கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் தனியார்துறையின் மூலம் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள் » Sri Lanka Muslim

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் தனியார்துறையின் மூலம் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள்

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் தனியார்துறையின் மூலம் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க உள்ளன.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மத்திய மாகாண செயற்குழு கூட்டம் நேற்று (11) பிற்பகல் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றபோதே இது தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

தங்கி வாழும் மன நிலையிலிருந்து விடுபட்டு மக்கள் சுய முயற்சியில் எழுந்திருப்பதற்கு தேவையான வழிகாட்டல் மற்றும் உதவிகளை வழங்கும் திட்டமாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், தனியார்துறையின் பங்களிப்பில் அது தற்போது மிகவும் வறிய மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக்கொண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கண்டி மாவட்டத்தில் வறுமைச்சுட்டி தற்போது 5.5. ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் வறிய மக்கள் சனத்தொகை 76,429 என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நுவரெலியா மாவட்டத்தின் வறுமைச்சுட்டி 6.3 வீதமாகவும் வறிய மக்களின் தொகை 46,257 ஆகவும், மாத்தளை மாவட்டத்தில் வறுமைச்சுட்டி 3.9 வீதமாகவும் வறிய மக்களின் தொகை 19,359 ஆகவும் உள்ளது.

இந்த மக்களை இலக்காகக்கொண்டு அவர்களது வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராம சக்தி இயக்கத்தினூடாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மாகாண அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இருதரப்பினரும் பங்குபற்றிய இக்கலந்துரையாடலில் மாகாண மக்கள் முகம்கொடுத்துள்ள ஏனைய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு உடனடி தீர்வுகள் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கிராமசக்தி மக்கள் இயக்கம் அரசியல் பேதங்களின்றி அனைத்து மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இதற்கு பொறுப்புணர்வுடன் அனைவரும் ஒன்று சேர வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

வரையறுக்கப்பட்ட மாத்தளை அம்பன் கங்கை, வனிலா உற்பத்தியாளர்களின் கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கும் மெக்கோமிக் நிறுவனத்திற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதுடன், நுவரெலியா மலர் பயிர்ச் செய்கையாளர்கள் கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கும் ஹேலிஸ் நிறுவனத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

அந்த வகையில் உயர் தரம் வாய்ந்த விதைகளை பெற்றுக்கொடுக்கவும் விநியோகஸ்தர்களுக்கு தேவையான பௌதீக வளங்களையும் அறிவையும் பெற்றுக்கொடுக்க ஹேலிஸ் நிறுவனம் உடன்பட்டுள்ளதுடன், அவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான உறுதியையும் அளித்துள்ளது.

வரையறுக்கப்பட்ட கல்கடபத்தன பல்பயிர் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் கிராமசக்தி மக்கள் சங்கம் மற்றும் வரையறுக்கப்பட்ட கியோட்டா கோப்பி நிறுவனத்திற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.

மேலும் கிராமசக்தி மக்கள் சங்கங்களுக்கு வழங்கப்படும் முதலாவது தவணைக்கான ஏற்பாடுகள் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களிடம் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் கண்டி மாவட்டத்திற்கு 60 மில்லியன் ரூபாவும் நுவரெலியா மாவட்டத்திற்கு 15 மில்லியன் ரூபாவும் மாத்தளை மாவட்டத்திற்கு 33 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.

கண்டி ரொட்டரி கழகத்தினால் தலசீமியா நோயாளிகள் பயன்படுத்துவதற்காக அன்பளிப்பு செய்யப்பட்ட பஸ் வண்டி ஒன்று ஜனாதிபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், அதனை ஜனாதிபதி அவர்கள் கண்டி வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளித்தார்.

அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, மத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட மாகாணத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொட்டலிகொட வடக்கு கிராமசக்தி கிராமத்திற்கு சென்று அம்மக்களை சந்தித்தார்.

கெட்டபிட்டிய விகாரையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கொட்டலிகொட கிராமத்தின் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்டன. குடிநீர் பிரச்சினை, வீதி நிர்மாணப் பணிகள், சுகாதாரம் மற்றும் கல்வி, காணி உறுதி பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த அனைத்து பிரச்சினைகளை மிக கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள், இவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் கண்டி மாவட்ட செயலாளர் எம்.பி.ஹிட்டிசேகர உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கொட்டலிகொட கிராம அபிவிருத்தி கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக 15 இலட்சம் ரூபா மற்றும் நில செவன அலுவலகத்திற்கு 20 இலட்சம் ரூபாவை ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொட்டலிகொட கிராமிய வைத்தியசாலையின் குறைபாடுகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், வைத்தியசாலைக்கு தேவையான அம்புலன்ஸ் வண்டி ஒன்றை உடனடியாக பெற்றுக்கொடுக்கவும் உறுதியளித்தார்.

கொட்டலிகொட, கெட்டபிட்டிய பிரிவெனாவின் விகாராதிபதி சங்கைக்குரிய சுமனஜோதி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன், பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.07.12

Web Design by The Design Lanka