சிலோனை ஸ்ரீலங்காவாக மாற்றிய அரசமைப்பு மாற்றமே எமது நாடு பயங்கர யுத்த பூமியாக மாற வழி அமைத்தது - Sri Lanka Muslim

சிலோனை ஸ்ரீலங்காவாக மாற்றிய அரசமைப்பு மாற்றமே எமது நாடு பயங்கர யுத்த பூமியாக மாற வழி அமைத்தது

Contributors
author image

S.Ashraff Khan

(எஸ்.அஷ்ரப்கான்)

1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிலோனை ஸ்ரீலங்காவாக மாற்றிய அரசியலமைப்பு மாற்றமே எமது நாடு பயங்கர யுத்த பூமியாக மாற வழியமைத்து கொடுத்தது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்
பிரசார செயலாளர் ஐ. எம். ஹாரிப் தெரிவித்தார்.

ஏறாவூரில் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று (21) வியாழக்கிழமை காலை அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு பேசியவை வருமாறு,

தமிழ் தேசிய கூட்டமைப்பு 15 ஆசனங்களை பாராளுமன்றத்தில் வைத்து கொண்டு, அரசாங்கத்தை இறுக்கி பிடித்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு புதிய அரசியலமைப்பை கொண்டு வர பக்குவமாக செயற்படுகிறது. ஆனால் 21 ஆசனங்களை முஸ்லிம்கள் தலைவர்கள் பாராளுமன்றத்தில் வைத்துள்ள நிலையிலும் அரசாங்கத்தை இறுக்கி பிடித்து எதுவுமே செய்ய முடியாதவர்களாய் உள்ளதுடன் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான விடயத்திலும் முஸ்லிம்களின் எதிர்காலத்தை மறந்து செயல்படுகிறார்கள். இவ்விடயத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் தொடர்ச்சியான மௌனம் எமது அச்சத்தை அதிகரிக்கிறது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசப்பட்ட அரசாங்கத்தின் பங்காளிகளாக இருப்பதால் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கவோ அல்லது மக்களுக்கு இது தொடர்பான விளக்கத்தை வழங்கவோ முடியாதவர்களாக உள்ளார்கள்.

அரசியலமைப்பில் மாற்றங்கள் வருகிறபோது அது சமூகத்தில் புரிந்துணர்வுள்ள நல்ல மாற்றங்களையே கொண்டு வர வேண்டும். ஆனால் 1942 இல் இருந்து சுமார் 19 தடவைகள் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள் நல்ல எதிர்பார்ப்புக்கு எதிராகவே அமைந்தன. முஸ்லிம் சமூகத்துக்கென இருந்தவைகூட அம்மாற்றங்களால் இல்லாமல் போயின. எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த கால பகுதியில் கிழக்கில் முஸ்லிம்களுக்கென காணப்பட்ட பிரதேசங்களும், எல்லைகளும், காணிகளும், அதிகாரங்களும் இன்று இல்லை. 1956 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் கிழக்கில் புதிதாக உருவாக்கப்பட்டது என்பதும் இதில் முக்கிய அம்சமாகும்.

அரசியலமைப்பு மாற்றங்கள் முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை கடலரிப்புகளை போன்றவை. கடலரிப்புகளால் நிலத்தை இழப்பது போல் அரசியலமைப்பு மாற்றங்களால் பல பகுதிகளில், பல விடயங்களை எமது சமூகம் இழந்து கொண்டே இருக்கின்றது. இனியும் அதே போன்று தான் நடக்கவும் போகிறது என்பதில் எந்த மாற்று கருத்துக்களும் இல்லை. 1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிலோனை ஸ்ரீலங்காவாக மாற்றிய அரசியலமைப்பு மாற்றமே எமது நாட்டை ஒரு பயங்கர யுத்த பூமியாக மாற வழியமைத்து கொடுத்தது என்பதில் தவறில்லை.

அண்மையில் வழங்கப்பட்ட முஸ்லிம் ஆளுநர்கள் விடயத்தில் சகோதர இனத்தவர்களும், பேரினவாத கட்சிகளும் விருப்பமின்மையை வெளிப்படுத்தின. நிலைமை இப்படி இருக்கின்றபோது கிழக்குக்கு கரையோர மாவட்டத்தையோ அல்லது நில தொடர்பற்ற இந்தியாவின் பாண்டிச்சேரியை ஒத்த மாகாணம் அல்லது அலகையோ முஸ்லிம்களுக்கு தர யார் சம்மதிக்க போகிறார்கள்? எமது சமூகத்துக்கு அதை பெற்று தரவும் யாருமில்லை, பெருந்தலைவர் அஷ்ரப்புக்கு பிறகு அதை கேட்டு பெறவும் எவருமில்லை. முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு முன்வந்து பெற்றாலே ஒழிய எமக்கு முஸ்லிம் தேசியம் என்கிற வரத்தை வழங்க சாமியும் தயாரில்லை, பூசாரிக்கும் உடன்பாடில்லை.

எனவேதான் மாகாண சபைகளுக்கான அதிகார பரவலாக்கத்தை அதிகரிக்கும் வகையில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ள புதிய அரசியலமைப்பு மாற்றம் மாகாணமே இல்லாத முஸ்லிம்களுக்கு 09 மாகாணங்களிலும் கையேந்தி நிற்க வேண்டிய நிலையையே ஏற்படுத்தும். முஸ்லிம்களுக்கு பாதகமாக அமைகின்ற இந்த அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு ஆதரவு வழங்க முடியாது என்பதால் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு இந்த அரசியலமைப்பு மாற்றத்தை நிராகரிக்கின்றது என்பதை அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்துகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team