அரைகுறை மனநிலை கொண்டோர் » Sri Lanka Muslim

அரைகுறை மனநிலை கொண்டோர்

bussss

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஷ்ரப்


நேற்று (07) கண்டியிலிருந்து வந்த பஸ் ஒன்றில் ஏறி பின்னால் உள்ள சீட்டில் அமர்ந்தேன். முன்னாலும் பின்னாலும் நிறையப்பேர் இருக்கிறார்கள். அது கண்டியிலிருந்து பொத்துவிலுக்கு செல்லும் பஸ் ஆகையால் இருப்பவர்கள் பெரும்பாலும் கிழக்கைச் தேர்ந்தவர்களே.

இடையில் பஸ்ஸில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஏறினார். ஏறி உள்ளே வந்தவர் இரண்டு இளைஞர்களுக்கு நடுவில் இருந்த ஒரு சீட்டில் இருக்கச் சென்றதும் உடனே அதில் ஒரு இளைஞன் அந்த சீட்டினை “இது நான் புக் பன்னி இருக்கிறேன்” என்று சொல்லி அந்த நபருக்கு அந்த சீட்டினை கொடுக்கவில்லை.

இத்தனைக்கும் அந்த சீட்டில் தன்னுடைய பையினை வைத்திருக்கிறான் அவன். வந்த சிங்கள சகோதரனோ சுமார் நாற்பது வயதுடையவராக இருப்பார். பார்த்துக்கொண்டிருந்த எனக்கே அதிக ஆத்திரம் மேலிட்டது இருந்தும் அவர் இரண்டு தடவை கேட்டுவிட்டு அமைதியாக பின்னால் சென்றுவிட்டார்.

அதென்ன பஸ்ஸில் சீட்டினை புக் பன்னி யாருமே இல்லாமல் வருவது? பேக் வைப்பதற்கு யாரு புக் பன்னுவார்? அந்த இளைஞர்களைப்பார்தத்தால் அவர்களுடைய சீட்டிற்கே காசு கொடுத்திருக்க மாட்டார்கள். அப்படி இருக்க அவர் புக் பன்னி பேக் வைத்துக்கொண்டு வருகிறாராம். ஒருவர் பொத்துவில்லைச் சேர்ந்தவர், ஒருவர் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர். இத்தனைக்கும் இருவரும் படிப்பவர்கள் போலத் தெரிகிறது. இருந்தும் என்ன பயன்.

குறித்த சிங்கள சகோதரனுக்கு தெரியும் இவர்கள் முஸ்லீம்கள் என்று. அதனால் என்னவோ அமைதியாக எதுவுமே பேசாமல் பின்னோக்கி கடந்துவிட்டார்.

நீண்ட நேரமாக நானும் பார்த்துக்கொண்டு வருகிறேன். அந்த இருக்கை அவர்களால் புக் பன்னப்பட்டது இல்லை என்பது புரிந்தது. தனது பேக்கை வைத்திருக்கவேண்டும் என்பதனாலேதான் அவ்வாறு ஒரு பொய் சொல்லி ஒரு மனிதனின் உரிமையை மறுத்திருக்கிறார்கள். சின்னதோ பெரியதோ அவர்களுக்குத் தெரியாது அவர்கள் இன்னொரு மனிதனின் உரிமையை மறுத்திருக்கிறார்கள் என்று. அசிங்கமான, அற்ப, குறுகிய உள்ளம் கொண்டவர்கள். படித்தும் பண்பாடு தெரியாத மிருகங்கள். இஸ்லாமியன் என்று சொல்லிக்கொண்டு கேவலம் மனிதப்பண்பே அற்ற மட்டமானவர்கள்.

இப்படியான சிறு சிறு காரணங்கள்தான் இன்னும் எங்களை மாற்று இனத்தவர்களிடம் எதிரிகளாக காட்டிக்கொண்டிருக்கின்றது. அவர்கள் அடிக்கிறார்கள் அடிக்கிறார்கள் என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர ஏன் அடிக்கிறார்கள் நாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதை நாங்கள் யோசிக்கவில்லை.

நீண்ட நாட்களுக்கு முன்னர் ஒரு தடவை மட்டக்களப்பில் இருந்து ரயிலில் செல்ல ஏறி சீட்டில் உட்கார்ந்திருந்தேன். அருகில் ஒரு பெண்ணும் இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து ஆறு இருக்கைகளை கைப்பற்றி அதில் கால்களைப் போட்டுக்கொண்டு வருவோரிடம் எல்லாம் “ஆட்கள் இருக்கிறார்கள், ஆட்கள் இருக்கிறார்கள்” என்று சொல்லி விரட்டிக்கொண்டிருந்தார். ஓட்டாமாவடி வரைக்கும் யாருமே இருக்கவில்லை அதில்.

பிறகு ஒரு வயோதிப ஆண் வந்து கேட்டதும் இதையே சொன்னார், பாத்திருந்த எனக்கு ஆத்திரம் மேலோங்க “ஆக்கள் வந்தா அவர் எழும்பட்டும், இப்ப ஒண்ட கால எடு, இல்லாட்டி ஒனக்கும் சீட் இல்லாம போகும் இவடத்த பொம்புள எண்டும் பாக்காம” என்று கொஞ்சம்கூட மரியாதையே இல்லாமல் சொல்லிவிட்டேன். இதனை எதிர்பார்க்காத அந்தப்பெண் அதுவும் வயதில் மிகவும் மூத்த அந்தப்பெண் கால்களை எடுத்துவிட்டு அமைதியாக அவருக்கு சீட்டைக்கொடுத்தார்.

பின்னர்தான் நண்பன் காதினில் புசுபுசுத்தான் அந்தப்பெண்ணும் நமது ஊரைச்சேர்ந்த ஒரு பழைய ஆசிரியை என்று. உடனே வெட்கித்து போனேன் அவருக்கு அவ்வாறு பேசியதற்காக அல்ல, அப்படி மனநிலை கொண்ட ஒரு பெண் அதுவும் ஒரு ஆசிரியை நமது ஊரைச்சேர்ந்தவர் என்பதற்காக.

ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தச் சிறிய விடயம்கூட மற்றவர்களின் உரிமையைப்பறிக்கும் ஒரு செயல். நமக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை இன்னொருத்தர் உரிமையை பறிக்க. நமது மார்க்கத்தையும் அதன் சட்டதிட்டங்களையும்தான் நடைமுறைப்படுத்த உங்களால் முடியாவிட்டாலும் குறைந்தது மனித தண்மையையாவது உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள்.

வங்கிகளில், அரச அலுவலகங்களில் வரிசையில் நின்று சேவை பெற்றுக்கொள்ள முடியாது, இலஞ்சம் கொடுத்து சேவைகளைப் பெற முன்னிற்பது, தகுதியற்றவர்களை தகுதியுள்ளவர்களால காட்டி போலியாக செயற்படுவது, மற்றவர்கள் உரிமையை மறுப்பது, அரச சொத்துக்கள் பொதுச் சொத்துக்களை பேணுவதில் அலட்சியம் செய்வது போன்ற விடயங்களில் இலங்கையில் முன்னிலை வகிப்பது முஸ்லீம் சமூகமே என்பதை வெட்கத்தோடு சொல்லி முடிக்கின்றேன்!

அண்மையில் இலங்கையில் மேற்கொண்ட எமது சமூகம் சார்ந்த ஒரு ஆய்வின் முடிவில் கிடைத்திருக்கும் விடயம் என்னவென்றால் “இலங்கை முஸ்லீம்கள் மனதளவில் இன்னும் தான் இலங்கையன் என்ற எண்ணப்பாடு கொண்டிருக்கவில்லை. தாங்கள் ஒரு விருந்தினர் என்ற எண்ணத்தோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்பதாகும். அதுவும் எமது முஸ்லீம் சமூகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவு.

எமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள பாரியளவில் எத்தணிக்கும் நாம் நமக்கான கடமைகளையும் பொறுப்புக்களையும் கொஞ்சமேனும் உணரவேண்டும். அதைவிடுத்து வெறுமனே உரிமை உரிமை என்றால் எங்கே செல்வது உரிமைகளுக்காக…

bussss

Web Design by The Design Lanka