வடக்கு-கிழக்கில் தாதியர்களின் தட்டுப்பாடு; ஜூன் மாதம் நிவர்த்தி செய்யப்படும் » Sri Lanka Muslim

வடக்கு-கிழக்கில் தாதியர்களின் தட்டுப்பாடு; ஜூன் மாதம் நிவர்த்தி செய்யப்படும்

faizal

Contributors
author image

ஊடகப்பிரிவு

இந்த வருடம் ஜூன் மாதம் 1500 தாதியர்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியாக இருப்பதால் அவர்களை கொண்டு வடக்கு-கிழக்கு வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

 ஞாயிற்று கிழமை [10.02.2019] பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சீன நிதி உதவியின் கீழான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

நான் பிரதி அமமைச்சரானபோது சம்மாந்துறைக்கும் பொத்துவில்லுக்கும் வைத்தியசாலைக் கட்டடங்கள் அமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தேன்.அதை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தை இறைவன் இப்போது தந்துள்ளான்.நாம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமானதாக இது உள்ளது.

கட்டடத்தை மாத்திரம் அமைப்பதற்கு 554 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றது.மேலும் 554 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்படும்.இதற்கு அப்பால் இன்னும் 50 வருடங்களுக்கு பொத்துவில்லுக்கு எந்தவொரு வைத்தியசாலை கட்டடங்களோ உபகாரணங்களோ தேவை இல்லை.வைத்தியசாலையை உரியமுறையில் நடத்திச் சென்றால் போதும்.

குறைந்தது 25 வருடங்கள் நிலைத்து நிற்கும் வகையில்தான் நாம் எமது சேவைகளை செய்து வருகிறோம்.நான் அமைச்சராக ஆனது முதல் இந்த வைத்தியசாலையின் தேவைக்காக 75 மில்லியன் ரூபா நிதியை செலவழித்துள்ளேன்.

மகப்பேற்று நிபுணர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.இது நாடு பூராகவும் உள்ள பிரச்சினை.வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காகச் சென்ற மகப்பேற்று நிபுணர்கள் இன்னும் வரவில்லை.அதேபோல்,50 பேர் பயிற்சியில் உள்ளனர்.அவர்கள் வெளியேறிய பின்தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட முடியும்.

வைத்தியர்கள்,வைத்திய ஆலோசகர்கள் போன்றோரின் தட்டுப்பாடு இருப்பது உண்மை.அது எங்களுக்கு பெரும் சவாலாகும்.தாதியர்கள் தட்டுப்பாட்டை நாங்கள் ஓரளவு தீர்த்துக்கொண்டு செல்கின்றோம்.இந்த வருடம் ஜூன் மாதம் 1500 தாதியர்கள் வெளியாகின்றனர்.அவர்களை வைத்து மேலும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

அனேகமாக,வடக்கு-கிழக்கு வைத்தியசாலைகளில் நிலவுகின்ற தாதியர்களுக்கான தட்டுப்பாட்டை இவர்களின் மூலம் நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.-என்றார்.

[ ஊடகப் பிரிவு ]

Web Design by The Design Lanka