ஐ. நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை » Sri Lanka Muslim

ஐ. நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை

maithry

Contributors
author image

Presidential Media Division

… 2019 மார்ச் 14, நைரோபி, கென்யா


கென்யா குடியரசின் ஜனாதிபதி மேன்மைதங்கிய உஹூரு கென்யாட்டா அவர்களே!
பிரான்ஸ் குடியரசின் மேன்மைதங்கிய இமானுவேல் மெக்ரோன் அவர்களே!
பேரவையின் தலைவர் அவர்களே!
கௌரவ அமைச்சர்களே!
மதிப்பிற்குரிய அதிதிகளே!

எனது இந்த விஜயத்தில் எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட அமோக வரவேற்பு மற்றும் உபசரிப்புக்காக கென்ய அரசாங்கத்திற்கும் கென்ய மக்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு இந்த பேரவையை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதனையிட்டு கென்ய அரசாங்கத்திற்கும் ஐ.நா. சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்திற்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

காலநிலை மாற்றம் பற்றிய பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படுவதற்கு முன்னொருபோதும் இருந்திராத அளவு சர்வதேச அர்ப்பணிப்பை கொண்டுள்ள பரிஸ் உடன்படிக்கையில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது. 2019 ஆம் ஆண்டின் சர்வதேச காலநிலை இடர் சுட்டியில் எமது நாடு இரண்டாவது இடத்தில் பட்டியல்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் காலநிலை தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எமக்கு மிகவும் முக்கியமானதாகும்.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய பசுபிக் சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை நிறுவனங்களின் மூன்றாவது மாநாட்டின் பிரதான உரையின்போது நான் குறிப்பிட்டதைப்போன்று, பாதுகாப்பானதொரு சூழலில் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதும் பேண்தகு பூகோள பொருளாதார சுட்டிகளை கட்டியெழுப்பும் சுற்றாடல் ரீதியான வளமான பொருளாதார போக்குகளை அறிமுகப்படுத்துவதும் எமது முதன்மையான பணியாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

பெளத்த தத்துவத்தை பின்பற்றுகின்றவன் என்ற வகையில் இந்த பூவுலகை மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்குமான இடமாக பாதுகாப்பதற்கான பொறுப்பை நாம் கொண்டுள்ளோம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

தலைவர் அவர்களே! வறுமையானது பூகோள சுற்றாடல் பிரச்சினைகளுக்கான குறிப்பிடத்தக்கதொரு காரணியாகும் என நான் காண்கிறேன்.
சுற்றாடல் சீரழிவுகளும் வறுமையும் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் பின்னிப்பிணைந்த இரு அம்சங்களாகும். மனித நடவடிக்கைகளினால் தூண்டப்பட்ட சுற்றுச்சூழல் சீரழிவுகள் வளி, நீர், சமுத்திரம், நிலம் மற்றும் அனைத்து வகையான சூழலியல் முறைமைகளையும் பாதிக்கின்ற பல்வகையான சவால்களை தோற்றுவிக்கின்றன.

மறுபுறத்தில் இந்த பிரச்சினைகள் புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை எமக்கு வழங்குகின்றன. எம்மைப் போன்ற தீவு நாடுகளை உள்ளடக்கிய நாடுகள் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களுக்கு தீர்வாக அமையும் வகையில் ஐ.நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடருக்கான கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டிருப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

“சுற்றாடல் சவால்கள் மற்றும் பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகள்” தொடர்பான அமைச்சரவை பிரகடனத்தை வழிமொழிவதற்காக நாம் இங்கு ஒன்றுகூடியிருக்கின்றோம்.

தலைவர் அவர்களே! எமது நாடு ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் இணைந்து ஐ.நா. சுற்றால் பேரவையின் நான்காவது கூட்டத்தொடருக்கான நான்கு தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்குவதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கண்டல் தாவரங்களின் பாதுகாப்பு, சமுத்திர மாசடைதல் மற்றும் நுண் பிளாஸ்டிக், திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் உணவு விரயமாதல் என்பனவே அவையாகும்.
சுவிச் ஏசியா (SWITCH ASIA) கொள்கை உதவி முன்னெடுப்பின் உதவியுடன் ஒரு பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி கொள்கையை தயாரித்த முதலாவது தெற்காசிய பிராந்திய நாடு நாமே என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சிடைகின்றேன்.

நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வகையில் எனது அரசாங்கத்தின் “நீலப்பசுமை” அணுகுமுறையின் கீழ் பசுமை திட்டத்தை நோக்கிய கொள்கை வகுப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கான பல்வேறு சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

அத்தோடு நகர வழி தர முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையான ஆரோக்கியமானதொரு தேசம் அல்லது தூய வழி 2025 செயற்திட்டம் தூய வழியை உறுதி செய்கிறது.

பெற்றோலியத்தின் அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை ஆகியனவே புகை வெளியேற்றத்திற்கான பிரதான மூலமாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே வாகன இறக்குமதி ‘Euro IV’ நியமங்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

சக்தி வளத்துறையை பொறுத்தவரையில் நாம் சூரிய சக்தி, காற்று, கடலலை மற்றும் உயிர்வாயு போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்தை எமது சக்தி வளத்துறையுடன் கூட்டிணைத்து பெற்றோலியம் மற்றும் அனல் மின் பயன்பாட்டை குறைப்பதற்காக நாம் துரிதமாக செயற்பட்டு வருகின்றோம்.

ஐ.நா. சுற்றாடல் பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடருடன் இலங்கை “ஐ.நா. தூய சமுத்திரங்கள் திட்டத்தில்” இணைந்து தரை மார்க்கமாக சமுத்திரங்கள் மாசடைவதை குறைக்கும் நோக்குடன் ஒரு திட்டத்தினை அபிவிருத்தி செய்துள்ளது. பிளாஸ்டிக் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட கடல் மற்றும் நீர் வள மாசடைதலை தவிர்ப்பதற்கான ஒரு வடிநிலம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கரையோர முகாமைத்துவ அணுகுமுறையை இலங்கை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையில் உயர் அடர்த்தியுடைய பொலித்தீன், சொப்பின் பேக்குகள், லன்சீட்டுகள் போன்ற பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனையை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.

மேலும் திறந்த வெளிகளில் பொலித்தீன் எரிப்பதை தடை செய்வதற்கான சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் நிறைவுபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போது பொதுநலவாய பசுமை சமவாயத்தின் கீழ் கண்டல் தாவரங்களை நடுவதற்கான செயற்குழுவில் முன்நின்று செயற்படுவதற்கு இலங்கை உறுதியளித்திருப்பதுடன், சுமார் 09 ஆயிரம் ஹெக்டெயர் கண்டல் தாவரங்கள் பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தலைவர் அவர்களே! உலகின் முக்கியமான சுற்றுச்சூழல் முறைகளில் ஒன்றான பளிங்குப் பாறைகளை பாதுகாக்கும் விடயத்தில் அனைத்து நாடுகளும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு இலங்கை ஏனைய நாடுகளுடன் ஒரு வலையமைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்குடன் சர்வதேச பளிங்குப் பாறை பாதுகாப்பில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

பளிங்குப் பாறைகளை பாதிக்கின்ற நிலையற்ற மற்றும் அழிவுத்தன்மை வாய்ந்த மீன்பிடி நடைமுறைகளை குறைப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சமுத்திர சூழல் மாசடைதலை கட்டுப்படுத்தும் மூலோபாயம் 2030 உடன் இணைந்ததாக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கையும் கிழக்கையும் இணைக்கின்ற கடல் மார்க்கங்களின் காரணமாக ஏற்படும் மாசடைதல் சவால்களை நாம் இனங்கண்டுள்ளோம்.

பேண்தகு அபிவிருத்திக்கான ஐ.நா.வின் 2030 நிகழ்ச்சி நிரலை அடைந்து கொள்வதற்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பேண்தகு அபிவிருத்திக்கான தனியானதொரு அமைச்சை ஸ்தாபித்த முதலாவது நாடு இலங்கை என்பதுடன் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை இலங்கை அடைந்து கொள்வதை உறுதி செய்யும் வகையில் பேண்தகு அபிவிருத்தி சபையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எமது அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பசுமை நகரமான லக்கலை பசுமை நகரத்தினை 2019 ஜனவரி மாதம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளோம். இந்த புதிய நகரம் மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த பசுமை நகரம் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் காரணமாக இடம்பெயர்ந்த 3000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இது போன்ற இன்னும் பல பசுமை நகரங்களை நிர்மாணிப்பதற்கு நாம் திட்டமிட்டிருக்கிறோம்.

சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையில் 2015 ஆம் ஆண்டு நான் “வனரோபா” என்ற நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தேன். உயிர்பல்வகைமை மற்றும் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாத்தலும் வன வளர்ப்பு முகாமைத்துவத்தையும் ஏனைய பல்வேறு நடவடிக்கைகளையும் ஊக்குவித்தலும் அருகிச் செல்லும் எமது வன அடர்த்தியை 29 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக அதிகரிப்பதுமே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதுடன், இதன் மூலம் நாடளாவிய ரீதியில் மரநடுகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் பல்வேறு அரசாங்க திணைக்களங்கள், நிறுவனங்கள், பாடசாலை பிள்ளைகள் மற்றும் பொதுமக்களின் தன்னார்வ ஒத்துழைப்புடன் சுமார் இரண்டு மில்லியன் மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டு நடப்படுகின்றன. பழ மரக்கன்றுகள் பாடசாலை பிள்ளைகள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் இந்த மரக்கன்றுகளை பாராமரிப்பதற்கான நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன.

இலங்கையின் கிராமப் புறங்களில் வாழும் மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயமே உள்ளது. இது சூழலை மிடுக்காகவும் பசுமையாகவும் வைத்திருப்பதற்கான அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. எமது விவசாயத் துறையில் பேண்தகு நுகர்வு, உற்பத்தி மற்றும் விஞ்ஞான, தொழிநுட்பத்தை ஏற்படுத்த நாம் விரும்புகின்றோம்.
இது கிராமிய மக்களினதும் இந்த செயன்முறையில் ஈடுபட்டுள்ள ஏனையவர்களினதும் பொருளாதார நிலைமையை பலப்படுத்துவதற்கு உதவுவதோடு முழு நாட்டுக்கும் நன்மை பயக்கக்கூடிய விடயமுமாகும்.

இலங்கை விவசாயிகள் எதிர்கொள்கின்ற பாரிய சாவல்களில் ஒன்றாக நிச்சயமற்ற காலநிலை மாற்றங்கள் இருந்து வருகின்றன.
ஒரே வருடத்தில் ஒரு பிரதேசத்தில் பெரும் மழை வெள்ள நிலைமைகள் ஏற்படுகின்ற அதேநேரம், மழையின்றி அதே பிரதேசம் வரட்சியினால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகின்றது. இதனால் வெற்றிகரமாக உள்ளதாக தெரிவிக்கப்படும் “மேக விதைப்பு” அல்லது செயற்கை மழை முறைமையை கைக்கொள்வதைப் பற்றி இலங்கை ஆராய்ந்து வருகின்றது.

அண்மையில் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பல பண்ணை நிலங்களை அழிவுக்குட்படுத்திய ஒரு வகை கம்பளிப் புழுக்களை நாம் கண்டு பிடித்தோம். அவை ஒரு மாத காலப்பகுதியில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட சோளப் பயிர்ச்செய்கையை அழிவுக்குள்ளாக்கியுள்ளது.

இது எமது உணவு உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்த அதேநேரம் சூழலுக்கும் ஒரு பாரிய சவாலாகி இருக்கின்றது.
ஆயினும் இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை சேர்ந்த மூன்று ஆராய்ச்சி குழுக்களினால் இந்த கம்பளிப் புழுக்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

இயற்கை கலாசாரம் மற்றும் மரபுரிமைகளில் வளமான நாடு என்ற வகையில் எமது சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான இயற்கையோடு தொடர்புடைய பேண்தகு வர்த்தக துறைகளில் முதலீடு செய்வதையே நாம் விரும்புகிறோம். அந்த வகையில் ஐ.நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் அதற்கான ஒரு பலமான அடித்தளத்தை வழங்கியுள்ளது.

தலைவர் அவர்களே, எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 18வது CITES மாநாட்டிற்கான உபசரிப்பு வசதிகளை நாம் வழங்கவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

சுற்றாடல் தொடர்பான முயற்சிகளில் முன்நின்று செயற்பட்டுவரும் ஐ.நா. சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்ற அதேநேரம், சிறந்த சுற்றாடல் முகாமைத்துவத்திற்காக இலங்கைக்கு வழங்கிவரும் பெறுமதிமிக்க ஒத்துழைப்புகளை நான் பாராட்டுகின்றேன். இந்த மாநாடு முழுமையாக வெற்றிபெற வேண்டுமென வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
நன்றி.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019-03-14

Web Design by The Design Lanka