ஒரு மரணத்தில் இழையோடும் துயரம் » Sri Lanka Muslim

ஒரு மரணத்தில் இழையோடும் துயரம்

kumarathurai (2)

Contributors
author image

S.M.M.பஷீர் 

ஒரு மரணத்தில் இழையோடும் துயரம் : திரு. அருணாசலம் குமாரதுரையின் ( பிறப்பு: 25.05.39 மறைவு: 23.01.2019) மறைவு குறித்து மனதில் பட்டவை.
எஸ்.எம்.எம்.பஷீர்


“உங்கள் வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் உஙக்ளின் உலகத்தை மாற்றிக்கொள்ளலாம் … நினைவிருக்கிறதா, மரணம் மற்றும் வாழ்க்கை நாக்குகளின் சக்தியாக இருக்கின்றன.” ( ஜோயல் ஒஸ்டீன் )

சென்ற 23 ஆம் திகதி தை மாதம் 2019 ஆம் ஆண்டு தனது எழுபத்தொன்பதாவது வயதில் டென்மார்க்கில் காலமான திரு. அருணாசலம் குமாரதுரை அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட நினைவுகளுடன் எனது துயரத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அவரின் இழப்புக் குறித்து நான் தனிப்பட்ட வகையில் மிகுந்த துயரமடைகிறேன். ஒரு அரசியல் ஆய்வாளர் என்ற வகையில் துணிச்சலாக , துல்லியமான புள்ளிவிபரங்களுடனான தனது பக்க நியாயங்களை முன்வைத்து கருத்தாடல் செய்து ஐரோப்பா மட்டுமல்ல மத்திய கிழக்கிலும் ஒரு புதிய அரசியல் சிந்தனை வீச்சினை ஏற்படுத்தியவர் திரு. அருணாசலம் குமாரதுரை. இன்றும் அவரின் மறைவு கேட்டதும் பலரின் காதுகளில்அவரின் குரல் ரீங்காரமிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவரின் பிசிரில்லாத குரலும் ,அவரின் ஆணித்தரமான வாதங்களும் அவரின் தன்னிகரற்ற அடையாளங்களாக திகழ்ந்தன.

எனது அரசியல் சமூக செயற்பாடுகளின் நீட்சியாக புலம்பெயர் தேசத்தில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தினூடே பயணிக்க நேரிட்ட பொழுது திரு. அருணாசலம் குமாரதுரை அவர்களுடனான அறிமுகம் எனக்கு கிடைத்தது , வக்கற்றவர்களின் விமர்சனங்களின் வக்கிரங்களை , வன்முறையாளர்களின் வரம்புமீறல்களை அச்சமின்றி துச்சமாக எதிர்கொள்ளும் அவரின் ஆளுமை என்னை ஆகர்ஷித்தது. சமரசம் செய்துகொள்ளாத கொள்கை பற்று என்னையும் அவருடன் அவரின் இறுதி நிகழ்வு வரை இணைத்து வைத்தது, இடைக்காலத்தில் பயணித்த பலரின் வேஷங்கள் காலகதியில் கலைந்து போனது. செல்வாக்குக்கும் , செல்வத்துக்கும் சரியாத சந்தர்ப்பவாத சாயம் பூசாத அவரின் குன்றையொத்த கொள்கை உறுதி என்னைக் கவர்ந்தது. அதனால்தான் புலம் பெயர் தமிழ் அரசியல் நட்புக்கள் ,அந்நியோன்யங்களை அனைத்தும் அற்றுப்போன நிலையிலும் திரு. அருணாசலம் குமாரதுரையுடனான எனது உறவு நிலைத்தது.

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்த திறனுமின்றி வஞ்சனை செய்வாராடி” என்று பாரதி அங்கலாய்த்த அரசியல் அங்காடிகள் பலரின் அவலட்சணங்களை நாங்கள் இருவரும் எதிர்கொண்டுள்ளோம். அப்பொழுதெல்லாம் அவரின் வயதோடு இயைந்துவந்த அனுபவத்தின் ஊடான ஆறுதலளிக்கும் வார்த்தைகள் என்னை ஆசுவாசப்படுத்தி உள்ளது. அவர் மரணிக்க ஒரு வாரத்துக்கு முன்னர் அவரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடன் வீட்டுக்கு வந்ததும் மீண்டும் அழைக்கிறேன் என்று கூறி விடைபெற்ற பின்னர் , அவர் வீடு திரும்பி ஓரு நாட்களின் பின்னர் இவ்வுலகை விட்டு விடைபெற்று விட்டார் என்ற செய்தி என்னை துயரத்தில் ஆழ்த்தியது .

சில மாதங்களுக்கு முன்னரே எனக்கு நன்கு நெருக்கமான மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாக வதியும் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள இளம் யுவதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நாங்கள் உதவிய வேளையில் திரு . குமாரதுரையும் முன்வந்து ஒரு பெரிய தொகையை அப்பெண்மணிக்கு வழங்கினார். தர்மத்திலும் அவர் பெயர் பெற்றவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஜனநாயக குரல் உலகெங்கும் உழைக்கும் பணியில் வானொலி ஒன்றிற்கு பாரிய நிதி உதவிகளை செய்துள்ளார் என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் “நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நான் உதவுகிறேன்” என்று அடுத்த கேள்வி கேட்காமல் உதவிய அந்தக் குரல் தர்மத்தின் குரலன்றி வேறன்ன.! . “குமாரபுரம்” அவரின் பரோபகாரத்தின் பலன்களை பவ்வியமாக பல தலைமுறைக்கும் பறைசாற்றும்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்து வாழ்ந்த பொழுதும் திரு. அருணாசலம் குமாரதுரை கிழக்கு மாகாணத்தின் ஒரு ஆதர்சன புருஷராகவே திகழ்ந்தார். அவரின் குடும்பத்தினர் கிளிவெட்டியில் உருவாக்கிய “குமாரபுரம்” அவரினதும் , அவரின் குடும்பத்தினரதும் சமூகப் பணிகளை இன்றும் பறை சாற்றுகின்றன. ஐரோப்பாவில்அன்னாரின் ஜனநாயக தர்க்க ரீதியான கருத்துப்பரிமாற்றங்கள் அரசியல் செயற்பாடுகள், குறுகிய இனவாத அரசியல் சித்தாந்தங்களை கேள்விக்குட்படுத்தும் நடைமுறைகள் அவர் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வழிமுறையாகும்.

இந்தப் பின்புலத்தில், அவருடன் தொடர்புட்ட அந்த வரலாற்று நிகழ்வு எனது ஞாபகத்துக்கு வருகிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் , அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழ் அரசியல் வரலாற்றில் ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 11-11-2006-12-11-2006 ஆம் திகதிகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் பேசும் மக்களின் வெளிப்படையான இன மொழி அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி உள்ளார்ந்த சாதி, மத, பிரதேச வேறுபாடுகளை , ஒற்றைப்பரிமான தமிழ் தேசியவாத கோட்பாடுகளின் சூழ்ச்சியினால் மறுக்கப்படுகின்றதும் மறைக்கப்படுகின்றதுமான அடையாளங்களை , வலிந்து அரசியல் கோஷங்களுடன் திணிக்கப்பட்ட பண்பாட்டு உளவியல் தேசிய உருவாக்கங்களை , முதன் முதலில் கேள்விக்குட்படுத்திய ஒரு பகிரங்க நிகழ்வு அது என்றால் மிகையாகாது. கிழக்கு மாகாணம் வடக்கிலிருந்து பிரியவேண்டும் என்ற முன் மொழியினை அருணாசலம் குமாரதுரை முன் மொழிந்து பாரிய கருத்துக் சமரை எதிர்கொண்ட ஜனநாயகக் களம் அதுவாகும். அவ்வரங்கில்தான் கிழக்கின் தனித்துவம் பற்றிய சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்று அம்சங்களை முன்னிறுத்தி கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எம்.ஆர். ஸ்டாலின் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்து உரை நிகழ்தினார் என்பதும் அவ்வறிக்கை குமாரதுரையின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தது. அந்த நிகழ்வினைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை குமாரதுரை எதிர்கொண்ட பாங்கு அவரின் இறுதி வரையான அரசியல் அடையாளமாகவே நிலை கொண்டது.

மேலும் அம்மாநாட்டில்தான் பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யினர் தலித் மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூக உரிமைகள் தனித்துவமாக பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓர் அரசியல் அறிக்கையையும் அவ்வரங்கில் சமர்ப்பித்தனர்.

தனது வாழ்நாளில் எப்படியும் தனது அரசியல் அனுபவங்களை , தனது அனுமானங்களை எழுத்தாக்கிவிட வேண்டும் என்ற அவரின் வேணவாவை , “அரசியல் வரலாறு : இழப்புக்களும் பதிவுகளும் ” என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில வருடங்களுக்கு முன்னர் நூலாக வெளிக் கொண்டுவந்தார். அந்நூலை அவரின் சகோதரர் மறைந்த முன்னாள் மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அ. தங்கத்துரைக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.

இலங்கை அரசியலில் மாற்று அரசியல் கருத்தாக்கத்திற்கு ஒரு புதிய வீச்சினை அவை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒரு சாமான்ய மனிதரின் அரசியல் அனுபவங்களின் அசைக்க முடியாத நம்பிக்கைகளின் அவதானங்கள் அவை. அவரின் அரசியல் நிலைப்பாடு கிழக்கின் தனித்துவ அரசியலை அடிநாதமாகக் கொண்டது என்பதால் அவர் பின்னாளில் கிழக்கின் தமிழ் மக்களின் தனித்துவ அரசியல் கடசியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஆதரித்தார். கிழக்கின் அரசியல் தனித்துவம் குறித்த அவரின் சிந்தனைகளுடன் கிழக்கின் முஸ்லீம் அரசியல் குறித்த நிலைப்பாடுகளுடன் நாங்கள் இருவரையும் பரஸ்பர புரிந்துணர்வுடன் நெருக்கமாக பயணிக்க நேர்ந்தது.

கிழக்கு மாகாணத்தை , அதன் தனித்துவத்தை நிலைநிறுத்த போராடிய ஒரு குரல் ஓய்ந்துவிட்டது என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது இலங்கை “அரசியல் வரலாறு -இழப்புக்களும் பதிவுகளும் ” எனும் நூலில் அவரின் சில அத்தியாயங்களின் தலைப்புக்கள் ” விடுதலைப் புலிகளின் தாயகக் கோட்பாட்டிலிருந்து தனியாகப் பிரியும் கிழக்கின் விடுதலை ” , “கிழக்கின் சுயாட்சி ,தனித்துவம் , அரசியல் அதிகாரம்” என்பன அவரது அரசியல் நிலைப்பாட்டை துல்லியமாகவே பிரதிபலிக்கின்றன.

அவரின் நட்பு கிடைத்திருக்காவிட்டால் நேர்மையும் நெஞ்சுறுதியும் , நெகிழ்வுறாக் கொள்கை பற்றுறுதியும் , நிலைக்களனாகக் கொண்ட ஒரு சிறந்த மனிதரை நான் என்வாழ்வில் இழந்திருப்பேன் என்று திடமாக நம்புகிறேன். அவருடன் பழகிய பொழுதுகள் எனது நினைவில் என்றும் நீங்காதவை. அவருடன் இலங்கை ஜெர்மனி , பிரான்ஸ் என்று அரசியல் பணிகளில் பயணித்த அனுபவங்கள் நினைவில் நிறைந்தவை. தாய் நாட்டிலே ஒரு அரசியல் போராட்ட வரலாற்றை கொண்ட , அதற்காக சிறை சென்றுசொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து, புலம்பெயர்ந்த நாட்டில் கால் பதித்து, நல்ல மனைவி நல்ல பிள்ளைகள் என ஒரு “பல்கலைக்கழகத்தை” உருவாக்கி , தான் கொண்ட கொள்கையில் விட்டுக்கொடுக்காத கொள்கைப் பற்றுறுதி கொண்டவராக வாழ்ந்து இன்று எம்மை விட்டு மறைந்தாலும் அவரின் பெயர் அவர் தனது நூலிலே ” உண்மை மௌனிப்பதுண்டு மரணிப்பதில்லை” என்று குறிப்பிடுவது போலவே அவரின் உண்மையான கருத்துக்களும் மரணிக்காது என்று நம்புகிறேன்.

Web Design by The Design Lanka