சமூகம், இனம் சார்ந்த விடயங்களில் அதாவுல்லாஹ்வை நிராகரிக்க முடியாது! » Sri Lanka Muslim

சமூகம், இனம் சார்ந்த விடயங்களில் அதாவுல்லாஹ்வை நிராகரிக்க முடியாது!

atha

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சமூகம், இனம் சார்ந்த விடயங்களில் அக்கறை கொண்டவர்களாக நாம் எமக்கு, எமக்குப் பிடித்தமானவர்களை புகழ்ந்து பாராட்டுகிறோம்.

விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களை ஒரு தரப்பார் மேற்சொன்ன இரு விடயங்களுக்காகப் பாராட்டும் அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் அதன் தலைவருமான அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீனையும் அதே இரு விடயங்களுக்குமாக மற்றொரு தரப்பாரும் பாராட்டுகின்றனர். இதுவே இன்றைய காலகட்ட பொதுவான விடயமாக மாறியுள்ளது.

அதேவேளை, சமூகம், இனம் சார்ந்த விடயங்கள் என்று வரும்போது தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களை நாங்கள் தற்போது பெரும்பாலும் கிடப்பில் போட்டு விட்டோம். இதற்கு காரணம் அவர் இன்று ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதாக இருக்கலாம்.

ஆனால், அவர் இன்று ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் கடந்த காலங்களில் போன்று இன்றும் மிக அக்கறையுடன் செயற்படும் ஒருவர். யதார்த்தபூர்வமாக எதனையும் சிந்திப்பவர். இன்றைய நாட்களில் கூட அவரது உரைகளை, செயற்பாடுகளை அவதானிக்கும் போது இவற்றை தெட்டத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

எனவே, அவரிடம் இன்று ஆட்சி அதிகாரம் இல்லை என்பதற்காக அவரை குறைத்து எடை போட்டு சிலர் கருத்துகளை வெளியிடுவது தவறானது. அவர் தான்சார்ந்த சமூகத்தால் தோற்கடிக்கப்பட்டாலும் அதே சமூகத்தை எவர் முன்னிலையும் தோற்கடிக்கச் செய்யமாட்டார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இது ஒரு புறமிருக்க, அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் அவர் பலமிக்க அமைச்சராக காணப்பட்ட போது அவரது அபிவிருத்தி என்பது அக்கரைப்பற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டது என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைக் கூட நான் ஏற்றுக் கொள்ளாதவன்.

பிரதேசவாரியாகவோ அல்லது ஊர்வாரியாக ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களது அபிவிருத்திப் பணிகளை சரியாக முன்னெடுத்தால் அந்த மாவட்டமே முழுமையான அபிவிருத்தி பெறும் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவன் நான்.

அக்கரைப்பற்றில் அதாவுல்லாஹ் போன்று அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஏனைய அரசியல்வாதிகளும் (அவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருக்க வேண்டுமென்ற தேவை இல்லை) தங்களுக்கு உள்ள அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தியும் சில விடயங்களைத் தேடிச் சென்று பெற்றும் தங்கள் தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்திருந்தால் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் பிரதேசங்களும் இன்று அக்கரைப்பற்றுப் போன்றே அபிவிருத்தி அடைந்திருக்கும்.

அக்கரைப்பற்றின் அபிவிருத்தி இன்று உயர்ந்து நிற்பதுதான் அதே மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களின் பின்னடைவுக்கான ஒப்பீட்டுக்கு காரணமாகி உள்ளது. இதற்காக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வை குற்றஞ் சுமத்துவது முற்று முழுதான பிழை என்பதே எனது கருத்தாகும்.

ஆலமரத்தின் கீழ் அருகம்புல் தானா வளர்ந்தது அதன் குற்றமா? அல்லது மறறவர்களால் வளர்க்கப்பட்டது குற்றமா?

‘நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்’. என அன்னை தெரசா அம்மையார் கூறியதில் அர்த்தங்கள் ஆயிரம். – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Web Design by The Design Lanka