ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சட்ட விவாத இறுதிச் சுற்றுக்கு இலங்கை சட்டக் கல்லூரி தெரிவு » Sri Lanka Muslim

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சட்ட விவாத இறுதிச் சுற்றுக்கு இலங்கை சட்டக் கல்லூரி தெரிவு

Oxford

Contributors
author image

Aslam S.Moulana

உலகின் தலைசிறந்த சட்டப் பல்கலைக்கழகமான லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தினால் சர்வதேச மட்டத்தில் வருடாந்தம் நடாத்தப்படும் சட்ட விவாத போட்டியின் இறுதிச் சுற்றில் பங்குபற்றுவதற்கு, சுமார் 11 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.

இதற்காக இலங்கை சட்டக் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி இல்ஹாம் நிஸாம் காரியப்பர் எனும் மாணவனும் ஷெனூன் ஹார்டி எனும் மாணவியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டி நாளை 14ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு மத்தியஸ்தர்களாக பிரித்தானிய உயர் நீதிமன்றங்களின் நீதியரசர்கள் பங்குபற்றவுள்ளார். நிபுணத்துவ சொத்து (intellectual property) சம்மந்தமான சட்டம் தொடர்பில் இவ்விவாதப் போட்டி இடம்பெறவுள்ளது.

உலகளாவிய ரீதியில் அனைத்து சட்ட பல்கலைக்கழகங்களும் இப்போட்டியில் பங்குபற்றுவதற்கான சமர்ப்பணங்களை முன்வைத்து, அதன் அடிப்படையில் 25 பல்கலைக்கழகங்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்படும். இதன் பிரகாரமே இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் அணி, சுமார் 11 வருடங்களின் பின்னர் 2019ஆம் ஆண்டுக்கான இந்த இறுதிச்சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில் அமெரிக்கா, கனடா, பிரித்தானிய, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர் அணிகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka