அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் » Sri Lanka Muslim

அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள்

51828249_2525864397429740_1144566921337765888_n

Contributors
author image

ஊடகப்பிரிவு

பிரதேச மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து,உள்ளூர் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தத் தேவையான ஆலோசனைகள்.ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,உள்ளூர் அரசியல்வாதிகள் வீணான விமர்சனங்களிலிருந்து விடுபட்டு மக்களின் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

முசலி தேசிய பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களின் அங்குரார்ப்பணம் மற்றும் இல்ல விளையாட்டு போட்டி என்பன நேற்று (09) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசியல் அதிகாரம் என்பது நிலையானது அல்ல. அதிகாரங்கள் இருக்கும் போதுதான் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும் . ஓர் அரசியல் வாதி, ஒரு பிரதேசத்தின் அல்லது ஊரின் அபிவிருத்திக்கு எதை செய்ய வேண்டுமோ அவற்றில் முடிந்ததை இதய சுத்தியோடும் நேர்மையுடனும் செய்துள்ளோம் – செய்து வருகின்றோம் என்ற திருப்தி எமக்குள் இருக்கின்றது.

எதுவுமே இல்லையென்றிருந்த நிலையில் எல்லா விடயங்களிலும் ஓரளவுக்காவது தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். முசலி பிரதேசத்தின் ஆரம்பகாலம் அதாவது மீள் குடியேற்றத்திற்காக வந்த போது இந்த பிரதேசம் கிடந்த கோலம் அப்போது வந்த பழையவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் சாட்சிகளாகவும் இருக்கின்றனர்.

எங்கு பார்த்தாலும் ஏக காடுகளாகவே தெரிந்த இந்த பிரதேசத்தில், கிராமங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு, எல்லைகள் தெரியாமல் இருந்தன . பாதைகள் முற்றாகவே அழிவடைந்திருந்தன காடுகளை துப்பரவாக்கி மீள் குடியேற வந்தவர்களுக்கு தற்காலிக கொட்டில்களை அமைத்து கொடுத்து, மீள் குடியேற்றத்தை உயிர்ப்பித்தோம்.

பின்னர் கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டன, கட்டிடங்கள் வழங்கப்பட்டன , வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டன , மின்சாரவசதிகள் ,குடிநீர் வசதிகள், வாழ்வாதார வசதிகள் என்று தன்னந்தனியாவாக நின்று அத்தனை உதவிகளையும் செய்தோம்.

இந்த பிரதேசம் ஓரளவாவது இப்போது தலைநிமிர்ந்து நிற்கின்றது. கல்வி கூடங்கள் மீளமைக்கப்பட்டும் ஆசிரியர் நியமிக்கப்பட்டும் இன்னோரன்ன பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட போதும் மாணவர்களின் பெறுபேறுகள் இன்னும் திருப்திகரமானதாக அமையவில்லை. இதற்கு ஆசிரியர்களின் பற்றாக்குறையும் ஒரு காரணமாக கூறப்படுகின்ற போதும் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் குறிப்பாக தேவைப்படுகின்றது. அத்துடன் மாணவர்களும் தமது கஷ்டங்களை உணர்ந்து சிரத்தையுடன் கற்க வேண்டும்.

நகர பாடசாலைகள் போன்று இந்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நிறைய வளங்களை பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம் .அதற்கு ஊர் சார்ந்த பிரமுகர்களினதும் புத்தி ஜீவிகளினதும் உதவியை நாடிநிற்கின்றோம்.

இவ்வாறானவர்களுடன் கலந்துரையாடி, ஊரின் குறைபாடுகளையும் பிச்சினைகளையும் திட்டங்களாக வகுத்து சமர்ப்பிக்குமாறு பிரதேச சபை உறுப்பினர்களிடம் வேண்டியுள்ளோம். இந்த அறிக்கை கிடைத்தவுடன் இன்னும் பல முறையான அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் .

கடந்த வருடம் முசலி தேசிய பாடசாலையில் இடம்பெறவிருந்த தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு எனது அமைச்சின் மூலம் 700 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம்.

ஏற்கனவே பரோபகாரிகளினதும் , அரபுலக நாடுகளின் தனவந்தர்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் இந்த பிரதேசத்தில் நாம் கட்டி வழங்கிய வீடுகள் பல மூடிக்கிடப்பதால் என்மீது அரசியல் மட்டத்தில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீடுகளை மூடிவிட்டு திறப்பையும் பயனாளிகள் கொண்டு சென்று விட்டார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர் . எனவே இவற்றை உணர்ந்து செயலாற்றுங்களென அன்பாய் வேண்டுகின்றேன். இந்தவருடம் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முசலி பிரதேசத்தில் இன்னும் பல அபிவிருத்தி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

51503772_2525863324096514_7800945290088808448_n 52072555_2525864587429721_728668869945720832_n

Web Design by The Design Lanka