முஸ்லிம் தலைமைகளின் இருப்புக்கான ஜனநாயகச் சமர் » Sri Lanka Muslim

முஸ்லிம் தலைமைகளின் இருப்புக்கான ஜனநாயகச் சமர்

7M8A0188

Contributors
author image

Suaib Cassim

முஸ்லிம் சமூகத்தில் நிரந்தரமாக நிலைப்பட வேண்டுமென்ற ஆதங்கம் முஸ்லிம் காங்கிரஸையும், மக்கள் காங்கிரஸையும் நேரிடை, எதிரிடை மோதல்கள், முறுகல்களுக்கு தயார்படுத்தியுள்ளன. இதில் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பக்கத் துணையாகப் பல கட்சிகளும், உள்ளூர்த் தலைவர்களும் துணையாக நிற்பதாக மக்கள் கருதுகின்றனர்.

இந்நிலையால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை தேசிய ரீதியில் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளனர் சிலர். எனினும் சிங்களத் தேசியமும், தமிழ்ப் பெரும்பான்மையுமே மக்கள் காங்கிரஸின் அரசியல் போக்கையும், நோக்கையும் சந்தேகிக்கின்றனர். ஆனால் மக்கள் காங்கிரஸின் இந்தத் தலை நிமிர்ந்த போக்கையே பெரும்பாலான முஸ்லிம்கள் விரும்புவதாகத் தெரிகின்றது. தேசியத்தின் இருப்புக்கான ஜனநாயகச் சமரில் தமிழ் தலைமைகளுக்குள்ள இறுக்கமான பிடியும், தொனியுமே இன்று வடமாகாணத்தை தனி இமேஜோடு இயங்க வைக்கின்றது. படையினரை வெளியேற்றி சிவில் நிர்வாகத்தை மாகாண சபையிடம் வழங்குமாறு விக்னேஸ்வரன் கோருவதில் பல பின்புலங்கள் உள்ளதை மக்கள் காங்கிரஸ் புரிந்துள்ளது.

எந்தவகையான நிர்வாகமானாலும், எவ்வகையான அதிகாரப்பரவலாக்கலானாலும் தமிழ்த் தேசியத்தில், ஆரியர் கலப்புடன் கூடிய சிங்கள நிர்வாகம் பாதுகாப்பைத் தராது என்பதை சர்வதேசத்துக்கு காட்டுவதன் அர்த்தமும் அவரது கோரிக்கையில் மறைந்துள்ளது. மாகாண சபைகளுக்கு தனித்த பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் , எத்தனை முஸ்லிம் பொலிஸார் வடமாகாணத்தில் சேவையில் ஈர்க்கப்படுவர்.

விக்னேஸ்வரனின் தனித்த தமிழ் பொலிஸாரின் நிர்வாகம் வடபுல முஸ்லிம்களுக்கு எந்த அநியாயத்தையும் செய்யாது என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நிர்வாகக் கெடுபிடிகளை வழங்கி நெருக்குதலுக்குள்ளாக்காது என்பதைக் கூறமுடியாது. இதையே இன்று வடக்கில் புலிகளின் சிந்தனையில் வளர்ந்த சில அதிகாரிகள் செய்கின்றனர். இதை மென்மைப் போக்குடைய முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகத்தின் கீழிருந்த கிழக்கு மாகாணமும், தனித்துவ சிந்தையுடன் அல்லது, ஆள்புல எல்லையை அடையாளப்படுத்திச் செயற்பட்டிருந்தால் விடுதலை அரசியலுக்கு விடிவு கிட்டயிருந்திருக்கும்.

தமிழ் தேசியத்துடன் தொடர்ச்சியாக இயைந்து செல்வதும், இணங்கிப்போவதும் முஸ்லிம் தேசியத்தின் அடையாளத்தை நிரூபிக்காது. அதுமாத்திரமின்றி வெல்லப்பட வேண்டிய விடயங்களில், கடும் போக்கு தமிழ் தேசியத்துடன் விட்டுக்கொடுக்காத நிலைப்பாட்டில் செல்வதே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தை வென்றெடுக்க உதவும். இந்த யதார்த்தத்தை அஷ்ரஃபுக்குப் பின்னரான முஸ்லிம் காங்கிரஸின் தலைமை புரியத்தவறியதே புதிது. புதிதாக முஸ்லிம் தலைமைகள் தோன்றக் காரணம். இதுபோன்று சிங்களத் தேசியத்துடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தலைமைகள் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்வதாலே இன்று வடக்கில் மாற்றுத் தமிழ்த் தலைமை அடையாளம் காணப்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறான ஒரு மாற்றுத் தலைமையாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று முஸ்லிம்களிடத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கிழக்கில் இல்லாவிட்டாலும் வடக்கில் மட்டுமாவது முஸ்லிம்களின் துணிச்சலான தலைமை முன்னெடுக்கும் அரசியல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை முஸ்லிம்களுக்கான தேசிய தலைமையாக அடையாளம் காட்டத்தொடங்கியுள்ளது. இந்தத் தலைமையின் அடையாளம் அங்கீகரிக்கப்பட்டால் முஸ்லிம் காங்கிரஸூக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பெரும் பேரிடியை ஏற்படுத்தலாம். இதனால்தான் அமைச்சர் ரிஷாதின் வளர்ச்சியைப் பற்றி சிலரும் முஸ்லிம் காங்கிரஸூக்குத் துணையாக நிற்கின்றனர்.
இதுவே முஸ்லிம் அரசியல் தளத்தின் தற்போதைய பேசு பொருளாகவுள்ளது.

முஸ்லிம் தேசியத்தின் இலட்சியப் பயணத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைமையேற்றால் தமிழ் தேசியத்தின் அடிநாதங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்திலே இச்சக்திகள் முஸ்லிம் காங்கிரஸைப் பின்னால் நின்று தைரியமூட்டுகின்றன. வடக்கிலோ, கிழக்கிலோ அஷ்ரபின் மறைவின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் வென்றெடுக்கவில்லை. அஷ்ரபுக்குப் பின்னரான முஸ்லிம் காங்கிரஸின் மென்மைப் போக்கு, இலங்கை அரசியலில் முஸ்லிம்களும் தனித்த இனத்தவர் என்ற அடையாளத்தை படிப்படியாகத் திசை திருப்பியுள்ளது.

இந்த ஆபத்தான நிலையிலிருந்து முஸ்லிம்களை மீட்க வந்த தேசிய காங்கிரஸ் திடீரெனத் தோல்வியுற்றதால், மேலும் நிலைமைகள் சீரழியத் தொடங்கின. கிழக்கு மாகாணத்தைப் பிரிக்க வேண்டுமென்ற கோஷத்தை தோற்கடித்த தமிழ் பெரும்பான்மைவாதம் முஸ்லிம் காங்கிரஸின் மென்மைப்போக்கைச் சாதகமாகக் கையாளத் தொடங்கியது. இதற்கேற்ற வகையில் ஹக்கீமைப் பயிற்றுவித்த சர்வதேசம் இலங்கை முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதி முஸ்லிம் காங்கிரஸே என்ற தோற்றப்பாட்டையும் தோற்றுவித்தது. இந்தப் பின்புலம்தான் வடக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு எதிரான போர்க்கொடிகளை தலைநிமிரச் செய்துள்ளன.

இதிலுள்ள கவலை என்னவெனில் தமிழ்த் தலைமைகளோடு முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொள்ளும் மென்மையான போக்கை, முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ்த் தலைமைகள் மென்மையைக் காட்டியதில்லை. இதனால்தான் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அடையாளம் அரசியல் வானிலிருந்து மெது மெதுவாக மறையத் தொடங்கியுள்ளது. எல்லா விடயத்திலும் மக்கள் காங்கிரஸூம் தமிழ் தலைமைகளுடன் மென்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனபதே நியாமில்லாதோரின் எதிர்பார்ப்பு, இதற்காகத்தான் எதற்கெடுத்தாலும் அமைச்சர் ரிஷாத்தைப் பழிசொல்லப் பல்லக்குத் தூக்கியுள்ளனர். இவ்வாறு பழிசொல்வோரே தமிழ்த் தேசியத்தின் பல்லக்கிலும், சிவிகையிலும் தூக்கிவரப்படுகின்றனர்.

விஜயகலாவின் கருத்தை சந்தர்ப்ப சூழ்நிலையாகப் பார்க்க வேண்டுமென்று சொல்லும் அமைச்சர் ஹக்கீம், வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், வில்பத்து விவகாரம் என்பவற்றை முப்பது வருட எதிர்பார்ப்பின் சந்தர்ப்ப சூழ்நிலைக் கோரிக்கை என்பதைப் புரிய மறுப்பதேன்? இதற்குத் துணையாக நின்று குரல்கொடுக்கத் தயங்குவது ஏன்? என்ற சந்தேகமே, மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டை சரிப்படுத்தியுள்ளது. மஸ்தானுக்கு முட்டுக்கட்டையா? ரிஷாத்தைப் பழி சொல்வோம். வில்பத்துவில் புரட்சியா ரிஷாதின் சதியென்போம். வடமாகாணச் செயலணி வீரியமுடன் செயலாற்றுகிறதா? ரிஷாதின் ஊழல் என்போம் இந்தக் கோஷத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும், ரிஷாட்டுக்கு எதிரான காழ்ப்புணர்வாளர்களுமே ஒன்றுபட்டுள்ளதாகவே உணரவேண்டியுள்ளது.

7M8A0188

27540037_2146229035610433_7720978194522318419_n (1)

Web Design by The Design Lanka