வரலாற்றில் இடம்பிடிக்க போகும் மனிதாபிமானத்திற்கான மீட்பு பணி » Sri Lanka Muslim

வரலாற்றில் இடம்பிடிக்க போகும் மனிதாபிமானத்திற்கான மீட்பு பணி

IMG_5917

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Dilshan Mohamed


நடந்து வரும் காற்பந்து உலககோப்பையில் விளையாடும் அணிகளுக்கு நிகராக உலகத்தின் அனைத்து மக்களும் அவதானித்து கொண்டிருக்கும் இன்னொரு நிகழ்வுதான் காற்பந்து விளையாட போய் விபரீதத்தை தேடிக்கொண்ட , தாய்லாந்தின் குகைக்குள் சிக்கியிருக்கும் 12 சிறுவர்களையும் ஒரு பயிற்றுவிப்பாளரையும் கொண்ட ஒரு அணி. பயிற்சிக்காக போனவர்கள் குகையை கண்டதும் விளையாட்டாக தங்களது பெயரை குகையின் சுவரில் பதிக்கபோனபோது ஏற்பட்ட சடுதியான மழையின் காரணமாக குகைக்குள் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பி பிழைக்க தொடர்ந்தும் பின்னோக்கி சென்றவர்கள் இறுதியாக கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் நீளமான குகையின் அடிவாரத்தில் சிக்கிக்கொண்டார்கள்.

கடுமையானதும் சிக்கல் நிறைத்த இந்த குகையில் சிக்கியிருக்கும் இந்த சிறுவர்களை மீட்பதற்காக உயிரை துச்சமென கருதி மீட்பு பணியாளர்கள் செய்யும் போராட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஏனெனில் :

⚠️ சிறுவர்கள் தற்போது ஒதுங்கியிருப்பது 800 மீட்டர் உயரமான ஒரு மலையின் அடிவாரம் என்பதால் தரையை துளைத்து இந்த சிறுவர்களை மீட்கமுடியாது.

⚠️ வெள்ளம் காரணமாக நீரால் முழுவதுமாக நிரம்பியிருக்கும் குகையின் மிக ஒடுங்கிய பாதை ஊடாக நீந்தி சுழியோடி சென்று( cave diving) அவர்கள் இருக்கும் இருக்கும் இடத்தை அடைந்து பின்னர் சிறுவர்களை மிகக்கவனமாக மீண்டும் அதே கடினமான பாதையூடாக நீந்தி மீளக்கொண்டு வருவதே இவர்களை மீட்பதற்கு இருக்கும் ஒரே வழி.

இது சொல்வதைபோல மிகவும் இலகுவான ஒன்றல்ல.

காரணம்

▶️குகையின் விட்டம் சில இடங்களில் ஒருவர் மட்டுமே போகும் அளவுக்கு மிகவும் ஒடுங்கலானது

▶️ஒரு குறிப்பிட்ட இடத்தில் குகை தலைகீழான “ V” வடிவத்தில் கூர்கோணமாக இருப்பதால் அந்த குறிப்பிட்ட இடத்தில் செங்குத்தாக நீருக்குள் சுழியோடி தனியே ஏறி இறங்குவதே சவாலானது. இதற்கிடையில் இந்த சிறுவர்களையும் தாங்கிக்கொண்டு சுழியோடுவது மிகவும் கடினமானது .

▶️சிக்கியிருக்கும் எந்தவொரு சிறுவர்களுக்கும் நீந்த தெரியாது. அதுவும் சுழியோட்டம் அறவே முடியாது. ஆகவே முற்றுமுழுதாக மீட்பு பணியாளர்களின் உதவியுடனேயே நீருக்குள் இரண்டரை கிலோ மீட்டர்கள் அவர்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆகக்குறைந்தது இந்த சிறுவர்களின் உடல்நிலை மீட்பு பணியாளர்களுக்கு ஒத்துழைக்கவாவது வேண்டும். ஆனால் பல நாட்களாக உணவு இன்றி சக்தி இழந்திருக்கும் இந்த சிறுவர்களின் உடல் ஒத்துழைப்பு இன்றியே மீட்பு பணியாளர்கள் இவர்களை மீட்க வேண்டும்.

▶️மிகவும் ஒடுங்கலான, ஆழமான, நீரோட்டம் கூடிய பாதை என்பதால், குகையின் கற்கள் இடிந்து போகவோ அல்லது இடைவழியில் ஒக்சிஜன் இல்லாமல் போகும் அபாயங்கள் அதிகம் இருக்கிறது.

▶️ மெதுமெதுவாக குகை வாசலில் இருந்து ஒருமுறை நீந்தி சுழியோடி சென்று அதே இடத்தை மீள அடைவதற்கு மீட்பு பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட பத்து மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றன.

இவ்வாறன சவால்களையும் ஆபத்துக்களையும் எதிர்கொண்டு உலகம் முழுவதும் இருக்கும் சிறந்த சுழியோடிகள் கிட்டத்தட்ட நூறுபேர் எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் இரவு பகலாக சிறுவர்களை மீட்பதற்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் இந்த சுழியோடி மீட்புக்குழுவின் மிகவும் திறமையான ஒருவர் இடைவெளியில் ஒக்சிஜன் இல்லாமல் உயிர்துறந்திருக்கிறார். ஆனாலும் சளைக்காமல் எப்படியாவது இந்த சிறுவர்களை காப்பாற்றியே ஆகுவோம் என்ற உறுதியில் ஏனைய மீட்பாளர்கள் இதுவரை எட்டு சிறுவர்களை குகையில் இருந்து மீட்டிருக்கிறார்கள். Hats Off to them.

மனிதாபிமானத்திற்கான இந்த மீட்பு பணியும் , இந்த மீட்பு பணியார்களும் வரலாற்றில் இடம்பிடிக்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதியானது.

IMG_5917

Web Design by The Design Lanka