மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் » Sri Lanka Muslim

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்

201903121451241802_High-Court-Madurai-bench-grants-bail-to-Nirmala-devi_SECVPF

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவியை ஜாமினில் விடுதலை செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் மூலம் ஜாமின் பெற்றனர். ஆனால், நிர்மலா தேவியின் ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர், உரிய விசாரணை நடத்தப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின்னர், ஜாமின் கேட்டு நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், செவ்வாய்கிழமை பிற்பகல் நிர்மலாதேவியை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில், 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு நிர்மலா தேவி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை அவரை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டது.

விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு எவ்வித பேட்டியும் அளிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் நிர்மலா தேவி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Web Design by The Design Lanka