02 முஸ்லிம்களைக் காணவில்லை: 12 கடற்படையினர் காயம் - கிண்ணியாவில் பதற்றம் » Sri Lanka Muslim

02 முஸ்லிம்களைக் காணவில்லை: 12 கடற்படையினர் காயம் – கிண்ணியாவில் பதற்றம்

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

இரண்டாம் இணைப்பு


கிண்ணியா, கங்கை சாவத்து பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கற்களால் தாக்கப்பட்ட கடற்படையின் 12 பேர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கங்கை _சாவத்து பாலத்திற்கு அருகில் பாதுகாப்புப் பிரிவினருக்கும் மக்களுக்கும் இடையில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது, நடத்தப்பட்ட கற்பிரயோகத்தில் காயமடைந்த கடற்படையின் 12 உறுப்பினர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

கங்கை – சாவத்து பகுதியில் மகாவலி கங்கைக் கரையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்டதுடன், பொலிஸ் விசேட அதிரப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட தாகவும் தெரியவருகின்றது.

இன்று காலை மணல் அகழப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, கடற்படையின் சுற்றிவளைப்பு குழுவொன்று அந்த இடத்திற்கு சென்றுள்ளது.

மணல் ஏற்றுவோரை கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கடற்படையினர் பொலிஸாரிடம் குறிப்பிட்டார்.

கடற்படையினர் முன்னெடுத்த நடவடிக்கையின் போது 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்த மூவர் கங்கையில் பாய்ந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தப்பியுள்ளதுடன் 23 வயதான கிண்ணியா, இடிமன் பகுதியைச் சேர்ந்த பதூர் ரபீக் பைரூஸ் மற்றும் 19 வயதான ஆர்.பசீர் ரமீஸ் ஆகியோர் காணாமற்போயுள்ளனர்.

காணாமற்போன இருவரையும் தேடும் நடவடிக்கைள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்துவதற்காக அவர்கள் திட்டமிட்ட வகையில் இவ்வாறு எதிர்ப்பை வௌிப்படுத்தியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவ்விடத்துக்கு பொலிஸார், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றதையடுத்து, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

20190129_105952 20190129_110411

IMG-20190129-WA0003 IMG-20190129-WA0006

Web Design by The Design Lanka