சர்வதேச கூட்டுறவு தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை » Sri Lanka Muslim

சர்வதேச கூட்டுறவு தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

சர்வதேச கூட்டுறவு தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை (மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு) 2018.07.07

96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த நிகழ்வில் பங்குபற்ற கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பல்வேறு சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் நான் பங்குபற்றியிருக்கின்றேன். கூட்டுறவுத்துறை ஊழியர் ஒருவராக இருக்கின்றபோது நான் முதன்முறையாக சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வொன்றில் பங்குபற்றினேன். அதன் பின்னர் அமைச்சராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் அத்தகைய நிகழ்வொன்றில் பங்குபற்றுகின்றேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று கூட்டுறவுத்துறை ஊழியர் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது உங்களுக்கு தெரியும்.

கூட்டுறவுத்துறை தொடர்பில் நீங்கள் விரிவாக அறிந்து வைத்திருக்கின்றீர்கள். கூட்டுறவு இயக்கம் என்பது ஒரு சமூக இயக்கமாகும். அதுவொரு அரச இயக்கமல்ல. மக்கள் மத்தியிலான கூட்டுறவை வெளிப்படுத்தும் ஜனநாயக இயக்கமாக நாம் அதனை குறிப்பிட முடியும். அரச கொள்கை எதுவாக இருந்தபோதும் கூட்டுறவு கொள்கைக்கும் அரச கொள்கைக்குமிடையில் ஏற்படும் சில முரண்பாட்டு நிலைமைகள் இருக்குமேயானால் நாம் அவற்றை தீர்த்துக்கொள்ள முடியும்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் முன்னேற்றமான கூட்டுறவு இயக்கங்கள் உள்ளன. எனவே ஒரு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையும் அரசியல் கொள்கையும் ஒருபோதும் கூட்டுறவு இயக்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றபோது முரண்பாடுகள் ஏற்படுவதற்கான தேவை இருக்காது. எமது நாட்டில் கூட்டுறவு இயக்கம் தொடர்பில் இருந்துவரும் நீண்டகால அனுபவங்களுடன் இந்த கூட்டுறவு இயக்கத்திற்கு அனைவர் மத்தியிலும் பெரும் கௌரவமும் அன்பும் இருந்து வருகின்றது. கூட்டுறவு இயக்கம் என்பது ஐக்கியம் மற்றும் பொதுத்தன்மை என்பதாகும். மக்கள் தனியாக வாழ்வதற்கு எடுத்துக்கொள்கின்ற முயற்சியை பார்க்கிலும் கூட்டாக இருப்பதன் முக்கியத்துவத்தை கொள்கை ரீதியாகவும் தத்துவார்த்தமாகவும் எடுத்துச் சொல்லும் இயக்கமாகும். தனியாக வாழ்வதற்கு முயற்சிக்கின்றவர்களை முன்னேற்றம் அடையாதவர்களாகவே படித்த சமூகம் கருதுகின்றது. தனிப்பட்ட விடயங்களை தாண்டி கூட்டு அம்சங்களுடன் முன்னேறுவதற்காக எடுக்கின்ற முயற்சிகளின் மூலமே மக்களின் பெறுமதி அதிகரிக்கிறது.

கூட்டுறவு இயக்கம் என்பது மானிட பெருமானத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு துறையாகும். தான் அடுத்தவருக்கு செய்ய வேண்டிய சேவை குறித்தே அதில் பேசப்படும். அதேபோன்று ஏனையவர்கள் பொது சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவைகள் குறித்தும் அங்கு பேசப்படும். எனவே கூட்டுறவுத்துறையின் கொள்கையும் தத்துவமும் உலகில் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒன்றல்ல. கூட்டுறவு இயக்கம் சிலபோது வீழ்ச்சியடையும். மீண்டும் எழும். இது ஆச்சரியமான ஒன்றல்ல. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மக்களின் தனிப்பட்ட வாழ்வும் இப்படித்தான் அமைந்திருக்கும். சிலபோது நாடுகளின் நிலைமையும் இதுதான். சில நிறுவனங்களும் இப்படித்தான்.

தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கின்றவர்களுக்கு கூட்டுறவு இயக்கத்தில் நிலைத்திருப்பதற்கான வாய்ப்பில்லை. சமூகத்தில் அடுத்தவர்களை நேசிக்கின்ற, அடுத்தவர்களை மதிக்கின்ற அவர்களது பிரச்சினைகளை புரிந்துகொள்கின்றவர்களுக்குத்தான் கூட்டுறவு இயக்கத்தில் நிலைத்திருக்க முடியும். கடந்த சில வருடங்களில் கூட்டுறவு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெரும் பணிகளைச் செய்து பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில் அமைச்சருக்கும் பணிக்குழாமினருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். அமைச்சருக்கு கூட்டுறவு இயக்கம் குறித்து சிறந்த தெளிவு இருக்கின்றது. கூட்டுறவு இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளினால் இன்று இங்கு என்னிடம் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் பல எதிர்கால திட்டங்கள் உள்ளன. இலக்குமயப்பட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த எதிர்கால திட்டங்களை இலக்குமயப்படுத்தியதாக மேற்கொள்வதற்கு நீங்கள் எடுத்த கொள்கை ரீதியான தீர்மானங்கள் உள்ளன.

இங்கு இடம்பெற்ற சில உரைகளின்போது கூட்டுறவு இயக்கத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்த மனக்குறைகள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தில் உள்ள வரிகள் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டது. சில உரைகளின்போது உங்களை அரசாங்கம் கவனிப்பதில்லை என்பது போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன. உங்களை கவனிக்காவிட்டால் உங்கள் மீது கவனம் செலுத்துகின்ற அளவிற்கு உங்களிடம் நிகழ்ச்சிதிட்டம் இருக்க வேண்டும். இந்த நாட்டில் கூட்டுறவு இயக்கம் என்பது பலமானதொரு இயக்கம் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். இதனைப் பார்க்கிலும் பலமாக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகளை முன் வைப்பதற்கு நீங்கள் எப்போதும் ஒரு பொது அமைப்பாக முன் வர வேண்டும். இதன் மூலம் நான் கூற வருவது நீங்கள் வேலை நிறுத்தங்களை செய்ய வேண்டுமென்பதல்ல. நீங்கள் தரமானதொரு மக்கள் சார்பு இயக்கத்தில் இருக்கின்றீர்கள்.

எனவே உங்களின் இருப்பை வெளிப்படுத்த உங்களிடம் போதுமான பலம் இருக்க வேண்டும் குறிப்பாக தேசிய கூட்டுறவு சபை இதற்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். கூட்டுறவு இயக்கத்தில் உள்ள முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு தேசிய கூட்டுறவு சபையும் அமைச்சும் இணைந்து இதனைப் பார்க்கிலும் செயற்திறனான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று குறித்து கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்த மாதம் தேசிய பொருளாதார சபையில் கலந்துகொள்ள அமைச்சிற்கும் தேசிய கூட்டுறவு சபைக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அதேபோன்று கூட்டுறவுத்துறையில் உள்ள பல்வேறு அமைப்புகளின் நிபுணர்களையும் இதற்கு நான் அழைக்கின்றேன். இதன்போது உங்களுடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். நிதி அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களையும் அழைத்து உங்களுடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட எங்களுக்கு முடியும். எனவே எதிர்வரும் சில மாதங்களில் கூட்டுறவுத்துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உங்களுடைய முன்மொழிவுகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளேன் என்றும் குறிப்பிட விரும்புகின்றேன். பேசுவதைப் பார்க்கிலும் அதனை செயலில் காட்டுவது நல்லது என்று நான் நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை உறுதியான அடித்தளத்தின் மீது மிகவும் வினைத்திறன் வாய்ந்த இயக்கமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எதிர்பார்ப்புடனேயே நாம் 96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை அனுஷ்டிக்கின்றோம். இன்னும் சில மாதங்களில் இதன் பெறுபேறுகளை உங்களுக்கு வழங்க நான் எதிர்பார்க்கின்றேன்.

இதற்கு தலைமைத்துவத்தை வழங்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட புதிய பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன, அமைச்சின் அதிகாரிகள், கூட்டுறவு சபை, கூட்டுறவுத்துறையில் உள்ள பல்வேறு விசேட நிறுவனங்களில் உள்ளவர்கள் இதற்காக வழங்கிய ஒத்துழைப்புகளுக்கும் அனைத்து அமைச்சர்கள், நிறுவனங்கள், சமூகமளித்துள்ளவர்கள், கூட்டுறவு பணிக்குழாம் தலைவர்கள், பணிப்பாளர்கள், முகாமைத்துவ சபை உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

97வது சர்வதேச கூட்டுறவு தினத்தை இதனைப் பார்க்கிலும் மகிழ்ச்சியாக அனுஷ்டிக்கக்கூடிய சர்வதேச கூட்டுறவு தினமாக அமையுமென நான் நம்புகின்றேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.

ஜனாதிபதி ஊடக பிரிவு
2018.07.09

Web Design by The Design Lanka