பயங்கரவாத குழுக்களை ஒடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா-அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தல் » Sri Lanka Muslim

பயங்கரவாத குழுக்களை ஒடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா-அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தல்

india vs pakistan

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா-அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தின.இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே-அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ ஆகியோர் இடையேயான சந்திப்பின்போது இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைக்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ள விஜய் கோகலே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் ஆதரவளிக்கும் எந்தவொரு நாடும் அதற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று கோகலே-மைக் பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற இரு நாடுகளிடையேயான வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையானது (2+2), இந்தியா-அமெரிக்காவின் வியூகம் சார் ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் இருவரும் திருப்தி தெரிவித்தனர்.

அப்போது, புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவுக்காக அந்நாட்டுக்கும், மைக் பாம்பேயோவுக்கும் இந்தியாவின் சார்பில் விஜய் கோகலே நன்றி தெரிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலையை புரிந்துகொள்வதாக மைக் பாம்பேயோ கூறினார்.

பயங்கரவாத குழுக்களை ஒடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அந்நாடு தனது மண்ணில் பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது எனவும் விஜய் கோகலே-மைக் பாம்பேயோ கூட்டாக வலியுறுத்தினர்.

இது தவிர்த்து, ஆப்கானிஸ்தான், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு என பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக இருவரும் கலந்தாலோசித்தனர்.
இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தொடர்பு குறித்து மைக் பாம்பேயோ பேசினார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 3 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் குறைந்து வருவதை குறிப்பிட்ட விஜய் கோகலே, அந்நாட்டுடனான வர்த்தகத்தில் இந்தியா தொடர விரும்புவதாகக் கூறினார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மைக் பாம்பேயோவைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல் விவகாரத் துறை அமைச்சர் டேவிட் ஹாலே, ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரியா தாம்சன் ஆகியோரையும் விஜய் கோகலே சந்தித்து பேசுகிறார்.

விஜய் கோகலே-மைக் பாம்பேயோ சந்திப்பு நடைபெற்ற சூழலில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான பதற்றத்தை தணிப்பதற்காக பாகிஸ்தான் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் எடுத்துரைத்தார்.

Web Design by The Design Lanka