அணு ஆயுத ஒப்பந்தம்: புதிய ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா திட்டம் » Sri Lanka Muslim

அணு ஆயுத ஒப்பந்தம்: புதிய ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா திட்டம்

putin

Contributors
author image

BBC

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் ரத்தானதை தொடர்ந்து ரஷ்யா புதிய ஆணு ஆயுதத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நடுத்தர தொலைவு அணு ஆயுத உடன்படிக்கை எனப்படும், ஐஎன்எஃப் ஒப்பந்தம், நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூரத்தில் பாயும் ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை செய்கிறது.

கடந்த வாரம் ரஷ்யா அந்த ஒப்பந்தத்தை மீறுவதாக கூறி, அதிலிருந்து இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. உடனே ரஷ்யாவும் ஒப்பந்தத்திலிருந்து விலகியது.

இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு மத்தியிலும் ஒரு புதிய அணு ஆயுத போட்டியை ஏற்படுத்தியது குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு பனிப்போரின் போது கையெழுத்தானது. ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் அமெரிக்கா மற்றும் சோவியத்தின் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில் பதற்றத்தை தணிக்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

ரஷ்யா என்ன திட்டமிடுகிறது?

அமெரிக்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

“அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏவுகணை சார்ந்த புதிய நிலப்பரப்பை உண்டாக்குவதே எங்களின் கடமை” என ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷோகு தெரிவித்துள்ளார்.

ஐஎன்எஃப் ஒப்பந்தம்படி தரையில் தாக்கும் ஏவுகணைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடலில் மற்றும் வான்வழி தாக்குதல்கள் புரியும் ஏவுகணைகளுக்கு அனுமதி உண்டு. ரஷ்யாவிடம் அவை ஏற்கனவே உள்ளன.

“தரையில் 500கிமீ தூரம் வரை தாக்கும் ஏவுகணையை அமெரிக்கா ஏற்கனவே தயாரித்து வருகிறது. இவை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்கா ஒப்பந்த விதிகளை மீறிவிட்டது” என ஷோகு தெரிவித்துள்ளார்.

“இம்மாதிரியான சூழலில், அமெரிக்காவை பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள, பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று ஷோகு தெரிவித்தார்.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு குறித்து அமெரிக்கா பதிலளிக்கவில்லை ஆனால் ஏ பி செய்தி முகமையில், ஐஎன்எஃப் ஒப்பந்தத்தில் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை சோதிக்கவோ, நிறுத்தவோ உடனடியாக எந்த திட்டமும் இல்லை என டிரம்ப் அரசின் அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒப்பந்தத்திலிருந்து ஏன் வெளியேறியது அமெரிக்கா?

டிரம்ப்படத்தின் காப்புரிமைCHIP SOMODEVILLA

ரஷ்யா மற்றும் ஐஎன்எஃப் ஒப்பந்தத்தில் இல்லாத நாடுகளாகிய குறிப்பாக சீனா ஆகிய நாடுகள் தரும் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்திருந்தது.

ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்கா, 6 மாத்த்தில் அதிலிருந்து முழுமையாக வெளியேறப் போவதாக தெரிவித்தது.

“மேலும் நாங்கள் மட்டும் இந்த ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக கடைபிடிக்க முடியாது” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஒப்பந்தத்தை மீறுவதாகவும், ஒப்பந்தத்தில் தடை செய்யப்பட்ட 500-5500 கிமீ தூரம் பாயும் புதிய ஏவுகணையை உருவாக்கியுள்ளதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால் அமெரிக்கா வேண்டுமென்றே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதாகவும், தான் விரும்பாத ஒரு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற பொய் காரணங்களை கூறுவதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது.

நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை என்றால் என்ன?

அமெரிக்காபடத்தின் காப்புரிமைAFP
  • 1987இல் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே கையெழுத்தானது. இதன்படி, நிலத்தில் இருந்து ஏவப்படும், 500 முதல் 5,500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்தக் கூடாது.
  • எஸ்.எஸ்-20 ஏவுகணைத் திட்டத்தை சோவியத் ஒன்றியம் பயன்படுத்துவது அமெரிக்காவிற்கு கவலையளித்தது. எனவே ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், ஐரோப்பாவில் பெர்ஷிங் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை நிறுவியது பரவலான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
  • இந்த உடன்படிக்கையின்படி 1991இல் 2,700 அணு ஆயுத ஏவுகணைகள் அழிக்கப்பட்டன.
  • இரு நாடுகளும் எதிர்த்தரப்பின் ஆயுதங்களை சோதிக்க பரஸ்பரம் அனுமதி கொடுக்கப்பட்டது.
  • இந்த உடன்படிக்கை ரஷ்ய நலன்களுக்கு பலனளிக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2007இல் கூறியிருந்தார். 2002-ல் கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் இவ்வாறு கூறியிருந்தார்.

Web Design by The Design Lanka