கொள்ளும் வதியும் தரப்படும்.

கிளாஸ் ‘பி’: சாதாரண மக்கள். எந்த வசதியும் இவர்களுக்கு செய்துதரப்பட மாட்டாது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இந்த ‘ஏ கிளாஸ்’ ஒதுக்கப்படவில்லை என்று கூறும் வழக்கறிஞர் கண்ணதாசன், அவர் அதிக சலுகைகளை சிறையில் அனுபவித்ததாக கூறுகிறார். ஆனால் சசிகலா சலுகைகள் வழங்கப்படுவதற்கான எந்தப் பிரிவிலும் இல்லை என்று நீதிமன்றம் கூறிய பின்னரும் அவருக்கு பல சலுகைகள் செய்துத்தரப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு காலத்தில் இந்த மாதிரி சலுகைகள் மிக குறைந்த அளவிலான மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்தது. சுதந்திர போராட்ட வீரர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே ‘ஏ கிளாஸ்’ சலுகைகள் வழங்கப்பட்டன.

ஆனால் இப்போதோ, போதைப் பொருள் கடத்திய, கொலை செய்த குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களுக்கு கூட இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகையை மொத்தம் நிறுத்திவிட்டு, அனைத்து கைதிளையும் சமத்துவமாக நடந்த வேண்டும் என்றும் வழக்கறிஞர் கண்ணதாசன் கூறுகிறார். மனிதாபிமான அல்லது உடல்நலன் சார்ந்து வேண்டுமானால் அவர்களுக்கு வேண்டிய சலுகைகளை வழங்கலாம் என்று அவர் கூறுகிறார்.

Web Design by The Design Lanka