உதுமாலெப்பை - வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் சந்திப்பு » Sri Lanka Muslim

உதுமாலெப்பை – வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் சந்திப்பு

CCA01326-7F9A-42D9-9084-EA08066027E5

Contributors
author image

M.J.M.சஜீத்

எம்.ஜே.எம்.சஜீத்

பொத்துவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான சர்வோதய புறத்தில் அமைந்துள்ள அரச காணியில் 10 ஏக்கர் காணி விடுவிப்பு, 4000 ஏக்கர் நீர்ப்பாசனம் பெறக்கூடிய பாரம்பரிய வட மூஸா குளத்தினை புணரமைப்பதற்கான அனுமதி வழங்குதல் தொடர்பாக வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் திரு அனுர சத்துரரு சிங்க அவர்களை முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை வனபரிபாலன நாயகத்தின் காரியாலயத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பொத்துவில் பிரதேசத்தில் சுமார் 41 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருவதுடன் 27 பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களும் மாகாண, தேசிய, சர்வதேச மட்டத்தில் பங்குபற்றி நமது நாட்டிற்கு பெருமை தேடிதந்த விளையாட்டு வீரர்களும் இப்பிரதேசத்தில் உள்ளனர். ஆனால் இப்பொத்துவில் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானம் இல்லாமையினால் பல கஷ்டங்களை நீண்ட காலமாக இப்பிரதேச விளையாட்டு வீரர்களும், பொது மக்களும் கஷ்டப்படுகின்றனர்.

பொத்துவில் சர்வோதயபுறத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அரசுக்கு சொந்தமான காணி 10 ஏக்கரை விடுவித்து வழங்குமாறு பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும், அம்பாறை மாவட்ட காணி பயன்பாட்டு குழுவிலும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினாலும் பொத்துவில் விளையாட்டு மைதானத்திற்கான காணியினை விடுவிப்பதற்கு தீர்மாணம் எடுத்தும் நீண்ட காலமாக இவ்விளையாட்டு மைதானத்திற்கான காணி விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால் அரசாங்கத்தின் மீது இப்பிரதேச மக்கள் அதிருப்தி அடைந்து வரும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் மனிதாபிமான முறையில் பொத்துவில் பிரதேச மக்களின் நன்மை கருதி இக்காணியினை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் இது தொடர்பான முக்கியமான ஆவணங்களையும் கையளித்தார்.

பொத்துவில் மக்களுக்கான பொது விளையாட்டு மைதானத்திற்கான 10 ஏக்கர் காணியினை விடுவிப்பது தொடர்பான தடைகளை குறித்து இது தொடர்பான விபரங்களை கேட்டறிந்த வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் திரு. அனுர சத்திரு சிங்க பொத்துவில் பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கையினை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இக்காணியினை விடுவிப்பதற்கான அனுமதியினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவு செய்வதற்கு பணிப்புரை வழங்கிய வன பரிபாலன பாதுகாப்பு நாயகத்திற்கு பொத்துவில் பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேலை பொத்துவில், லவுகல, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 4000 ஏக்கர் விவசாய காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்க கூடிய பாரம்பரிய குளமான வட மூஸா குளத்தினை புணரமைப்பு செய்வது தொடர்பாக முன்னாள் நீர்பாசன அமைச்சர் திரு. விஜிதமுனி சொய்சாவிடம் தான் வேண்டுகோள் விடுத்த போது நீர்பாசன உயர் அதிகாரிகளை வட மூஸா குளத்திற்கு கள விஜயம் செய்து அறிக்கையினை சமர்பிக்குமாறு பணிப்புரை வழங்கியற்கமைய நீர்பாசன அதிகாரிகள் வட மூஸா குளத்திற்கு விஜயம் மேற்கொண்டு இக்குளம் தொடர்பான அறிக்கையினை சமர்பித்துள்ளனர். வனப் பிரதேசத்தில் அமைந்துள்ள வட மூஸா குளத்தினை புணரமைக்க தங்களின் சிபாரிசினை வழங்கி யுத்த காலத்தினாலும், இயற்கை அணர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பொத்துவில், லவுகல, திருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை கேட்டுக்கொண்டார்.

மாவட்ட வன அதிகாரியின் சிபாரிசு கிடைத்ததும் வட மூஸா குளம் புணரமைப்பதற்கான சிபாரிசினை வழங்கலாம் என வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் திரு அனுர சத்துரரு சிங்க தெரிவித்தார் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

Web Design by The Design Lanka