காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியுமா? » Sri Lanka Muslim

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியுமா?

_105744647_gettyimages-1125753105

Contributors
author image

BBC

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டதோடு, அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய வேண்டுமா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் ராணுவ ஜெனரல் விகே சிங் ஆகியோர் கூறியுள்ளனர்.

இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவு என்றால் என்ன? ஏன் இதில் இவ்வளவு சர்ச்சை? மற்றொரு முக்கியமான கேள்வி, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய முடியுமா?

சட்டப்பிரிவு 370 எப்படி அமலுக்கு வந்தது?

இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.

1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார்.

காஷ்மீர் மகாராஜாபடத்தின் காப்புரிமைHULTON DEUTSCH
Image captionகாஷ்மீர் மகாராஜா

அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.

1951ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.

சட்டப்பிரிவு 370 – இதன் அர்த்தம் என்ன?

இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவானது, மத்திய அரசுக்கும், ஜம்மு காஷ்மீருக்குமான உறவின் ஒரு எல்லைக் கோடாக பார்க்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஷேக் மொஹமத் அப்துல்லாவும், இது தொடர்பாக ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.

நேருபடத்தின் காப்புரிமைFOX PHOTOS

சட்டப்பிரிவு 370ன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிற, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும்.

இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது.

சட்டப்பிரிவு 370 இருக்கும் காரணத்தினால் –

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்து மக்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது.
  • இந்திய தேசிய கொடி அல்லாது, அம்மாநிலத்துக்கு என்று தனி கொடி உள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

அம்மாநிலத்தின் ‘நிரந்தர குடியாளர்கள்’ யார் என்பதை வரையறுப்பது அரசமைப்பின் பிரிவு 35A. இது சட்டப்பிரிவு 370-ன் ஒரு பகுதியாகும். இதன்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது.

காஷ்மீர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நாட்டில் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 360-ம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

அதாவது அம்மாநிலத்தில் பொருளாதார அவசர நிலையை அறிவிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் கிடையாது. மற்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் மற்றும் வன்முறை நிலவினால்கூட, குடியரசுத்தலைவரால் அவசர நிலை அறிவிக்க முடியாது என்று இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

அரசமைப்பில் இருந்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது சாத்தியமா?

சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான வழக்கு ஒன்றினை 2015ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அரசமைப்பில் இருந்து அதனை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று கூறியது.

அப்போது தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல். தத்து கூறுகையில், “இது நீதிமன்றத்தின் வேலையா? சட்டப்பிரிவு 370-ஐ வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது நீக்க வேண்டுமா என்று நீதிமன்றத்தால் நாடாளுமன்றத்திடம் கேட்க முடியுமா? இது நீதிமன்றத்தில் வேலை இல்லை” என்று கூறினார்.

அதே 2015ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது என ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் கூறியது. “இடைக்கால ஏற்பாடு” என்று அரசமைப்பின் சட்டப்பிரிவு 21ல் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நிரந்தரமானது என்று தெரிவித்திருந்தது.

சட்டப்பிரிவு 370, சரத் 3-ன் படி, இதனை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இது பிரிவு 35A- வை பாதுகாக்கிறது. மற்ற மாநிலங்களை மாதிரி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையவில்லை என்று தெரிவித்த நீதிமன்றம், இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, ஓரளவுக்கு அதன் இறையாண்மையை பராமரித்து வந்ததாக கூறியது.

அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?

2014 மக்களவை தேர்தலின்போது, சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

நீண்ட காலமாக இந்த சட்டப்பிரிவை எதிர்த்து வந்த பாஜக, பின்னர் இது குறித்து ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது.

சட்டப்பிரிவு 370 என்பது அரசமைப்பை உருவாக்கியவர்களால் செய்யப்பட்ட பிழை என்றே பாஜக கருதுகிறது.

ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை பாஜகவின் நிலைக்கு எதிராக உள்ளன.

“இந்தியாவையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் 370 சட்டப்பிரிவு இணைக்கிறது. 370 தொடர வேண்டும். இல்லையென்றால், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது” என்று 2014ஆம் ஆண்டு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்திருந்தார்.

370படத்தின் காப்புரிமைNURPHOTO

சட்டப்பிரிவு 370-க்கு எதிராக போராட்டங்கள் நடந்த போது பேசிய மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முஃப்தி, “இச்சட்டப்பிரவு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட சத்தியம். இந்த சத்தியம் மதிக்கப்பட வேண்டும்” என்றார்.

இச்சட்டப்பிரிவினால் மட்டுமே, ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் இணைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka