முஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் மடல் -2 ; எவ்வகையான முஸ்லிம் கூட்டமைப்பு? » Sri Lanka Muslim

முஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் மடல் -2 ; எவ்வகையான முஸ்லிம் கூட்டமைப்பு?

yls

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வை எல் எஸ் ஹமீட்

எவ்வகையான முஸ்லிம் கூட்டமைப்பு?
————————————————
முஸ்லிம்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை அமைக்க வேண்டும்; என்ற கருத்து அவ்வப்போது முன்வைக்கக ப்படுகின்றது. ஒற்றுமை சிறந்ததே! ஆனால் அது எந்தவகையான ஒற்றுமை? இதற்குரிய விடை ‘ எவ்வகையான கூட்டமைப்பை’ நாம் எதிர்பார்க்கிறோம்? என்பதில் தங்கியிருக்கின்றது.

அரசியலில் கூட்டமைப்பு என்பதை பிரதானமாக மூன்று வகையாக பிரிக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான குறுகியகால கூட்டமைப்பு
தேர்தல் கூட்டமைப்பு
நீண்டகால இலட்சிய கூட்டமைப்பு

குறிப்பிட்ட நோக்கத்திற்கான குறுகியகால கூட்டமைப்பு
——————————————————-
இது ஒரு குறிப்பிட்ட தேவைக்காக மாத்திரம் இணைவது. தேவை முடிந்ததும் கலைந்துவிடுவது.
உதாரணமாக, 2015 ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்றத்தேர்தல் முறையை மாற்றுவதற்காக 20வது திருத்தம் கொண்டுவர முயற்சிக்கப்பட்டபோது, சுமார் 20 இற்கு மேற்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறிய கட்சிகள் இணைந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஒரு தற்காலிக கூட்டமைப்பை ஏற்படுத்தின. அந்தத் தேவை முடிந்ததும் அது கலைந்துவிட்டது.

தேர்தல் கூட்டமைப்பு
—————————-
இது தேர்தலில் தமது தமது கட்சிக்கு அதிகூடிய ஆசனங்களைப் பெறுவதை மாத்திரம் இலக்காக கொண்டது. இங்கு கொள்கைகளில் உடன்பாடு, முரண்பாடு என்ற கேள்விகள் எழுவதில்லை. உதாரணம், இன்று ஐ. தே. கட்சி, சு. கட்சி போன்றவற்றுடன் நாங்கள் இணைவது. பதுளைத் தேர்தலில் மு.கா- அ இ மா கா இணைந்தது. விரும்பினால் அடுத்த தேர்தலுக்கும் தொடரலாம் அல்லது குறித்த தேர்தலுடன் முடித்துக்கொள்ளலாம்.

நீண்டகால இலட்சியக் கூட்டமைப்பு
————————————————-
இது நிரந்தர இலட்சியங்களை நோக்கிய நிரந்தர அல்லது நீண்டகால கூட்டமைப்பு. முன்னைய இருவகைக் கூட்டமைப்புகளையும் போலல்லாது, இதற்கு பொதுக்கொள்கை, பொது இலட்சியங்கள் இருக்கவேண்டும்.

இதற்கு உதாரணம் த தே கூட்டமைப்பு. இவர்களது பிரதான இலக்கு தமிழ் மக்களுக்கென ஒரு அதிகார அலகைப் பெற்றுக்கொள்வது,அதற்காக போராடுவது . இக்கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் பின்புலத்திலேயே உருவானது. அவர்கள் இன்று இல்லாத நிலையில் தற்போது சிதற ஆரம்பித்திருக்கின்றது; என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் நாம் எதிர்பார்ப்பது மேற்கூறப்பட்ட இருவகைக் கூட்டமைப்பில் ஒன்றா? அல்லது நிரந்தரக் கூட்டமைப்பா? நிரந்தரக்கூட்டமைப்பாயின் அதன் இலக்குகளை அடையாளம் கண்டிருக்கின்றோமா? என்ற அடுத்த கேள்விக்குள் நாம் செல்லவேண்டும். ஏனெனில் என்ன நோக்கத்திற்காக நாம் கூட்டமைப்பொன்றை எதிர்பார்க்கின்றோம்; என்று தெரியாமல் கூட்டமைப்பைப்பற்றி பேசமுடியாது.

இலக்கு
————
இலக்கை அடையாளம் காண்பதாயின் அவ்விலக்கின் தேவைக்கான காரணிகள் இனங்காணப்பட்டிருக்கின்றனவா? ஆம் எனில் அக்காரணிகளைத் தோற்றுவித்த காரணங்களை அடையாளம் கண்டிருக்கின்றோமா? அதற்கும் ஆம் எனில் அக்காரணங்கள் கட்சிகளின் ‘ ஒற்றுமையின்மை’ என்பதற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? அதற்கு அப்பாலும் செல்கின்றனவா? என்ற அடுத்த கேள்விக்குள் செல்லவேண்டும்.

இவற்றிற்கான விடை ‘இல்லை’ என்றால் என்ன நோக்கத்திற்காக கூட்டணி தேவைப்படுகின்றது. ஏதோ ஒற்றுமைப்பட்டு ஒன்றாக இயங்குங்கள் என்பதற்காக கூறுகின்றோமா? அவ்வாறாயின் இவர்கள் ஒற்றுமைப்படாமல் இருப்பதற்கான காரணிகளையாவது அடையாளம் கண்டிக்கின்றோமா? அவற்றிற்கான காரணங்களை அடையாளம் கண்டிருக்கின்றோமா?

இவற்றிற்கான விடைதெரிந்தால் முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியமா? இல்லையா? என்ற கேள்விக்கு தெளிவான விடைபிறக்கும்.
இவை தொடர்பாக

அடுத்த மடலில் சந்திப்போம் இன்ஷாஅல்லாஹ்.

Web Design by The Design Lanka