பொள்ளாச்சி நம்மில் கிளறும் சிந்தனைகள்.. » Sri Lanka Muslim

பொள்ளாச்சி நம்மில் கிளறும் சிந்தனைகள்..

pollachi

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Marx Anthonisamy


அருப்புக்கோட்டை நிர்மலாதேவி பிரச்சினையின்போது நான் எழுதியதை மீண்டும் நினைவு கூர்கிறேன். இதைக் குறிப்பாக ஒருவர், ஒரு கட்சி, ஒரு சாதி என்றெல்லாம் பார்க்காமல் இன்று ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள அறச் சீரழிவு, எல்லாமே வணிகமயமாக்கப்பட்ட நிலை, மேலும் மேலும் உயர்கல்வி வணிகமயமாக்கப்படும் சூழல் எனப் பல அம்சங்கள் இதில் குறுக்கும் நெடுக்குமாக ஊடுபாவி உள்ளதை நாம் கனிக்க வேண்டும். ஒரு நாள் ஒரு கிராமப்புற /அரசு கல்லூரிகளில், கல்லூரி வேலை முடியும் நேரத்தில் போய்ப் பாருங்கள். ஒரு பத்து நிமிடம் நின்று உற்றுக் கவனியுங்கள். பெரும்பாலும் எளிய, கிராமப்புற, அப்பாவிகளாக உள்ள, வசதி வாய்ப்புகளற்ற மாணவர்கள்/ மாணவிகள். …….. இந்த நிலையில் இன்று கல்லூரிகள் தங்கள் செலவைத் தாங்களே சரி செய்து கொள்ள வேண்டும் எனும் நிலை, இனி அரசு உதவி இல்லை எனும் நிலை அரசு கல்லூரிகளுக்கும், அரசுப் பல்கலைக் கழகங்களிலும் நடைமுறைக்கு வந்து விட்டன.

சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். இந்தப் பின்னணியில்தான் இவர்கள் பலிகடாவாக்கப் படுகின்றனர். அரசியல் பலம் உள்ளவர்கள் துகில் உரிகிறார்கள். நவீன தொழில்நுட்பங்கள் எல்லவற்றையும் எளிதாக்குகின்றன.

இவற்றைக் கேலி செய்வதோ, நகைச்சுவையாக்குவதோ, ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை, கட்சியை என்றெல்லாம் அடையாளப்படுத்துவதோ இந்தப் பிரச்சினையில் தொடர்புடைய குற்றவாளிகளை மட்டும் அடையாளம் காணவும், முடிந்தால் தண்டிக்கவும் மட்டுமே உதவும்.

அது வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் அது மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகி விடாது. நாளை இது இன்னொரு கல்லூரி அல்லது ஊரில் இன்னொரு கட்சி, இன்னொரு மந்திரி மகன், இன்னொரு victim எனத் தொடரும்.

இந்தப் பிரக்ஞையோடு இன்றைய பிரச்சினையை நாம் அணுக வேண்டும். இன்றைய குற்றவாளிகளை நாம் அடையாளம் காட்ட வேண்டும்.

இன்றைய குற்றவாளிகளைத் தண்டித்தால் மட்டும் போதாது. எதிர்காலத்தில் இப்படி நடக்காது என நம்மால் உத்தரவாதம் அளிக்க முடியுமா எனபது குறித்த சிந்தனையும் கூடவே நமக்குத் தேவை.

(இதை நான் தட்டச்சு செய்து முடித்துமுகநூலில் வெளியிட்டபின் இன்பாக்சில் எனக்கொரு தகவல் வந்துள்ளது. திண்டுக்கல் அருகில் ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் நடந்துள்ளதாகச் சொல்லப்படு ஒரு பாலியல்சுரண்டம் குறித்த விரிவான தகவல்கள் அதில் உள்ளன).

Web Design by The Design Lanka