இலங்கை தேசிய கிரிக்கெட் அணி: ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ் » Sri Lanka Muslim

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி: ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்

51356392_395232371226579_1781535464965013504_n

Contributors
author image

S.M.Aroos

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடிய முஸ்லிம் வீரா்களுடன் ஐந்தாவது வீரராக வரலாற்றில் பதியப்படவுள்ளவர் கண்டியின் மடவள நகரின் முகம்மட் சிராஸ் ஆகும்.

மடவள மதீனா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான முகம்மட் சிராஸ் தனது விடாமுயற்சியினால் இன்று இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாடுகின்ற ஒவ்வொரு வீரரினதும் மிகப்பெரிய கனவாக இருப்பது தனது நாட்டுத் தேசிய அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்பதுதான். அந்தக்கனவு நமது சமூகத்தின் மார்க்கப்பற்றுள்ள வீரரான முகம்மட் சிராஸூக்கு நனவாகியிருக்கின்றது.

அந்த வகையில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இதுவரை காலத்திற்குள் நான்கு வீரா்கள் இலங்கை அணியில் விளையாடியிருக்கின்றனர். உவைசுல் கர்ணைன், நவீட் நவாஸ், ஜெஹான் முபாரக், பர்வீஸ் மஹ்றூப் ஆகியோராகும்.

இவர்களுடன் இன்று வாய்ப்புப் பெற்றிருக்கும் முகம்மட் சிராஸ் தென்ஆபிரிக்க அணியுடனான போட்டியில் களமிறங்கினால் ஐந்தாவது முஸ்லிம் வீரராக வரலாற்றில் பதியப்படுவார்.

மடவள மதீனா தேசிய பாடசாலையின் 13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற முகம்மட் சிராஸ் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். றிக்காஸ் மற்றும் இஹ்ஸான் முகம்மட் நஜிமி போன்ற சிறந்த பயிற்சியாளர்கள் இவருக்கு பயிற்சிகளை வழங்கினர்.

கஸ்டமான குடும்ப சூழ்சிலையைக் கொண்டிருந்த போதிலும் தனது கிரிக்கெட் விளையாட்டை சிராஸ் கைவிடாமல் அடுத்த கட்டத்திற்குத் தயாரானார். இலங்கையின் பிரபல கழகங்களில் ஒன்றான கோல்ஸ் கழகத்துடன் இனைந்து கொண்டார்.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 29,30 ம் திகதிகளில் மூவர்ஸ் அணிக்கும், கோல்ஸ் அணிக்குமிடையிலான முதலாம் தர பிரிமியர் லீக் போட்டியில் அறிமக வீரராக இடம்பெற்றார். இப்போட்டியில் ஒரு விக்கட்டினை வீழ்த்தினார்.

2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மாவட்ட மட்ட ஒருநாள் போட்டிகளில் கேகாலை மாவட்டம் சார்பாக விளையாடிய முகம்மட் சிராஸ் புத்தளம் மாவட்ட அணிக்கெதிராக 9 ஓவர்கள் பந்துவீசி 47 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினைக் கைப்பற்றினார்.

இதன் பின்னர் 2018இல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 23வயதுக்குட்பட்ட மாகாணங்களுக்கிடையிலான போட்டியில் மத்திய மாகாண அணியில் இடம்பெற்ற முகம்மட் சிராஸ் மிகச்சிறப்பாகப் பந்துவீசியதுடன் இத்தொடரில் மொத்தமாக 23 விக்கட்டுக்களைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூடுதலான விக்கட்டுக்களைக் கைப்பற்றியதனால் இலங்கை A அணியில் முகம்மட் சிராசுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. சிராஸ் A அணியில் சேர்க்கப்படாததை ஊடகங்கள் பலதும் அன்று கண்டு கொள்ளாமை கவலைக்குரியதாகும்.

இந்நிலையில் கட்டார் நாட்டுக்கு பயணமானார். அங்கு பிராந்திய அணியில் சில மாதகாலம் விளையாடியதுடன் மீண்டும் நாடு திரும்பினார். இவ்வருட பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவத்றகாக பி.ஆர்.ஸி அணியோடு இனைந்து கொண்டார்.

11 இன்னிங்ஸில் பந்துவீசி மொத்தமாக 23 விக்கட்டுக்களை இதுவரை கைப்பற்றியுள்ளார். இவ்வருட பிரிமியர் லீக் தொடரில் ஆகக்கூடுதலான விக்கட்டுக்களை கைப்பற்றிய வீரராக முகம்மட் சிராஸ் காணப்படுகின்றார்.

பிரிமியர் லீக்கில் சிறப்பாக பந்து வீசி விக்கட்டுக்களைக் கைப்பற்றியதனால் இலங்கை வந்த அயர்லாந்து A அணிக்கெதிராக விளையாடும் இலங்கை A அணிக்கு முகம்மட் சிராஸை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் பரிந்துரைத்தனர். அந்த வகையில் தனது தெரிவை உறுதிப்படுத்துவது போல் அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்டிலும், இரண்டாவது டெஸ்டிலும் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார்.இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மொத்தமா 7 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன் காரணமாக தென் ஆபிரிக்க நாட்டுக்கு கிரிக்கெட் பயணம் கொள்ளும் இலங்கை அணியில் முகம்மட் சிராஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் தேசிய அணிக்குத் தெரிவான ஐந்தாவது முஸ்லிம் வீரராக தடம் பதித்துள்ளார்.

முகம்மட் சிராஸின் வளர்ச்சியில் அவரது பெற்றோர்கள் மிகுந்த அர்ப்பணிப்பையும், ஆதரவையும் கொடுத்துள்ளனர். அதேபோன்று சிராஸின் கிரிக்கெட் செலவுகளையும், விடயங்களையும் தொழிலதிபர் இம்தியாஸ் கபுர் அவர்கள் செய்து வருகின்றார். இது பாராட்டப்பட வேண்டியதாகும்.. இவ்வாறானவர்கள் நமது சமூகத்தில் இன்னும் பெருக வேண்டும். அப்போதுதான் இலை மறை காயாக உள்ள முஸ்லிம் வீரா்கள் பலருக்கும் தேசிய அளவில் விளையாடக்கூடிய வாய்ப்பு உருவாகும். அதேபோன்று பயிற்றுவிப்பாளராகவும், ஒரு சகோதரராகவும் இருந்து சிராஸை இந்த நிலைக்கு கொண்டு வருவதில் இரவு பகலாக உழைத்தர்தான் .

நேற்று அவரது பாடசாலையான மடவள மதீனா தேசிய பாடசாலையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் ஊரே திரண்டு வந்து முக்மட் சிராஸை வாழ்த்தினார்கள். மார்க்கமும், ஒழுக்கமும், பணிவும் கொண்ட சிராஸ் உரையாற்றும் போது அழுத காட்சி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எல்லோரினதும் மனதை இகழ வைத்துவிட்டது.

ஒரு பந்து வாங்குவற்கு கூட என்னிடம் வசதி இருக்கவில்லை. எல்லாப்புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ் என்று முதற்கண் இறைவனுக்கும், தன்னை இந்த இடத்தில் நிறுத்த காரணமாக இருந்த பெற்றோர்க்கும் இம்தியாஸ் கபுர், இஹ்ஸான் முகம்மட் நஜிமி இவர்களுக்கும் ஆனந்த கண்ணீருடன் முஹம்மட் ஷிராஸ் நன்றியை தெறிவித்தார்.

இதில் உவைசுல் கர்னைண் ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார்.

இனவாதம்,மதவாதம், பிரதேசவாதம் கடந்து நம்மவர்களுக்கான தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு அபுர்வமானது.

நவீட் நவாஸ் குமார் சங்கக்கார போன்று சர்வதேச அளவில் பிரகாசிக்கக் கூடிய நிலை இருந்தும் அது இல்லாமலாக்கப்பட்டது நம்மைவிட நாட்டுக்கே பெரும் இழப்பாகும்.

பர்வீஸ் மஹ்றூப் உச்சம் தொட முடியாமல் கவிழ்க்கப்பட்டார். ஜெஹான் முபாரக் ஒருநாள் அரங்கிலும், இருபதுக்கு 20 இலும் திறமைகளை வெளிப்படுத்தினார்.

1984ம் ஆண்டு மொரட்டுவ டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் இடம்பெற்ற நியுஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக இடம்பெற்ற உவைசுல் கர்னைண் துடுப்பாட்டத்தில் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் 28 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

அத்தோடு இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவாகினார். அறிமுகப் போட்டியில் சிறப்பாட்டக்காரர் விருது பெற்ற முதலாவது இலங்கை வீரா் என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்காரரானார்.

1990 வரை விளையாடிய உவைசுல் கர்னைண் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சுயமாகவே விலகிக் கொண்டார்.

முஸ்லிம் வீரா்களில் கூடுதலான காலம் இலங்கை அணிக்கு விளையாடியவர் என்றால் அது பர்வீஸ் மஹ்றூப் மாத்திரம்தான். இவர் 109 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி 135 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

22டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். துடுப்பாட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் 1113 ஓட்டங்களையும், டெஸ்ட்டில் 566 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்களிப்பினை செய்த மஹ்றூப் சிறப்பாட்டக்காரர் விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.

அது மட்டுமல்ல இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் நம்பிக்கைக்குரிய வீரராகவும் மஹ்றூப் இருந்து வந்தார்.

அத்தோடு இந்தியாவின் டெல்லி டெயாவல்ஸ் ஐ.பி.எல்.அணிக்காகவும் பர்வீஸ் மஹ்றூப் விளையாடினார்.

நவீட் நவாஸ் ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடி 99 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். முதல் இன்னிங்ஸில் 21 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னஸிங்ஸில் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் பெற்றிருக்கின்றார். மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் ஒரு போட்டியில் ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இலங்கையின் முதல்தரப் போட்டிளில் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்துடன் பல சாதனைகளைக் கொண்டுள்ள நவாஸூக்கு தேசிய அணியில் போதிய வாய்ப்புக்களைக் கொடுக்காது புறக்கணிக்கப்பட்டார் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

அடுத்தவர் ஜெஹான் முபாரக் 40 ஒருநாள் போட்டிளில் விளையாடி 704 ஓட்டங்களையும், 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 385 ஓட்டங்களையும் பெற்றிருக்கின்றார். இருபதுக்கு 20 போட்டிகளில் 238 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் சூழல் பந்தில் சில விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

மிகச்சிறந்த அதிரடித்துடுப்பாட்ட வீரராக களம் கண்டாலும், சில போட்டிகளின் சறுக்கல்கள் காரணமாக அணியிலிருந்து கழற்றப்பட்டார். இருந்த போதும் உள்ளுர் போட்டிகளில் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில் இலங்கை அணிக்கு ஐந்தாவது வீரராக தெரிவாகியுள்ள முகம்மட் சிராஸ் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து நீண்டகாலம் இலங்கை அணிக்கு விளையாடி பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

02b037f 51356392_395232371226579_1781535464965013504_n 1509092173_8499197_hirunews_maharoof jehan-mubarak-accident

Web Design by The Design Lanka