கைது செய்யப்பட்ட இளைஞர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்...! » Sri Lanka Muslim

கைது செய்யப்பட்ட இளைஞர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்…!

Contributors
author image

S.Ashraff Khan

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து அவர்களது கல்வியை பூர்த்தி செய்ய உதவ முன்வாருங்கள் என ஸ்மாட் ஒப் சிறி லங்கா சமூக சேவை அமைப்பின் தலைவர் றிஸ்கான் முஹம்மட் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுள்ள அவர், இது விடயமாக இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடும் போது,

ஹொரவப்பொத்தானை, கிரலாகல தொல்பொருள் வனப்பகுதியில் உள்ள தூபியின் மீது பாதணியுடன் ஏறி நின்று அவமதித்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களாகவே முகநூலில் தரவேற்றிய புகைப்படம் ஒன்றை ஆதாரமாக வைத்து அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 5 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இவ் விடயத்தை அறியாமல் புரியாமல் செய்து இருக்கலாம்.

இவர்களுடைய விடயத்தில் இப்போது சமூக ஊடகங்களில் வீராப்பு பேசி கொண்டு அறிக்கை விடும் அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் இவ்விடயத்தில் தலையிட்டு இருந்தால் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து இருக்கலாம். இப்போது இப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், வீராப்பு பேசி கொண்டு சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகள் ஒருவர் மாறி ஒருவர் அறிக்கை விடுகின்றனர்.

இதுவல்ல இப்போதைய தேவை இம் மாணவர்கள் இறுதி ஆண்டு பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் இவர்களின் வாழ்க்கையில் முக்கியமான கட்டம் இது,

இந்த நேரத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது இவர்களுக்கு,

ஆகவே தயவுசெய்து இந்த விடயத்தை வைத்து அரசியல் செய்யாமல். இவர்கள் உங்களுடைய பிள்ளைகள் என்ற உணர்வுடன் இறைவனுக்கு பயந்து இவர்களுக்கு உதவ முடியுமாக இருந்தால் உதவுங்கள்

இல்லை என்றால் அறிக்கை விடாமல் அமைதியாக இருங்கள்.

Web Design by The Design Lanka