மூன்று நிமிடம் தாமதமாக வந்து பகிரங்க மன்னிப்பு கோரிய ஜப்பான் அமைச்சர் » Sri Lanka Muslim

மூன்று நிமிடம் தாமதமாக வந்து பகிரங்க மன்னிப்பு கோரிய ஜப்பான் அமைச்சர்

_105759852_19735e9a-30bd-44d4-862f-4ce8ca4d11d8

Contributors
author image

Editorial Team

(BBC)


ஜப்பானில் நாடாளுமன்ற கூட்டத்துக்கு மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமைச்சர் தாமதமாக வந்து அவரின் பதவிக்கு அவமரியாதை செய்துவிட்டார் என்று கூறி, நடைபெறவிருந்த பட்ஜெட் கமிட்டி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கெடுக்காமல் ஐந்து மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்னதாக, அடுத்தடுத்து அமைச்சருக்கு எதிராக நடைபெற்ற சில நிகழ்வுகளாலும், அவரின் பேச்சுக்களாலும் எதிர்க்கட்சியினர் சகுராடா மீது தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வந்தனர்.

கடந்த வாரம், நீச்சல் போட்டியின் நம்பிக்கை நட்சத்திரமான ரிகாகோ ஐகீ என்ற ஜப்பானிய வீராங்கனை ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரிந்தவுடன் தான் ஏமாற்றம் அடைந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

“ரகாகோ பதக்கம் வெல்லக்கூடிய வீராங்கனை, அவர் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளோம். நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன்” என அவர் தெரிவித்தார். அதன்பிறகு அவ்வாறு அவர் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரப்பட்டது.

2016ஆம் ஆண்டு, வசதியாக வாழும் பெண்கள் ஜப்பானிய போர்படையினருக்கு பாலியல் சேவை செய்வதாக சகுராடா தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்மீது கடும் விமர்சனங்களும் எழுந்தன.

கடந்த வருடம் சைபர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த சகுராடா, தான் கணிணியை பயன்படுத்தியதே இல்லை என்றும், தனது உதவியாளர்கள்தான் அதை செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் சகுராடா பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர்.

ஜப்பானில் கூட்டங்களுக்கு தாமதமாக வருவது, அதிர்ச்சியளிக்கும் ஒரு கலாசார தவறு என்று கருதப்படவில்லை;

இருந்தபோதிலும் எதிர்க்கட்சியினர் சகுராடாவின் சரிவுகள் என்று தாங்கள் கூறும் விஷயங்களை மேலும் வலுப்படுத்த இதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அசாஹி ஷிம்பன் என்ற செய்தித்தாள் ஒன்றால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 65 சதவீதம் பேர் சகுராடா பதவிக்கு தகுயில்லாதவர் என்றும், 13 சதவீதம் பேர் அவர் பதவிக்கு தகுதியானவர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் சகுராடா இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் சைபர் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான தயாரிப்புகளும் சகுராடாவின் கடமைகளில் அடங்குகின்றன.

Web Design by The Design Lanka