உங்கள் சேவைக்காக தலை வணங்குகின்றோம்; ஓரு முஸ்லிமுக்காக தமிழ் சகோதரர் இட்ட பதிவு (கட்டாயம் வாசியுங்கள் » Sri Lanka Muslim

உங்கள் சேவைக்காக தலை வணங்குகின்றோம்; ஓரு முஸ்லிமுக்காக தமிழ் சகோதரர் இட்ட பதிவு (கட்டாயம் வாசியுங்கள்

IMG_5893

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Theebakanthan Mayura


திருகோணமலை பொதுவைத்தியசாலை நோயாளர் விடுதியில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிடை செய்யும் இவர் ஏன் தினமும் வருகிறார் என்று கேட்டேன்.

ஆச்சர்யம்: கடந்த இரண்டரை வருடங்களாக தினமும் வருவதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறினார்கள்.

தற்போது தேசிய நீர்வழங்கள், வடிகாலமைப்புச் சபையில் பணிபுரியும்  ஜமால்தீன் மொகமட் ராசிக். 1978-79 களில் இடியப்பம் விற்று தனது குடும்ப வறுமையைப் போக்கிய இவர், இன்று தனது உழைப்பில் ஒரு பகுதியை நோயாளர்களுக்காக ஒதுக்கியுள்ளார்.

தினமும் காலை 7.00 முதல் 8.00 மணிவரை நோயாளர்களுக்கு சேவை செய்வதற்காவே நேரத்தை ஒதுக்கி, அந்நேரத்தில் வேறு எந்த விடயத்திலும் ஈடுபடாதவர்.

நோயாளர்களை பார்வையிடும் காலை வேளையில் இவரை ஏதாவதொரு விடுதியில் நிச்சயம் காணலாம். தான் சந்திக்கும் நோயாளர்களுடன் அன்பாக நலன் விசாரித்து, ஆறுதல்கூறி, இயலாமையிலுள்ள உதவியின்றி தவிக்கும் நோயாளர்களுக்கு உடைமாற்ற,மலசலகூடம் செல்ல உதவிசெய்தும், குளிப்பாட்டியும் இருக்கிறார்.

கையில் பணமின்றி இருக்கும் பலருக்கு தேனீர், காலை உணவு போன்றவற்றை தானே சென்று வாங்கிவந்து கொடுப்பார்.

இவர் செய்வது சாதாரணமாக ஓர் உறவினர் செய்யும் பணிவிடை போன்றே இருக்கும். மாற்று உடையின்றி அவதியுறுவோருக்குத் தனது செலவிலும் நன்கொடையாகப் பெறப்படும் வகையிலும் பலநூறு நோயாளர்களுக்கு சாறம் கொடுத்து உதவியுள்ளார்.

நோயாளர்களுக்கு செய்யும் சேவையை இறைவன் தனக்களித்த கடமையாக கூறும் இவர் 2017 மார்கழி 25 ம் திகதி ஒரு பாரிய வாகன விபத்தொன்றில் சிக்கிய போதும் சிதைந்த வாகனத்துள் சிறுகாயங்களின்றி மீண்டதை ஆச்சரியத்துடன் நினைவுபடுத்தும் இவர் தன்னை மனதாற வாழ்த்திய உள்ளங்களின் அன்புதான் இன்று தான் உயிர்வாழ காரணம் என்றார்.

வருடத்தின் ஒரு நாள் கூட தொய்வின்றி தனது சமூகப்பணியைச் செய்யும் இவர் கடமை நிமித்தமோ வேறு விடயத்திற்காகவோ வெளியூர் சென்றால்கூட தனது சேவையை தற்காலிகமாகவேனும் நிறுத்தியதில்லை.
யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு, காத்தான்குடி, கலேவெல போன்ற இடங்களிலும் தனது சேவையை தொடர்ந்தார்.

சேவை, சமூகப்பணி என்று மார்தட்டிகொள்ளும் பலரின் மத்தியிலே தனி ஒருவனாக செய்யும் இவரின் கடமை இமயத்திலும் பெரியது.

இன, மத பேதமின்றி என்றுமே தனது மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தாத சிறந்த சேவையாளர்.

இவர் போன்ற முன்னுதாரண மனிதரை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.

இவரின் புகைப்படத்தை எடுக்க கேட்டபோது முதலில் மறுத்துவிட்டார், உங்களை போன்று சமூகப்பணி செய்ய உங்கள் சேவை முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதற்காக உங்களை சமுதாயம் காணவேண்டும் என்று கூறிய பின்னே அனுமதித்தார்.

ஐயா உங்கள் சேவைக்காக தலை வணங்குகின்றோம். நீண்டகாலம் வாழ்ந்து உங்களைப் போன்ற சேவையாளர்கள் உருவாக உந்துசக்கியாக நீங்கள் திகழ வேண்டும்.

IMG_5893

Web Design by The Design Lanka