இவ்வருட இறுதிக்குள் மேல் மாகாண முஸ்லிம் மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் தரங்கள் உயர்த்தப்படும் - அஸாத் சாலி » Sri Lanka Muslim

இவ்வருட இறுதிக்குள் மேல் மாகாண முஸ்லிம் மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் தரங்கள் உயர்த்தப்படும் – அஸாத் சாலி

IMG-20190206-WA0057

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


மேல் மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை, தான் முன்னெடுத்து வருவதாகவும், இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதெனவும், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

மினுவாங்கொடை – கல்லொழுவை அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்லொழுவை, அழுத்மாவத்தை வீதி, முனாஸ் ஹாஜியார் விளையாட்டரங்கில், (06) புதன்கிழமை மாலை, அதிபர் எம். ரி. எம். ஆதிம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், மேல் மாகாண ஆளுநர் தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது,

மேல் மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் உட்பட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதே எனது நோக்கம். அடுத்த 10 மாதங்களுக்குள் இந்த இலக்குகள் எட்டப்படும்.

தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் கல்வித்துறையில் பின்னடைந்துள்ளன. முழு நாட்டினதும் கல்வி நடவடிக்கைகளை நோக்குகின்ற போது, மேல் மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகள், மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களைத் தேடுவதில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை.

எனினும், இந்த வருடம் முடிவடைவதற்கிடையில் இதனை மாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளேன். மேல் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆளணிப் பற்றாக்குறை, பௌதிக வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அவசியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஆளுநராக நான் பதவியேற்ற போது, கல்வித்துறைக்கு முன்னுரிமையளிக்க எண்ணினேன். மூன்று மாவட்டங்களிலுமுள்ள அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாகைளின் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளேன். மூன்று கட்டங்களில் அதிபர்களிடமிருந்து முழுமையான விபரங்களைப் பெற்று, இத்திட்டம் செயற்படுத்தப்படும்.

அத்துடன், ஜனாதிபதியின் போதை ஒழிப்புத் திட்டத்தை பாடசாலை மட்டத்திலிருந்து முன்னெடுத்து வருகின்றோம். பாடசாலைகளுக்கும் மத வழிபாட்டுத் தலங்களை அண்மித்த பகுதிகளிலும் போதைப்பொருள் விற்கப்படுகிறது. பெற்றோர்களுக்கும் இதில் பாரிய பொறுப்பு இருக்கின்றது. தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள், செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினரை போதையிலிருந்து விடுவிப்பதற்கு, நாம் இணைந்து செயற்படவேண்டும். இந்தப் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்காக மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றும், விரைவில் பெற்றுத் தரப்படும். அதேபோன்று ஆளணி,பௌதிக வளப் பற்றாக்குறைகளும் விரைவாக நிவர்த்தி செய்யப்படும் என்றார்.

Web Design by The Design Lanka