சுபஹு தொழாமல் இன்றைய நாளை துவங்கி விடாதீர்கள் » Sri Lanka Muslim

சுபஹு தொழாமல் இன்றைய நாளை துவங்கி விடாதீர்கள்

pray6

Contributors
author image

Dr. Inamullah Masihudeen

முதலில் எனக்கும், எனது உடன்பிறப்புக்கள், மனைவி மக்களுக்கும் மற்றும் சந்ததிகளுக்கும் சொல்லுகின்ற வஸிய்யத்துக்களையே நட்பு வட்டத்திலுள்ள உறவுகளிற்கும் சொல்லுகின்றேன்.

ஆழமான இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கே வாழ்வில் உண்மையான தன்னம்பிக்கை இருக்க முடியும்.

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடுமை ஆன்மீக வறுமை.

ஆன்மீக பண்பாட்டுப் பயிற்ச்சி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது றப்பிற்கும் இடையே உள்ள அந்தரங்கமான உறவின் வலிமையில் தங்கியுள்ளது.

எந்த ஒரு ஆன்மாவும் பரிபூரணமான உயர்நிலையை ஓரே எடுப்பில் அடைந்து விடுவதில்லை, பக்குவமும், முதிர்ச்சியும் காலவோட்டதில் அடையப் பெறுபவை.

தொடர்ந்தேர்ச்சியான முயற்ச்சியும், அன்றாட சுயவிசாரணையும் ஆன்மீக படிநிலைகளில் உண்மை விசுவாசிகளை உயர்வடையச் செய்கிகிறன.

அல்லாஹ்வுடனான உறவு அடியார்களுடனான உறவுகளை சீர் செய்கின்றது, அடியார்களுடனான உறவு நெறி தவறுகின்ற பொழுது மனிதன் ஈருலக வாழ்விலும் தோல்வி அடைகின்றான்.

எமது நாவும் நடத்தைகளும் எங்களை ஆளுகின்றன, எம்மிடமிருந்து புறப்படும் சொல் செயல் அங்கீகாரங்கள் எங்களது வாழ்வில் பிரதி விளைவுகளுடன், எதிர் வினைகளுடன் மீண்டு வந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.

வாழ்க்கை ஓரு இபாதத் ஆகும், அதனை அல்லாஹ் விரும்பிய படி வாழ நிய்யத் வைத்துக் கொள்வது கடமையாகும்.

எமது வணக்க வழிபாடுகள் தினமும் எங்களை புடம் போட்டு புதுப்பித்து எமது நம்பிக்கைக் கோட்பாடுகளை அமுலாக்கங்களாக, பிரயோகங்களாக வாழ்வில் மிளிரச் செய்கின்றன.

எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள், ஐவேளையும் தொழுகையை உணர்வு பூர்வமாக நிதானமாக திருப்திகரமாக நிறைவேற்றுங்கள்.

எப்போதாவது திருந்தி வாழ்வோம் என்றெண்ணி பொடுபோக்காக இருந்து விடாதீர்கள், தொழுகை எங்களை திருந்தி வாழச் செய்யும், குறை குற்றங்களுக்கு மன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள்.

இன்றைய பொழுது புலர்ந்திருக்கிறது, நாளைய பொழுது உத்தரவாதமற்றது, சுபஹு தொழாமல் இன்றைய நாளை துவங்கி விடாதீர்கள்.

எமது தொழுகையும், எமது ஒதலும், எமது நற்கருமங்களும், எமது பண்பாடுகளும் எமது மறுமை வாழ்வை மாத்திரமன்றி இன்மை வாழ்வையும் வசந்தமாக்குகின்றன.

அல்லாஹ் அல்லாத எவராலும் எதனாலும் எமது ஈருலக வாழ்வு குறித்த எந்த உத்தரவாதத்தையும் தரவே முடியாது.

யா அல்லாஹ் எங்கள் பாவங்களை, குற்றம் குறைகளை மன்னித்து உன்னை தொழுது வழிபட்டு நல்லடியார்களாக வாழ எமக்கும் எமது அன்பிற்குரியோர் அனைவருக்கும் அருள் புரிவாயாக.

யா அல்லாஹ், எங்கள் பெற்றார்கள் உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவுகள் அனைவர் பாவங்களையும் மன்னித்து கருணை கொண்டு ஈருலக ஈடேற்றத்தையும் சௌபாக்யங்களையும், சம்பத்துக்களையும் அருள்வாயாக.

Web Design by The Design Lanka