புதிய கமநல சேவைகள் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் ஆற்றிய உரை » Sri Lanka Muslim

புதிய கமநல சேவைகள் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் ஆற்றிய உரை

Maithripala

Contributors
author image

ஊடகப்பிரிவு

வெலிகந்த புதிய கமநல சேவைகள் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில்
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 2018.07.09


நான் விவசாய அமைச்சராக இருந்தபோது முதல் தடவையாகக் கிடைத்த கமநல சேவைகள் நிலையத்தினை 2008 மார்ச் 22 ஆம் திகதி வெலிகந்தையில் மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான கட்டிடத்தில் அதனை ஆரம்பித்தோம். அதனை திறந்து வைத்ததன் பின்னர் இன்று விவசாய அமைச்சினால் 131 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய கமநல சேவைகள் நிலையத்தை திறந்து வைப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

உதவி ஆணையாளர் எனக்கு சில நூல்களை வழங்கினார். அவற்றில் கமநல சேவைகள் திணைக்களம், பிராந்திய அலுவலகங்கள் பற்றிய விடயங்கள், குறைபாடுகள், முன்மொழிவுகள், செயற்பணிகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்திற்கு இன்னும் இரு கமநல சேவை நிலையங்கள் குறைபாடாக உள்ளன. சிறிபுர மற்றும் அம்பகஸ்வெவ பிரதேசங்களில் அவை அமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டிடத்திற்கான செலவு எவ்வளவு என நான் வினவினேன். 131 இலட்சம் என்றும் சிறிபுர மற்றும் அம்பகஸ்வெவ நிலையங்களுக்கு 262 இலட்சம் தேவைப்படும். எமது விவசாய மக்களுக்காக “எழுச்சிபெறும் பொலன்னறுவை” செயற்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து நாளை முதல் அதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள்.

வெலிக்கந்த பிரதேச மக்கள் பொலன்னறுவை மாவட்ட விவசாய மக்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். விவசாயிகளின் பிரச்சினைகளை நோக்குகையில் அவர்களது வாழ்க்கை முறை, பொருளாதார பின்னணி, எதிர்நோக்கும் சவால்கள் என்பன ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வேறுபடுகின்றன. ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் பிரச்சினைகளை ஒன்றாக நோக்கிய போதிலும் பிரதேச ரீதியில் காலநிலை வேறுபாடுகள் காணப்படுகின்றன. கண்டி, கேகாலை பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகளை விட பொலன்னறுவை, அனுராதபுரம் பிரதேச மக்களின் பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டவை. பொலன்னறுவையிலும் பராக்கிரம சமுத்திர, மின்னேரிய, கவுடுல்ல பிரதேச மக்களின் பிரச்சினைகளை விட வெலிகந்த பிரதேச மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.

டீ.எஸ். சேனாநாயக்க அவர்களின் ஆரம்பகால கமநல குடியேற்றம் பற்றிய எண்ணக்கரு, விவசாய கொள்கையினால் எமது நாட்டின் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட விவசாய குடியேற்ற இயக்கத்தின் வெற்றியை அறுபது, எழுபது வருடங்கள் கடந்ததன் பின்னரே நாம் இப்போது அவதானிக்கின்றோம். அப்பிரதேச மக்களின் பொருளாதாரத்திற்கும் வெலிகந்த பிரதேச மக்களின் பொருளாதாரத்திற்கும் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. வாழ்க்கைத்தரம், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் ஏனையவற்றிலும் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. அவற்றை இனங்கண்டு செயற்படுதல் அவசியமாகும். விவசாயிகளின் சார்பில் உரை நிகழ்த்தியவர் முதலில் என்னை பாராட்டியதுடன் இறுதியாக இரண்டு பிரச்சினைகளை முன்வைத்தார். அது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஒன்று காட்டு யானைகளின் பிரச்சினை மற்றையது பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினை பற்றியதாகும். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தற்போது ஆரம்பகட்ட தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் வனசீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேக்கா ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்ததுடன், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் வனசீவராசிகள் திணைக்களத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து புதிய செயற்திட்டமொன்றை தயாரித்தோம். சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஐயாயிரம் பேரை புதிதாக வனசீவராசிகள் திணைக்களத்திற்கு நியமித்து வனசீவராசிகள் திணைக்களத்தினதும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினதும் அதிகாரிகள் ஒன்றிணைந்து தேவையான இடங்களில் இராணுவத்தினரை நியமிக்கவும் அதனூடாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் நாம் திட்டமிட்டோம். விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும். வனசீவராசிகள் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வனசீவராசிகளின் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு இடையூறின்றி அவற்றை நிர்வகித்தல் போன்ற விடயங்கள் இதற்கு முன்னரை விட சிறப்பாக இடம்பெறும். அதற்கான நிதி குறைபாட்டினை குறிப்பிட்டனர். தேவையான நிதியை பெற்றுக்கொடுத்து அந்த நீண்ட கால பிரச்சினையை நிவர்த்தி செய்தோம். உங்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிலும் இந்த காட்டு யானைகளின் பிரச்சினை காணப்படுகின்றது. அண்மையில் ஒருநாள் புதிய நகரில் உள்ள எனது வீட்டிற்கும் என்னை சந்திக்க யானையார் ஒருவர் வந்திருந்தார். நான் அங்கு இல்லாததால் அவர் திரும்பி சென்றிருந்தார். வெலிகந்தையில் மட்டுமல்ல பொலன்னறுவையிலும் இதே பிரச்சினையே உள்ளது.
மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களில் வருடாந்தம் யானைகளின் எண்ணிக்கையை மாத்திரமன்றி மனிதர்களின் எண்ணிக்கையையும் கருத்திற்கொண்டு நாம் திட்டமிட்டுள்ளோம். இதனூடாக பெரும்பாலும் தற்போதுள்ள சிரம நிலைக்கு தீர்வு காணலாம் என நாம் நம்புகின்றேன். விவசாய திணைக்களம், கமநல திணைக்களம், மகாவலி அதிகாரசபை ஆகியன எமது நாட்டின் விவசாய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக செயற்படும் நிறுவனங்களாகும். விவசாய அமைச்சராக ஐந்து வருடங்கள் நான் பெற்றுக்கொண்ட அனுபவத்துடன் விவசாய அமைச்சு, மகாவலி அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு ஆகியன இணைந்து செயற்படுத்தும் அபிவிருத்தி செயற்திட்டங்களினால் பல்வேறு நன்மைகளை வெகுவிரைவில் நாம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்களினால் தற்போது பல்வேறு வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை எதிர்வரும் 1,2 மற்றும் 3 ஆம் திகதிகளில் திறந்து வைக்கப்படவுள்ளன. இன்று காலை பொலன்னறுவை கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் அதற்கு முறையாக திட்டமிடப்பட்டது. கடந்த மூன்றரை வருட காலமாக பாடசாலை, மருத்துவமனை, விகாரை, குடிநீர், பாதைகள், விவசாய கைத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கமநல சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக செலவிடப்பட்ட நிதியினால் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி விழாவின் ஆரம்பகட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக கட்சி பேதமின்றி சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விமான்கள், உப வேந்தர்கள், கலைஞர்கள் மற்றும் ஏனைய துறைசார் நிபுணர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

எமது நாட்டில் முன்னொருபோதும் எந்த மாவட்டத்திலும் இவ்வாறான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். சில பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்னர் கிராமங்களில் அத்தகைய பாரிய அபிவிருத்தி திட்டங்களின் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது. தமது அன்றாட வாழ்க்கையில் அதிகம் துயரங்களை அனுபவிப்பது விவசாய மக்களே. மிகுந்த துயரங்களை அனுபவிக்கும் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்றே விவசாயிகளின் பிரச்சினையையும் வகைப்படுத்தலாம். அவற்றுள் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவர்கள் அனைவருமே மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் வாழ்க்கையில் அதிக வசதிகளையும் சந்தோசத்தையும் அனுபவித்தவர்கள் அல்ல. உங்களது துயர் மிகுந்த வாழ்க்கையையே உங்கள் பிள்ளைகளுக்கும் அளிக்காது எவ்வாறு அவர்களுக்கு சிறந்த பொருளாதார நிலையுடன் கூடிய வெற்றிகரமான எதிர்காலத்தை வழங்கலாம் என்பதே உங்கள் பிரார்த்தனையாகும் என்பதை நான் அறிவேன்.

இங்கு கருத்துத் தெரிவித்த விவசாயி ஒருவர் குடிநீர் பிரச்சினை தொடர்பாக குறிப்பிட்டார். இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 02 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சீன அரசாங்கத்திடம் கையளித்த செயற்திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பொலன்னறுவை, கிழக்கு மாகாண குடிநீர் திட்டம் என நடைமுறைப்படுத்தப்படும் அந்த திட்டத்திற்காக பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் இவ்வருட இறுதியில் அந்த குடிநீர் திட்டம் சீன அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்படும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
பொலன்னறுவை நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டு அதன் நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிலர் வெளிநாடுகளிலிருந்து வெகு இலகுவாக பணம் கிடைக்கின்றது என நினைக்கின்றனர். நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் 2015 ஆம் ஆண்டில் சீனாவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே சிறுநீரக மருத்துவமனையின் அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுபோலவே இந்த குடிநீர் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக மருத்துவமனைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டதன் பின்னர் உடனடியாக கட்டிட நிர்மாணங்களைக் காணக் கிடைக்காதமையினால் சிலர் அந்த நிர்மாணம் ஒருபோதும் இடம்பெறப் போவதில்லை என தெரிவித்ததாக அறிந்தேன். சீன அரசாங்கத்தின் விலைமனுக்கோரும் முறை எமது நாட்டை விட வித்தியாசமானது. எமது நாட்டில் புதிய நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தவுடனேயே விலைமனுக்களைப் பிரித்து பார்த்து உடனடியாகவே பணிகளை ஒப்படைக்கின்றோம். விலைமனுக்கோரி, நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அது தொடர்பிலான எதிர்ப்புகளை தெரிவிப்பதற்காக மூன்று மாத கால அவகாசம் கொடுக்கின்றனர். அதற்கமையவே குறித்த சீன நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கு நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். வெலிகந்த குடிநீர் திட்டமும் அவ்வாறே ஆரம்பிக்கப்படும். வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் செயற்திட்டங்களின் உண்மையான பயனை பெற பல வருடங்கள் கடக்கின்றன.

ஆகஸ்ட் முற்பகுதியில் உங்கள் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் பலனை வெகுவிரைவில் எம்மால் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் ஆரம்பித்த விவசாய குடியிருப்பு வியாபாரங்களில் அவ்வாறே பலன் பெற்றார். அதேபோன்று காமினி திசாநாயக்க அவர்கள் துரித மகாவலி செயற்திட்டத்திற்கு அமைவாக உங்கள் அனைவரையும் இங்கு குடியேற்றி ஆரம்பித்து வைத்த செயற்திட்டத்தை கடந்த 25, 30 ஆண்டுகளாக நானே நிர்வகித்து வந்தேன். நீங்கள் இப்பிரதேசத்தில் 80 களிலேயே குடியேறினீர்கள். நான் இப்பிரதேச மக்களை சந்தித்து குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கத்துடன் 1968 – 1969 அளவில் அப்போதைய அமைச்சர்களுடன் இங்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன்.

1970ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் கீழ் விவசாயத்துறை அமைச்சராக பணிபுரிந்த ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களால் ஆரம்பித்து வைத்த 400 கமநல சேவைகள் திணைக்களங்களில் ஒரு செயற்திட்டமாகவே இதை நான் கருதுகின்றேன். கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள், கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் வரலாற்றைப் பற்றிக் கூறினார். கடந்த காலங்களில் பிலிப் குணவர்தன, ஹெக்டர் கொப்பேகடுவ ஆகிய அமைச்சர்கள் மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தமைக்கான காரணம் அவர்கள் விவசாயத்திற்காக பல முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டமையாகும். அவர்கள் வழிவகுத்திருந்த சட்டதிட்டங்களை முன்வைத்தே நாம் செயற்படுகின்றோம். புதிய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெற்கு பிரதேசத்தை சேர்ந்தவர். விவசாய அமைச்சை பொறுப்பேற்று சில மாதங்களேயான நிலையில் பாரிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளார். விவசாயத்துறை பிரதி அமைச்சராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த அங்கஜன் அவர்களை நியமித்ததன் காரணம் நாட்டுக்கே எடுத்துக்காட்டான விவசாயிகள் வடக்கில் வசிப்பதாலும், அவர்கள் நீண்ட காலமாக குறைந்த வசதிகளுடன் சிறந்த உற்பத்தியை வழங்கி வருவதனாலுமாகும்.

நான் அவருக்கு தேவைப்படும் அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளேன். எதிர்த்தரப்பினர் எதைக் கூறினாலும் எந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் இலங்கையில் வாழும் விவசாயிகளுக்கும் தேசிய விவசாய பொருளாதாரத்திற்கும் சுபீட்சமான காலமாகவே இக்கால கட்டத்தை நான் கருதுகின்றேன்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக விவசாயத்துறைக்காக நாம் ஆற்றிய பணி தொடர்பில் மஹிந்த அமரவீர அவர்கள் கூறியிருந்தார். முன்பிருந்த அரசாங்கங்கள் வரட்சி காலங்களில் செயற்பட்ட முறை பற்றி அவர் கூறியிருந்தார். 2012ஆம் ஆண்டில் நிலவிய பாரிய வரட்சி காலநிலையை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நான் நினைக்கின்றேன்.

என் வாழ்நாளில் முதன் முறையாக வரட்சி காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் நீர்வற்றி நிலம் பிளவடைந்து இருந்ததை கண்டேன். வடிகாலமைப்பு திணைக்களத்தின் வாகனங்கள் பராக்கிரம சமுத்திரத்தின் மத்தியிலேயே சென்று மண் அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்தது. அக்கால கட்டத்தில் நிலவிய பாரிய வரட்சியுடன் வட மத்திய மாகாண தேர்தலும் அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கால கட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட பல அரசியல் தலைவர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதாகவும் இலவசமாக உரத்தினை வழங்குவதாகவும் பத்திரிகைகளில் விளப்பரப்படுத்தியிருந்தார்கள். ஆனால் தேர்தலின் பின்னர் எதையும் வழங்கவில்லை.

சென்ற ஆண்டு அனுராதபுர பிரதேசத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்றிருந்தேன். குறைந்தபட்சம் அரசாங்க அதிபர் உட்பட எந்த அரச அதிகாரிக்கும் எனது வருகையை நான் தெரிவிக்கவில்லை. நானாகவே வரட்சியினால் பாதிக்கப்பட்ட அந்த கிராமங்களுக்கு சென்றிருந்தேன். அப்பிரதேச மக்களை சந்தித்தேன். சிலர் என் அருகில் வந்து சாப்பிடுவதற்கும் கூட உணவு இல்லை என்றார்கள். அங்கிருந்தே நிதி அமைச்சிற்கும் பிரதமருக்கும் தொலைபேசி ஊடாக அழைப்பினை மேற்கொண்டு எம் மக்களுக்கு உடனடியாக வரட்சி நிவாரணம் வழங்க வேண்டுமென்று கூறினேன். எமது ஆட்சியில் மக்களுக்காக பல கோடிக்கணக்கான ரூபாக்களை நிவாரணமாக வழங்கியுள்ளோம். விவசாயத்துறை அமைச்சர் கூறியதுபோல் எந்த அரசாங்கமும் நாங்கள் வழங்கியது போல் நிவாரணங்களை வழங்கியிருக்க முடியாது.

மாலையில் நீங்கள் தொலைக்காட்சியை பார்வையிடும்போது இவை தொடர்பான எந்த செய்தியும் காணக்கிடைத்திருக்காது. ஊடகங்கள் அரசியல்வாதிகளின் பிரச்சினைகளையும் அரசாங்கம் எதையும் செயற்படுத்தவில்லை என்றும் போலிக் குற்றச்சாட்டுக்களை மட்டுமே ஒலிபரப்பி வருகின்றன. அரசாங்கம் என்ற வகையில் நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து பணிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

இம்மாதம் 23ஆம் திகதி களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு சுப வேளையில் நீர் திறந்துவிடும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. களுகங்கை, மொரகஹகந்த, மேல் எலஹெர, வயம்பெல, வயம்ப கால்வாய் உள்ளிட்ட 2400 சிறிய குளங்களை நிர்மாணிப்பதற்காக 22,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,000 கோடி ரூபா செலவில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொரகஹகந்த, களுகங்கை நீர்த்தேக்கங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி நிதியம், குவைத் நிதியம், சவுதி அரேபிய நிதியம், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தும் எமக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளன. பணத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. குருணாகலையிலிருந்து வடமேல் மாகாணத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் சுரங்க கால்வாய் இலங்கையில் உள்ள ஒரே ஒரு பாரிய சுரங்க பாதையாகும். 21 கிலோ மீற்றர் நீளமான இச்சுரங்கப்பாதை போன்ற செயற்திட்டம் மன்னர் காலத்தில் கூட இடம்பெறவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

சிலர் அரசாங்கம் என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகின்றார்கள். நாங்கள் செய்தவைகள் எதையும் தொலைக்காட்சியில் காண முடியாது. பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு வந்தால் மட்டுமே அவற்றை அவதானிக்க முடியும்.

மொரகஹகந்த, களுகங்கை மற்றும் வயம்ப கால்வாய்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உத்துரு மஹ எல்ல, மேல் எலஹெர செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2400 குளங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக 22,000 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. நீங்கள் தொலைக்காட்சியினூடாக காணும் செய்திகளில் அநேகமானவை உண்மைக்குப் புறம்பானவையாகும். நாட்டின் நன்மை கருதி அரசாங்கம் என்ற வகையில் நாம் செயற்படுத்தும் செயற்திட்டங்களை ஊடகங்கள் ஒளிபரப்புவது இல்லை. குறைகள் மற்றும் பிரச்சினைகளை ஒளிபரப்பினால் மட்டுமே மக்கள் அதிகமாக பார்வையிடுவார்கள். ஊடகங்கள் ஒளிபரப்பும் பொய்யான வதந்திகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சிரச ஊடகத்தை தவிர்த்து மற்ற எந்தவொரு ஊடகமும் என் சார்பில் இருக்கவில்லை. ஏனைய ஊடகங்கள் ஒளிபரப்பிய பொய்யான செய்திகளை மக்கள் நம்பவில்லை என்பதை நான் அனுபவ ரீதியாக அறிவேன்.

சில சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் மேற்கொள்ளும் பல முயற்சிகளை மக்கள் தோல்வியடையச் செய்துள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் விதமான செய்திகள் மற்றும் தகவல்களை ஒளிபரப்புவதாலேயே இவ்வாறு கூற நேர்ந்துள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் அளவிற்கு இந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகவில்லை.

அரசாங்கம் என்ற வகையில் நாம் பல செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். எந்தவிதமான அரசியல் சவாலுக்கும் முகங்கொடுக்க நாங்கள் தயாராகியுள்ளோம். இன்று பொலன்னறுவை மாவட்டத்தில் வெலிகந்த கமநல சேவைகள் திணைக்களத்தை திறந்து வைப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு அதி.வண. மகா சங்கத்தினர் வருகை தந்துள்ளனர். கடந்த பொசன் பௌர்ணமியை முன்னிட்டு திம்புலாகல ஆரண்யத்திற்கு 40 கோடி ரூபா செலவில் பிக்குமார்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான புதிய பிரிவெனா கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து திறந்து வைத்தோம். இலங்கையில் எந்தவொரு பிரிவெனாவிலும் காணக்கிடைக்காத வசதிகள் அப்பிரிவெனாவில் உள்ளன. திம்புலாகல ஆரண்யத்தின் வரலாற்றுச் சிறப்பின் முக்கியத்துவத்தையும் பிக்குகளின் கல்வியால் ஏற்படவிருக்கும் சமூக நலனையும் கருத்திற்கொண்டே நாம் அப்பணியை மேற்கொண்டோம்.

இன்று மாலை இந்நிகழ்வில் கலந்துகொள்ளக்கிடைத்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இங்கு வருகை தந்திருக்கும் அனைவரின் ஆசியினையும் ஒத்துழைப்பினையும் பெரிதும் மதிப்பதுடன் நன்றி கூறி விடை பெறுகின்றேன்.

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.07.10

Web Design by The Design Lanka