எனது தலைமையில் ஆட்சி நடந்த போது, இந்தியாவுடனான நட்புறவு சிறப்பாக இருந்தது » Sri Lanka Muslim

எனது தலைமையில் ஆட்சி நடந்த போது, இந்தியாவுடனான நட்புறவு சிறப்பாக இருந்தது

srilanka ec priome

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

எனது தலைமையில் இலங்கையில் ஆட்சி நடந்த போது, இந்தியாவுடனான நட்புறவு சிறப்பாக இருந்தது, 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, இந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.பெங்களூருவுக்கு வந்திருந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே , முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், ராஜபக்சே பெங்களூருவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெங்களூரு சுதந்திர பூங்காவில் கருநாடக தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: எனது தலைமையில் இலங்கையில் ஆட்சி நடந்த போது, இந்தியாவுடனான நட்புறவு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு புதிய அரசு உருவானதும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இருந்த உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, இதுபோன்ற உறவில் பாதிப்பு ஏற்படுவது உண்டு. இரு நாடுகள் இடையே உள்ள உறவில் பாதிப்பு ஏற்படுவது சரியல்ல. ஆனால், இலங்கையில் எனது தலைமையில் அமைந்துள்ள கூட்டணி, இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியோடு நல்ல புரிதலைக் கொண்டுள்ளது. இலங்கையுடன் பராமரிக்கப்பட்டு வரும் நட்புறவை புதிதாகப் பொறுப்புக்கு வரும் அரசும் தொடர வேண்டுமென்பதுதான் இந்திய-இலங்கை நட்புறவை மேம்படுத்துவதற்கான அடிப்படையாக இருக்க வேண்டும்.

புதிய அரசுகள் பதவியேற்கும் போது, இரு நாடுகளின் ராஜதந்திர நட்புறவு ஆபத்தில் சிக்கி பாதிப்புக்குள்ளாவதுதான் நமது கடந்த கால அனுபவமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
2014-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் 2-ஆவது முறையாக மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. அப்போது இலங்கையில் எனது தலைமையில் இருந்த அரசுக்கும், இந்தியாவில் அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் பகிர்ந்து கொண்ட இணக்கமான நட்புறவு, புதிதாக பதவியேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர தவறிவிட்டது. 1980-கள் மற்றும் 2014-இல் ஏற்பட்ட புரிதலின்மைகள் இரு நாடுகளின் உறவில் ஏற்பட்ட பிறழ்ச்சி என்றே கூற வேண்டும்.
2014-ஆம் ஆண்டில் இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, எனது தலைமையில் இலங்கையில் இயங்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியாவின் ஆளுங்கட்சியுடன் இணக்கமான புரிதலைக் கொண்டுள்ளது. இந்தியாவும், இலங்கையும் பூகோள ரீதியாக நெருக்கத்தில் உள்ளன.

எனவே, இரு நாடுகளும் தத்தமது நாட்டின் பாதுகாப்புக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இந்தியாவுக்குப் பாதகமாக அமையும் நோக்கில் மூன்றாவது நாடு இலங்கை மண்ணை பயன்படுத்தக் கூடாது என்பதால், இலங்கையுடன் நட்புறவைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்று இந்தியத் தலைவர்கள் பலர் வலியுறுத்தி வந்துள்ளனர். அதேபோல, இந்தியாவும் அதுபோன்றதொரு நிலையை உறுதிப்படுத்த வேண்டும். இந்திய மண்ணில் இயங்கி வரும் எந்தக் குழுக்களும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியாது.

இந்தியா மற்றும் இலங்கையின் அரசியல் கட்சி தலைவர்கள் இடையே உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் வெளியுறவுத்துறை, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவை அரசியல் கட்சி தலைவர்களிடமே இருக்கிறது. இலங்கையில் எதிர்க்கட்சியாக நான் இருந்தாலும், இந்தியாவில் ஆளுங்கட்சியுடன் நல்ல உறவு இருக்கிறது. அண்டை நாடுகளான இந்தியாவும், இலங்கையும் தங்களது பாதுகாப்புக்கு உதவி செய்ய வேண்டும். இந்திய தலைவர்கள் எதிர்பார்ப்பது இலங்கை மூலம் 3-வது நபரால் எந்த அச்சுறுத்தலும் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதையே இலங்கை தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இரு நாடுகளுடையே நடைபெறும் பேச்சு வார்த்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

இருநாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவில், இந்தியப் பெருங்கடல் கடல்வழிப் பாதுகாப்பு முக்கிய அம்சமாக இருக்கும். இதற்காக வலுவான ராஜதந்திர ஒப்பந்தங்கள் உருவாக வேண்டும். இதுபோன்ற அம்சங்களில், இரு நாடுகளுக்கும் இடையே துடிப்பான, தொடர் பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வழக்கமான ராஜதந்திர எல்லைகளைக் கடந்திருப்பது முக்கியமாகும். இதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்பதே எனது கட்சியின் தலையாய எதிர்கால திட்டமாக உள்ளது. இறையாண்மை, ஆக்கிரமிப்பின்மை, தலையிடாமை, பரஸ்பர பயன், அமைதி முறையில் உடனிருத்தல் போன்ற அணிசாரா இயக்கத்தின் கொள்கைகளை இருநாடுகளும் மதித்து, அதன்படி நடைபோட்டு வந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார். பெங்களூருவுக்கு வந்திருந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே , முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

Web Design by The Design Lanka