இலங்கை அணிக்கு பெரும் சவாலாக அமையப்போகும் தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடர் » Sri Lanka Muslim

இலங்கை அணிக்கு பெரும் சவாலாக அமையப்போகும் தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடர்

cri

Contributors
author image

S.M.Aroos

கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிளிலும், ஒரு T20 போட்டியிலும் விளையாடவுள்ளது.

அதிலும் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடர் நாளை காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இலங்கை அணியின் பெறுபேறுகள் நல்ல நிலையில் இல்லாதபோதும் அண்மையில் நிறை’வு பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் முதலாவது போட்டியில் தோல்வியடைந்தபோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சவால் மிக்கதான வெற்றியை பெற்றதன் மூலம் இலங்கை அணிக்கு பெரும் தெம்மை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தென் ஆபிரிக்க அணியுடனான சவால் மிக்க டெஸ்ட் தொடரை இலங்கை அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது. மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான தொடரில் இரண்டாவது போட்டியில் விளையாடாமல் நாடு திரும்பிய அஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் காயத்தினால் தொடரில் முழுமையாக இடம்பெற்றிராத திமுத் கருணாரத்ன இருவரும் அணிக்கு திரும்பியிருப்பது இன்னும் பலம் சேர்த்திருப்பதாக நம்பலாம்.

குறிப்பாக காலி சர்வதேச மைதானம் இலங்கைக்கு ராசியான மைதானம் என்று கூட அழைக்கப்படுவதுண்டு. அந்த மைதானத்தில் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கின்றது. தென் ஆபிரிக்க அணி ஒரு டெஸ்ட் போட்டியில் இம்மைதானத்தில் வென்றுள்ளது.

இலங்கை தென்ஆபிரிக்க கிரிக்கெட் தொடர்கள் சர்வதேச அளவில் பேசப்படுகின்ற ஒரு தொடராகக் காணப்படுகின்றது. தென்ஆபிரிக்க அணியிலும், இலங்கை அணியிலும் உலகின் மிகச்சிறந்த வீரா்கள் கடந்த காலங்களில் விளையாடியிருந்தனர்.

இலங்கை அணியில் அர்ஜூனா ரணதுங்க, அரவிந்த டி சில்வா,சனத் ஜெயசூரிய, மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார, மார்வன் அத்தப்பத்து, ஹசான் திலகரத்ன சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், லசித் மாலிங்க மற்றும் இன்னும் பல வீரா்கள் இடம்பெற்று விளையாடியிருந்தனர்.

அதேபோன்று தென்ஆபிரிக்க அணியில் கெப்லர் வெசல்ஸ், டெரல் கலினன், ஜெக்கப் கலீஸ்,அன்ட்று ஹட்சன், கென்ஸி குரோஞ், ஸ்மித்,மெக் மில்லன், ஜொன்டி ரோஸ்ட்ஸ்,சோன் பொலக், அலன் டொனால்ட், பிரட் சூல்ஸ், குளுஸ்னர், மகாயா நிட்னி மற்றும் இன்னும் பல வீரா்களும் இடம்பெற்று விளையாடியிருந்தனர்.

வேகப்பந்துவீச்சில் தென்ஆபிரிக்க அணியும், சூழல் பந்துவீச்சில் இலங்கை அணியும் தங்களது உச்ச திறமையை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு சிறந்த போட்டிகளை வழங்கினர்.

தென்ஆபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளராக செயல்பட்ட பிரட் சூல்ட்ஸ் இலங்கை வீரா்கள் சிலரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்று கூட சொல்லலாம். குறிப்பாக இன்றைய இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துறுசிங்க, மற்றும் ரொசான் மகாநாம போன்றவர்களை தொடரில் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

துலிப் சமரவீர இலங்கை அணிக்கு ஹத்துறுசிங்கவுக்குப் பதிலாகவே உள்வாங்கப்பட்டமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

இவ்வாறான உலகப் புகழ்பெற்ற வீரா்கள் விளையாடிய இலங்கை தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடர் இம்முறையும் களை கட்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அணியில் தினேஸ் சந்திமால், அஞ்சலோ மெத்தியுஸ், குசால் மென்டிஸ், ரொசேன் சில்வா, திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, லஹிறு குமார,சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் போன்ற சிறந்த வீரா்களும், தென்ஆபிரிக்க அணியில் டு பிளஸ்ஸிஸ், ஹாஸிம் அம்லா, குயிண்டன், டெல் ஸ்டெயின்,டெம்பா குயிமா,தப்ரெஸ் சம்ஸி போன்ற சிறந்த வீரா்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதால் போட்டியின் விருவிருப்பை ரசிகர்கள் காணலாம்.

1993ம் ஆண்டு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு முதன் முதலாக இலங்கைக்கு வருகை தந்த தென் ஆபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதலாவது போட்டி மொரட்டுவ டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி முதலாவது இன்னிங்ஸில் 267 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் முரளிதரன் 104 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதில் அணித்தலைவர் அர்ஜூனா ரணதுங்க வேகமாக துடுப்பெடுத்தாடி 131 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

வெற்றி பெறுவதற்கு 365 ஓட்டங்களைப் பெறத் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி ஒரு கட்டத்தில் 199 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்திருந்தது.

நிச்சயமாக இலங்கை அணி வெற்றி பெறும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் ஜொன்டி றோட்ஸ் தன்னுடைய திறமையான, நிதானமான, விவேகமான துடுப்பாட்டத்தின் மூலம் தனது முதலாவது டெஸ்ட் சதத்தினைப் பெற்றுக் கொண்டதோடு கடைநிலை வீரரான கிளைவ் எக்ஸ்டினுடன் 3 மணித்தியாலயங்கள் தரித்து நின்று போட்டியை வெற்றி தோல்வியின் முடிவடையச் செய்தார்.

இத்தொடரின் இரண்டாவது போட்டி எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் மிக மோசமாக விளையாடிய இலங்கை அணி 208 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

தென்ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சுப் புயல் பிரட் சூல்ஸ் சிறப்பாகப் பந்துவீசி இலங்கை வீரா்களை திக்குமுக்காடச் செய்ததுடன் கூடுதல் விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.

மூன்றாவது போட்டி பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டு வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

அதன் பின்னர் 1998ம் ஆண்டு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு தென்ஆபிரிக்கா சென்ற இலங்கை கிரிக்கெட் அணி அங்கு இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

மார்ச் 19 தொடக்கம் 23 வரை கேப்டவுனில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 70 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இலங்கை முதல் இன்னிங்ஸில் 306, இரண்டாவது இன்னிங்ஸில் 306 ஓட்டங்களைப் பெற்றது.

தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 418, இரண்டாவது இன்னிங்ஸில் 264 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இடம்பெற்றபோது தென்ஆபிரிக்க அணியைவிட இலங்கை அணி 103 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றிருந்தபோதும் இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தளவு ஓட்டங்களை இலங்கை அணி பெற்றதால் 6 விக்கட்டுக்களினால் தென்ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது.

இலங்கை முதல் இன்னிங்ஸில் 303, இரண்டாவது இன்னிங்ஸில் 122 ஓட்டங்களைப் பெற்றது. தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 200, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. இத்தொடரை 2 -0 என்ற கணக்கில் தென்ஆபிரிக்க அணி வெற்றி கொண்டது.

1993ம்; ஆண்டு இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரிலும், 1998ம் ஆண்டு தென்ஆபிரிக்காவில் நடந்த தொடரிலும், தோல்வியடைந்த இலங்கை அணி மூன்றாவது தடவையாகவும் டெஸ்ட் தொடரை தோற்கக் கூடாது என்று கங்கணம் கட்டியது.

2000ம் ஆண்டு ஜூலை மாதமளவில் இலங்கை வந்த தென்ஆபிரிக்க அணியினர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டனர். இலங்கை அணிக்கு சனத் ஜெயசூர்யவும், தென்ஆபிரிக்க அணிக்கு சோன் பொலக்கும் தலைமை தாங்கினர்.

முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 522 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 238 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 269 ஓட்டங்களையும் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களினால் இலங்கையிடம் தோல்வி கண்டது.

இந்த வெற்றி இலங்கை அணிக்கு முதற்தடவையாக தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டியில் வெற்றி கொள்ளும் சந்தர்ப்பமாக அமைந்தது.

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்களைப் பெற்றது. இதில் லான்ஸ் குளுஸ்னர் ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் முத்தையா முரளிதரன் 87 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இலங்கை முதல் இன்னிங்ஸில் 308 ஓட்டங்களைப் பெற்றது. தென்ஆபிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 231 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. முரளிதரன் 84 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

வெற்றி பெறுவதற்கு 177 ஓட்டங்களைப் பெறவேண்டிய இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 169 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் 7 ஓட்டத்தினால் பரிதாபத்துக்குரிய தோல்வியினை இலங்கை அடைந்தது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாதளவில் மீண்டும் தென்ஆபிரிக்காவுக்கு சுற்றுலா சென்று மூன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி விளையாடியது.

டிசம்பர் 26 தொடக்கம் 30 வரை டேர்பனில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடிய போதிலும் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

2001ம் ஆண்டு ஜனவரி 2 தொடக்கம் 4 வரை கேப்டவுனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 229 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

தென்ஆபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கட்டுக்களை இழந்து 504 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 95 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 180 ஓட்டங்களையும் பெற்று தோல்வியடைந்தது.

செஞ்ரியன் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 2 -0 என்ற கணக்கில் வென்றது.

2002 மற்றும் 2003 கிரிக்கெட் பருவகாலத்திற்காக மீண்டும் தென்ஆபிரிக்கா சென்ற இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் 2002 நவம்பர் 8 -10 வரை ஜொகன்னஸ்பேர்க்கில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 15 -15 வரை செஞ்சுரியன் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் தென்ஆபிரிக்க அணி 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 323 ஓட்ங்கள், இரண்டாவது இன்னி்ஙஸ் 245 ஓட்டங்கள், தென்ஆபிரிக்க அணி முதல் இன்னிங்ஸ் 448 ஓட்டங்கள், இரண்டாவது இன்னிங்ஸ் 7 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றனர். இந்தத் தொடரையும் தென்ஆபிரிக்க அணி 2 -0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

2004ம் ஆண்டு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை வந்த தென்ஆபிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இரண்டு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடிய போதிலும் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இ.லங்கை அணி 313 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை முதல் இன்னிங்ஸ் 470, இரண்டாவது இன்னிங்ஸ் 211, தென்ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸ் 189, இரண்டாவது இன்னிங்ஸ் 179 ஓட்டங்கள் பெற்றனர். இத்தொடரில் இலங்கை அணி 1 -0 என்ற கணக்கில் தொடரை வெற்றி கொண்டது.

2006ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு வருகை தந்த தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

.இதன் முதலாவது போட்டி கொழும்பு எஸ்.எஸ்.எஸி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் .இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 153 ஓட்டங்களினால் வரலாற்று வெற்றியைப் பெற்றதுடன் மஹேல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் 624 ஓட்டங்கள் என்ற வரலாற்று சாதனை இணைப்பாட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி 5 விக்கட்டுக்களை இழந்து 756 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை .இடைநிறுத்திக் கொண்டது. இதில் மஹேல ஜெயவர்த்தன 374 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 287 ஓட்டங்களையும் பெற்றமை சிறப்பம்சமாகும்.

இதில் தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 169 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 434 ஓட்டங்களையும் பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 1 விக்கட்டினால் சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

இதில் தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 361 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 311 ஓட்டங்களையும் பெற்றது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 321 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்று ஒரு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் நடசத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்த்தன வேகமாகவும், நிதானமாகவும் துடுப்பெடுத்தாடி 123 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வழிகோலினார்.

இந்த வெற்றி மூலம் இலங்கை அணி தொடரை 2 -0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி கொண்டது..

2011 மற்றும் 2012 கிரிக்கெட் பருவகாலத்திற்காக தென்ஆபிரிக்கா சென்ற இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் செஞ்சுரியன் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் தென்ஆபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 81 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி டேர்பனில் 2011 டிசம்பர் 29 -29 வரை இடம்பெற்றது. இதில் இலங்கை அணி 208 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு இவ்வெற்றி அந்த சந்தர்ப்பத்தில் மிக முக்கியமாகக் காணப்பட்டது.

மூன்றாவது போட்டி 2012 ஜனவரி 3 -6 வரை கேப்டவுனில் இடம்பெற்றது. இதில் தென் ஆபிரிக்க அணி 10 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இத்தொடரை தென் ஆபிரிக்க அணி 2 -1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது.

2014ம் ஆண்டு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை வந்த தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் காலி சர்வதேச மைதானதத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 153 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடிய போதிலும் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

தென்ஆபிரிக்க அணி இத்தொடரை 1 -0 என்ற கணக்கில் வெற்றி கொண்டது.

2016 மற்றும் 2017 கிரிக்கெட் பருவகாலத்திற்காக தென்ஆபிரிக்கா சென்ற இ.லங்கை அணி அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றதுடன் இலங்கை அணி படுதோல்வியினை அடைந்தது.

தென் ஆபிரிக்க மண்ணில் அடைந்த தோல்விக்கு இலங்கை அணி சொந்த மண்ணில் 2018 இல் பதிலடி கொடுக்குமா? என்ற கேள்வி உள்ளது. சொந்த நாட்டில் நடைபெறுவதால் இலங்கை அணி உற்சாத்துடன் விளையாடலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துறுசிங்கவின் வழிநடத்தலிலும், பயிற்சியிலும் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடியளவில் இருப்பதாகவே ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றது. இலங்கை அணியின் அண்மைக்கால சரிவை ஈடு செய்வதற்கு தென்ஆபிரிக்க அணிக்கெதிரான இந்தத் தொடர் மிக முக்கியமாகவுள்ளது.

இதுவரை இலங்கை தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையில் 25 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளது. இதில் 14 போட்டிகளில் தென் ஆபிரிக்க அணியும், 5 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளனர். 6 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இலங்கை தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பாக மஹேல ஜெயவர்த்தன 1782 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். தென் ஆபிரிக்க அணி சார்பாக டெரல் கலினன் 917 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் இலங்கை சார்பாக முத்தையா முரளிதரன் 104 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். தென் ஆபிரிக்க அணியின் சார்பாக சோன் பொலக் 48 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

நாளைய போட்டியில் தென் ஆபிரிக்க அணியின் முதுகெழும்பாக வர்ணிக்கப்பட்ட ஏ.பி.டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்ற நிலையில் இடம்பெறுகின்ற போட்டியாகும். அந்த அணியில் சிறந்த இளம் வீரா்கள் பலரும் இடம்பெறுகின்றனர். குறிப்பாக ரன் மெசின் என்று சொல்லப்படும் ஹஸீம் அம்லாவின் மேல் தென் ஆபிரிக்க அணி பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் நாளை இடம்பெறும் போட்டி இலங்கை அணியின் மீள் எழுச்சிக்கு வழிசமைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Web Design by The Design Lanka