தேசிய காங்கிஸிலிருந்து வெளியேறுபவர்கள் பற்றி நாம் அலட்டிக் கொள்வதில்லை . - Sri Lanka Muslim

தேசிய காங்கிஸிலிருந்து வெளியேறுபவர்கள் பற்றி நாம் அலட்டிக் கொள்வதில்லை .

Contributors
author image

எம்.ஏ.றமீஸ்

தேசிய காங்கிரஸ் கட்சி பலரை வளர்த்து உயர்த்தி விட்ட கட்சியாகும். இக்கட்சியில் இருந்த சிலர் தமது தேவைகளுக்காக வெளியேறியுள்ளனர். அவ்வாறு வெளியேறுபவர்கள் பற்றி நாம் ஒரு போதும் அலட்டிக் கொள்வதே இல்லை. நாம் வாக்களித்து நாம் வளர்தவர்கள் எம்மை விட்டு வெளியேறுகிறார்களென்றால் நாம் அதனை கணக்கில் எடுக்க வேண்டிய அவசியமில்லை. காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் குப்பை கூழன்களும் பதறுகளும் பறந்து விடவது சகஜமே இது குறித்து நாம் பெரிது படுத்த வேண்டிய எந்தத் தேவையும் இல்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழுக் கூட்டம் நேற்று(20) மாலைஅட்டாளைச்சேனை மீலாத்நகர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.பி.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாம் எவ்வித தீங்கும் புரியாமல் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேறுகின்றார் என்றால் அவரின் மனநிலையை யாரோ மாற்றியிருக்கிறார் அல்லது அவருக்கு எங்கோ அடி விழுந்திருக்கிறது என்று நினைக்கின்றோம்.

எமது கட்சியின் பிரதித் தலைவராக இருந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கடந்த ஆறுமாத காலத்திற்கு முன்னர் எமது கட்சியின் பேராளர் மாநாட்டைத் தொடர்ந்து கட்சி வெளியேற்றம் பற்றி கதைகள் அடிபட்டன. அதனைத் தொடர்ந்து சில குழுக்கள் அவரை அணுகி முரண்பாடுகளை நீக்கி கட்சிக்குள் மீளவும் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனால் அவர் ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக செயற்படுவதுபோல் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். நாம் அவருக்கு கட்சியில் உயர் அந்தஸ்த்தினைக் கொடுத்து ஒரு அணுவளவேனும் தீங்கு செய்யாமல் வைத்திருந்தோம்.

அவரது வெளியேற்றத்தோடு எமது கட்சிக்குள் இருந்த சில குப்பைகூழன்களும் பதறுகளும் வெளியேறியுள்ளன. எமது கட்சியில் இல்லாத சிலரையும், கட்சியில் வகிக்காத பதவியினையும் விட்டு சிலர் இராஜினாமாச் செய்கின்றேன் என்று ஊடகங்களில் பெரிது படுத்திக் காட்டுகின்றார்கள். எமது கட்சியில் இருந்து நாம் நீண்ட காலத்திற்கு முன்னர் பல குற்றச் செயல்களுக்காக வெளியேற்றிய சிலரை வைத்துக் கொண்டு நாம் வெளியேறிவிட்டோம் என தனக்குத் தானே வாய்ச் சொல்லில் வீரம் காண்பிக்கின்றார்கள். அட்டாளைச்சேனையில் இருந்து எமது கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வையும் அவரது சகோதரருமே வெளியேறியிருக்கின்றார்கள். ஏனைய அனைவரும் எமது கட்சியுடன்தான் இருக்கின்றார்கள்.

எமது தேசிய காங்கிரஸ் கட்சி உண்மையின் பக்கம் நின்று செயற்படும் கட்சியாகும். இக்கட்சியில் இருக்கும் எவருக்கும் நாம் ஒரு சதவீதமேனும் துரோகம் இழைக்கவில்லை. இக்கட்சியில் இருந்து சிலர் தமது தேவைக்காக வெளியேறிவிட்டு கட்சியில் இல்லாத பதவிகளிலிருந்தும் கட்சியில் இல்லாதவர்களையும் கொண்டு இராஜினாமா செய்கின்றேன் என இல்லாத ஒன்றை இருப்பதாக மக்களுக்கு காட்ட முனைகின்றார்கள் இந்த சலசலப்புகளுக்கெல்லாம் நாம் ஒருபோதும் அஞ்சிவிடப் போவதில்லை. காற்று வீசுகிறபோது பறக்கின்ற பதறுகளை எண்ணி நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை.

எமது கட்சியில் இருந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையும், கட்சியின் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து வெளியேறியதாக சொல்கின்றார்கள். ஆனால் தேசிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஒரு சிலரைத் தவிர எல்லோருமே எம்முடனேயே இருக்கின்றார்கள். உதுமாலெவ்வையின் சகோதரரும் உதுமாலெவ்வையுமே இப்போது எமது கட்சியில் காணவில்லை. ஆனால் சில காரணங்களுக்காக வெளியேறியவர்களும், புதியவர்களும் இப்போது எமது கட்சிக்குள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எமது கட்சிக்கு சற்று ‘மழை’ அடித்தது. அந்த மழையில் நனைந்த சில பதறுகள் நீரைக் குடித்துக் கொண்டு தானும் நல்ல நிலையில் உள்ள நெல்லைப் போல் காட்சி தந்தது. பின்னர் வெயில் அடித்தது அந்த வெயிலில் காய்ந்த பதறுகள் காற்றில் பறக்கத் தொடங்கியது. பதறுகள் காற்றுக்கு நிலையாக நிற்க முடியாமல் பறப்பதை எண்ணி நாம் ஒருபோதும் பெரிதாக நினைக்க முடியாது.

அரசியல் என்பது அதிகாரம் எடுப்பதற்காக என்று சில கூட்டம் எம்முள் கூறிக் கொண்டு நாக்கை தொங்கப் போட்டு அலைந்தது. மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் எவ்வித அரசியல் அதிகாரம் இல்லாதிருந்தபோதிலும் சாதாரண ஓர் மனிதராக மட்டுமே இருந்து கொண்டு நாட்டுக்கு பல விளக்கங்களைச் சொன்னார். அதேபோல் தேசிய காங்கிரஸ் கட்சி அமைச்சுக்களை வைத்துக் கொண்டும், அதிகாரம் அற்றபோதும் நாட்டுக்கு பல செய்திகளைச் சொல்லிய வரலாறுகளை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது.

ஏதோ ஓர் காரணத்திற்காக நாம் அதிகாரத்தினை இழந்தபோதிலும் நம்மில் உண்மையும் நேர்மையும் இருப்பது மக்கள் நன்றாக விளங்கி வைத்திருக்கின்றார்கள். இதனால் மக்கள் நம்மை நிச்சயம் நேசிப்பார்கள். நமக்கும் வெற்றி வரும். அரசியல் கட்சியொன்றை வைத்துக் கொண்டு உண்மைகளை உரத்துச் சொல்வதும் ஓர் அரசியல் அதிகாரம் என்பதை எல்லோரும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமது தேசிய காங்கிரஸ் கட்சி குறித்த இலக்குடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது. குறித்த ஓர் இலக்குடனும் இலட்சியத்துடனும் தேசிய காங்கிரஸ் கட்சி நடைபோடுகிறது என்பதற்காக தேசிய காங்கிரஸ் கட்சியினை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சில தரப்பினர் சதி முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

அதாஉல்லா கடந்த காலங்களில் கூறியதெல்லாம் இப்போது நடக்கின்றதென்று மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளார்கள். கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவர் தலைமை வகித்து கிழக்கு மண்ணைப் பாதுகாக்க கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில தரப்பினரால் வேண்டுமென்றே அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சில சதி முயற்சிகள் எமக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்த சதி முயற்சிகளின் ஒரு கட்டமாகவே கடந்த பொதுத் தேர்தலின்போது எமது தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து எவரும் பாராளுமன்றம் செல்லக் கூடாதென்று பல சக்திகள் ஒன்று சேர்ந்து உழைத்து எமது கட்சியினை தோற்கடித்தது. யார் என்ன சதி செய்த போதிலும் நாம் அதிகாரம் இருக்கின்றபோது எவ்வாறு செயற்பட்டோமோ அதேபோல்தான் அதிகாரம் எம்மிடம் இல்லாதபோதும் மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வருகின்றோம்.

எமது உண்மைத் தன்மையின் நிலைப்பாட்டினைப் புரிந்து எமது கட்சியினை அழித்து விட முடியாது என்று புரிந்து கொண்ட சிலர் தற்போது காரணமே இல்லாத சில பிரச்சினைகளை கட்சிக்குள் இருந்து தோற்றுவித்து கட்சியினை அழித்துவிடும் முயற்சிகளுக்காக சிலரது மனநிலைகளில் மாற்றங்களையும் தேவையற்ற பிரச்சினைகளையும் தோற்றுவிக்க முனைகின்றனர்.

இவ்வாறான நிலைமைகளை அறிந்த எமது கட்சிக்காரர்கள் பலர் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கின்றனர். அவர்கள் இருக்கும் வரை எந்த ஓர் சக்தியாலும் எமது கட்சியினை அழித்துவிட முடியாது.

எமது சுயநல இலாபங்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு மறைந்த தலைவர் மர்{ஹம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் கொள்கையினை முன்னிலைப்படுத்தி நாம் தேசிய காங்கிரஸை எப்போது உருவாக்கினோமோ அப்போதிலிருந்து நாடு செழித்தது, வடக்கு கிழக்கு பிரிந்தது. யுத்தம் நிறுத்தப்பட்டது, நாம் வீடுகளிலே நிம்மதியாக நித்திரை செய்வதற்கான சூழல் ஏற்பட்டது.

நமது நாட்டை இன்று நமது நாட்டு மக்கள் ஆழவில்லை. நமது தலைவர்களால் நமது நாடு ஆழப்படவுமில்லை. நமது நாட்டின் ஜனாதிபதிகூடச் சொல்கின்றார் வெளிநாட்டுத் தூதரகங்களில் சிலர் இருந்து கொண்டு நமது நாடு ஆழப்படுகிறதென்று. ஏற்கனவே நமது நாடு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டாயிற்று. வேண்டிய நாடுகள் இலங்கையில் வேண்டிய இடங்களுக்கு வர முடியும். நமது நாட்டையும் சமுதாயத்தினையும் வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு நம் மத்தியில் சில கூட்டம் ஜனநாயகம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றது என்றார்.

02 (2)

03 (2)

Web Design by Srilanka Muslims Web Team