போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற » Sri Lanka Muslim

போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற

maithr

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் அதனுடன் சம்பந்தப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற கையொப்பமிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு…..

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி என்ற வகையில் தான் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

பௌத்த சமூகம் என்ற வகையில் மரணதண்டனை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றபோதும் உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் உபதேசங்களை நிகழ்த்தியும் உபதேசங்களை செவிமடுத்தும் வருகின்ற ஒரு சமூகம் இந்தளவுக்கு பிழையான வழிகளில் செல்லுமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (11) முற்பகல் கண்டி கெட்டம்பே விளையாட்டரங்கில் இடம்பெற்ற ”போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். பாடசாலை பிள்ளைகளை போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக கல்வி அமைச்சும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதிலும் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நாட்டில் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடக் காலப்பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலைகள் தொடர்பாக நேற்றைய தினம் தேசிய பாதுகாப்பு சபைக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையை சுட்டிக் காட்டி கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கொலை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக சில ஊடகங்கள் முன்வைக்கும் தவறான ஊடக அறிக்கைகளை சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திகொள்வதாக தெரிவித்தார்.

எவ்வாறானபோதும் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பொருளைப் போன்று சமூக வலைத்தளங்களும் இன்று முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த நிலைமைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கமும் பெற்றோரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.

போதைப்பொருளில் இருந்து விடுதலைப்பெற்ற சிறந்ததோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித்திட்டங்களில் பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டி அவர்களை சமூகத்திற்கு முக்கிய தூதுவர்களாக மாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிக்காக விசேட பங்களிப்புகளை வழங்கிய அரச அதிகாரிகளை கௌரவித்து ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் வாய்ப்புற்று நோய் பிரிவின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அவர்களினால் 20 இலட்சம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, லக்கி ஜயவர்த்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஜனக்க பண்டார தென்னகோன், பந்துல யாலேகம, கண்டி மாவட்ட அரசியல் பிரதிநிதிகள், கண்டி மாவட்ட செயலாளர் எம்.பி.ஹிட்டிசேக்கர உள்ளிட்ட மாவட்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், கிராமத்தை கட்டியெழுப்புவோம் கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1188 கிராம சேவைப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 6000த்திற்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.07.11

Web Design by The Design Lanka