பிரபாகரனின் மிலேச்ச பயங்கவாதம் இருந்த காலப்பகுதியி்ல் பொலிஸாரும் - Sri Lanka Muslim

பிரபாகரனின் மிலேச்ச பயங்கவாதம் இருந்த காலப்பகுதியி்ல் பொலிஸாரும்

Contributors
author image

Presidential Media Division

மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை…. 2019-03-27
பொலிஸ் சேவை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இருந்தபோதிலும் பொலிஸ் சேவையானது மக்கள்நேய பொலிஸ்சேவை என்றே அழைக்கப்படுகின்றது. இது நூற்றுக்கு 99 வீதம் நிறைவேற்றப்படுவதைப் போன்று சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் அந்த கொள்கையிலிருந்து விலகிச் செல்லும் சந்தர்ப்பங்களும் உள்ளன. என்றாலும் இந்த நாட்டிலுள்ள அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்களை எடுத்துக்கொண்டால் பொலிஸ் என்பது மிகத் தெளிவாக மக்களுடன் தொடர்புபட்ட ஒரு நிறுவனமாகும். பொலிஸ் என்பது இராணுவம் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். பொலிஸ் என்பது அரசாங்கத்தின் ஒரு திணைக்களமாகும். என்றாலும் பிரபாகரனின் மிலேச்ச பயங்கவாதம் இருந்த காலப்பகுதியி்ல் பொலிஸாரும் சாதாரண சிவில் கடமைகளுக்கு புறம்பாக யுத்தத்திற்கு முன்னுரிமையளித்து முப்படையினருடன் இணைந்து பயங்கரவாதத்தை தோல்வியுறச்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் 30 வருட யுத்தத்தில் பொலிஸார் முகங்கொடுத்த பாரிய அனர்த்தமாக அமைந்தது. 1980 களின் பின்னரைப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 பொலிஸ் அதிகாரிகள் ஒரே இரவில் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.

இன்று மனித உரிமைகள், ஜனநாயக சுதந்திரம் பற்றி பேசுகின்றவர்கள் பிரபாகரனின் பயங்கரவாதத்தின் மூலம் பிரபாகரன் இழந்த மனித உரிமையை பற்றியதாகும். மனித உரிமை பற்றிப் பேசுவதானால் அனைவருடைய மனித உரிமைகளை பற்றியும் பேச வேண்டும். உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு, காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழு இவை அனைத்தும் சர்வதேசத்தின் ஊடாக வந்திருப்பது எமக்கு சேவை செய்வதற்காகவல்ல. நாட்டுக்கு வெளியில் இன்னும் செயற்பட்டு வரும் சர்வதேச எல்ரீரீஈ வலையமைப்பிற்கு சேவை செய்வதற்காகவேயாகும் என்பதை நான் தெளிவாக கூறுகின்றேன்.

அண்மையில் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர்கள் பல இடம்பெற்றதை நீங்கள் அறிவீர்கள். மனித உரிமைகள் ஆணைக்குழு நாம் வழங்கும் சரியான தகவல்களை போன்றே அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் பிழையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கைகளை வெளியிடுகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சரியானவற்றை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அதிலுள்ள பிழையான விடயங்களை அரசாங்கம் என்ற வகையில் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித உரிமைகள் ஆணையாளரின் இவ்வருட அறிக்கையில் வடக்கிலும் கிழக்கிலும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரால் முகாம்களாக பயன்படுத்தப்பட்ட அப்பிரதேச மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவற்றை விடுவிப்பதற்கு சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கூறப்பட்டுள்ளது. அவர் அந்த கருத்தை தெரிவித்திருப்பதற்கான காரணம் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்களேயாகும் என நான் நம்புகிறேன். நாம் எந்தவொரு சுயாதீன ஆணைக்குழுவையும் அமைக்கப்போவதில்லை. எங்கேனும் சொல்லப்படுகின்ற விடயங்களுக்கு எமது அரசியலமைப்பில் இடமில்லை.

வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவருவது தொடர்பான பிரச்சினைகள் ஆரம்பத்திலிருந்து தெரிவிக்கப்படுகின்றது. நான் கடந்த சில வருடங்களாக நாட்டினுள்ளேயும் ஐநா சபையிலும் எனது உரைகளின்போது வெளிநாட்டு நீதிபதிகள் எமது நாட்டில் வழக்குகளை விசாரணை செய்வதற்கு இடமளிக்க முடியாதென்பதை கூறிவந்துள்ளேன்.

அதேபோன்று கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி இந்த அரசாங்க தரப்பிலுள்ள பிழையான தீர்மானங்களின் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் எனக்கு தெரியாமலும் என்னுடன் கலந்துரையாடாமலும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இணையனுசரணை வழங்கி கைச்சாத்திடப்பட்டிருப்பது எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதுபற்றி நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரியாது. வெளிவிவகார செயலாளருக்கும் தெரியாது. நாட்டின் வெளிநாட்டு கொள்கை, சர்வதேச தொடர்புகள் மற்றும் சர்வதேச செயற்பாடுகள் பற்றிய பொறுப்பு ஜனாதிபதி்க்கேயன்றி அதற்கு கீழுள்ள பதவி நிலையில் உள்ளவர்களுக்கு உரியதல்ல. அதுபற்றி அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே எனக்குத் தெரியாமலும் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரியாமலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் பெப்ரவரி 25ஆம் திகதி இலங்கைத் தூதுவர் ஜெனீவாவில் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பில் எனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.

எமது நாட்டில் இவ்வாறான நிகழ்வுகள் இப்படித்தான் இடம்பெறுகின்றன. என்றாலும் அதன்பின்னர் ஜெனீவா ஆணைக்குழுவிற்கு செல்லவிருந்த பிரதிநிதிகளை நான் மாற்றினேன். அதற்கான பிரதிநிதிகள் என்னுடன் கலந்துரையாடாமல் நியமிக்கப்பட்டனர். எனவே தான் அவர்களை நான் மாற்றினேன். குறிப்பாக அரச அதிகாரியல்லாத ஒருவர் நல்லிணக்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக கைச்சாத்திட்டு ஜெனீவா தூதுவரிடம் அனுப்பி அதற்கேற்பவே பெப்ரவரி 25ஆம் திகதி இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது நாட்டின் முப்படையினரையும் இலங்கை அரசாங்கத்தையும் இலங்கை மக்களையும் காட்டிக்கொடுத்த செயலாகவே நான் கருதுகிறேன். இதனை நான் நாட்டு மக்களுக்கு தெளிவாக கூறுகிறேன்.

நாம் நாடு என்ற வகையில் செயற்படுகின்றபோது நாட்டின் சுயாதீனத்தன்மை பேணப்பட வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் அரசாங்க நடவடிக்கைகளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த நாட்டை 1505 முதல் ஆக்கிரமித்திருந்த ஏகாதிபத்தியவாதிகள் அன்றைய ஆக்கிரமிப்பு தன்மையை நூறு வீதமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இத்தகைய சந்தர்ப்பங்களின்போது நாம் சுயாதீனமான தேசம் என்ற வகையில் எழுந்திருக்க வேண்டும். எமது நூற்றுக் கணக்கான வருடங்கள் பழைமையான வரலாறு பற்றி நாம் அறிவோம். 1505 முதல் 1948 ஆம் ஆண்டு வரை இங்கு இருந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். நாட்டுக்காக உயிர்த் தியாகங்கள் செய்யப்பட்டன. மகாசங்கத்தினர் உள்ளிட்ட சிவில் சமூகத்தினரும் இராணுவத்தினரும் நாட்டுக்காக உயிர்த் தியாகங்களை செய்தனர். 1818ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டம் பற்றி வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாட்டின் ஆவணங்களில் கிளர்ச்சியில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் கிளர்ச்சியாளர்கள் அல்ல. அவர்களை அவ்வாறு அறிமுகப்படுத்துவது தவறாகும். இவர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசப்பற்றாளர்கள். எனவே அந்த உன்னத தேசிய மரபுரிமை பற்றி நாம் எமது விளக்கத்திற்கு முரணாக செயற்படுவதற்கு தயாராக இல்லை என்பதை தெளிவாக கூற வேண்டும்.

நாம் 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்ததைப் போன்று வெளிநாட்டவர்களுக்கு அடிமைப்பட்டிருக்க தயாராக இல்லை. எமக்கு பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. உலக நாடுகளில் இருந்து நாம் வளங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் பல விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். என்றாலும் இந்த நாட்டின் அரச நிர்வாகம், சட்ட நிர்வாகம் மற்றும் அரசியலமைப்பை நாட்டு மக்களின் தேவைக்கேற்ப நாட்டு மக்களின் விருப்பத்தின் பேரில் அல்லாது வேறு எந்த வகையிலும் அதனை மாற்றுவதற்கு நான் தயாராக இல்லை. ஜெனீவாவுக்கு அனுப்பவிருந்த தரப்பினரை நான் முழுமையாக மாற்றினேன். இக்குழுவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன. மஹிந்த சமரசிங்க, பேராசிரியர் சரத் அமுனுகம, வெளிவிவகாரச் செயலாளர் அவர் ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அவரையும் வட மாகாண ஆளுநரையும் நானே அனுப்பி வைத்தேன்.

திலக் மாரப்பன இம்முறை ஜெனீவா மாநாட்டில் ஆற்றிய உரையை இதனைத் தான் நீங்கள் பேச வேண்டும் எனக் கூறி நாமே எழுதிக் கொடுத்தோம். அதனைத் தான் அவர் பேசினார். பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் ஹைபிரிட் நீதிமன்றத்தினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டதாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. அந்த விடயத்தை கலந்துரையாடி நாம் தான் உட்புகுத்தினோம். இல்லையென்றால் இத்தகையதோர் உரை அங்கு நிகழ்த்தப்பட இருக்கவில்லை. இது முற்றிலும் மாறுபட்ட உரை அங்கு நிகழ்த்தப்படவிருந்தது.
இந்த நாட்டின் சில அரசியல் பிரிவுகள் அந்த உரைக்கும் ஜெனீவாவில் எதிர்ப்பை வெளியிட்டன. சில திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்திருந்தனர்.

என்றாலும் நாம் ஒன்று சேர்ந்து திலக் மாரப்பனவுக்கு உரையை தயாரித்துக் கொடுத்தோம். இதோ இந்த உரைக்கு வெளியே எதனையும் கூற வேண்டாம். ஹைபிரிட் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை நாம் அந்த உரையில் உள்ளடக்கியிருந்தோம். நான் இதனைக் கூறுவது எமக்கு இருக்கின்ற உள்ளக மற்றும் வெளி அழுத்தங்கள் பற்றி இந்த நாட்டு மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதனாலாகும். எனவே மீகஹதென்ன கிராமத்திற்கு வருகைதந்து இந்த பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கக்கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பொலிஸ் அதிகாரிகளில் இந்த சீருடைக்கு பின்னால் இருக்கின்ற 99.9 வீதமானவர்கள் எம்மைப் போன்ற சாதாரண குடும்ப பின்னணிகளை கொண்டவர்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்களின் சேவைக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை. வீதிகளில் அவர்கள் பல மணி நேரங்கள் சேவை செய்கின்றார்கள். சில போது சில பெரிய மனிதர்கள் வீதியில் செல்கின்றபோது தவறொன்றை இழைத்துவிட்டு வாகனத்தை நிறுத்தினால் அதற்கு ஏசிக்கொண்டுதான் செல்கிறார்கள். மனிதாபிமானமே முக்கியமானதாகும். கற்றவர்கள் என்பதால் அதற்கு வெளியில் சென்றுவிட முடியாது. என்றாலும் சில பரீட்சையில் சித்திடைந்தவர்களுக்கு இத்தகைய எண்ணம் ஏற்படுத்துவதில்லை. அவர்களிடம் அறிவு கிடையாது. இந்த நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் சுமார் 80,000 பேர் பொலிஸ் திணைக்களங்களில் பணியாற்றுகின்றனர். இந்த நாட்டில் முப்படைகளிலும் சுமார் மூன்று இலட்சம் படை வீ்ரர்கள் உள்ளனர்.

03ஆம் திகதி முதல் நாம் ஆரம்பித்துள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் புதியதோர் அத்தியாயத்தை படைக்க இருக்கிறோம். முழு தேசமும் உறுதிமொழியெடுக்கின்ற நிகழ்ச்சித்திட்டத்தை நாம் அமைத்துள்ளோம். அதேபோன்று போதைப்பொருள் சுற்றி வளைப்புகள், போதைப்பொருள் ஒழிப்பு போன்று 03ஆம் திகதி புதியதோர் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம். ஏப்ரல் 03ஆம் திகதி முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பொலிஸார், முப்படையினர், சுங்க அதிகாரிகள், ஏனைய நிறுவனங்கள், மதுவரித் திணைக்களம், பாடசாலை பிள்ளைகள், அரசாங்க அதிகாரிகள் என அனைவரும் இந்த உறுதிமொழியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முழு நாட்டிலுமுள்ள பாடசாலைப் பிள்ளைகள் அவர்களது பாடசாலைகளில் இந்த உறுதிமொழியை மேற்கொள்ள உள்ளனர். அரசாங்க அதிகாரிகள் தமது அலுவலகங்களிலும் ஏனைய வேலைத்தளங்களில் உள்ளவர்கள் அந்த இடங்களிலும் உறுதிமொழியை மேற்கொள்வதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது சிறந்ததோர் சமூகத்தை உருவாக்குவதாகும். அனைவரும் இந்த பொறுப்பை அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று 1505 முதல் 1948 வரை வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள் மூலம் நாம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தோம். எவ்வளவு உயிர்கள் பலியாகின. எவ்வளவு சொத்துக்களை இழந்தோம். 16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களையும் கொலை செய்ய வேண்டும் என வெள்ளை இன ஏகாதிபத்திய வாதிகள் கட்டளையிட்டிருந்தனர். அதன்பின்னர் சுமார் 30 வருடங்கள் நீடித்த மிலேட்ச பிரபாகரனின் பயங்கவாதத்தின் காரணமாக அதனைப் பார்க்கிலும் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இருந்தன. இவையனைத்தை பார்க்கிலும் சட்டவிரோத மதுபானத்தினால் நாட்டில் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றி நாம் மறந்து விடக்கூடாது. இன்று பாடசாலைப் பிள்ளைகளும் பல்கலைக்கழக மாணவர்களும் இதற்கு பலியாகியுள்ளனர். சில முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் கூட பலியாகியிருக்கின்றனர். இது ஒரு பாரிய தேசிய பிரச்சினையாகும். எனவே தான் மகாசங்கத்தினதும் ஏனைய சமயத் தலைவர்களினதும் ஆலோசனைகளுடன் இந்த போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது ஒரு இலகுவான விடயம் அல்ல.

மாலைத்தீவு நாட்டை இதிலிருந்து மீட்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 40 வீதமானவர்கள் சட்டவிரோத போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். பிலிப்பைன்ஸில் அந்நாட்டின் ஜனாதிபதி 28,000 பேர்களை கிராமிய பாஷையில் கூறுவதானால் பலியெடுத்து போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க வேண்டியிருந்தது. பிலிப்பைன்ஸ் அரசாங்கம் போதைப்பொருளை வி்ற்பனை செய்பவர்களை மட்டுமன்றி விநியோகிக்கின்றவர்கள், அதனை பயன்படுத்துகின்றவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இவ்வாறுதான் அப்பிரச்சினை அங்கு ஒழிக்கப்பட்டது.

எமது விசேட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளுகின்றபோது எவ்வித உபகரணங்களோ, தொழிநுட்ப உபகரணங்களோ இல்லாமல் அதனை வெற்றிகொண்டு வருகின்றனர். உலகில் அனைத்து நாடுகளும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு நவீன தொழிநுட்ப உபகரணங்களை பயன்படுத்துகின்றன. எனினும் இந்ந நாட்டில் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருந்தவர்கள் கடந்த 30, 35 வருடங்களில் இந்த தொழிநுட்ப உபகரணங்களை பெற்றுக்கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்திருக்காது. நான் கடந்த 03 மாத காலப்பகுதியில் தொழிநுட்ப உபகரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அவற்றை கொண்டு வந்து பொருத்தினால் கடல் மார்க்கமாக நாட்டினுள் கொண்டு வரப்படுகின்ற சட்டவிரோத போதைப்பொருட்கள் நாட்டில் எங்கிருந்த போதும் அந்த தொழிநுட்ப உபகரணம் அதனை காட்டிக்கொடுத்துவிடும்.

எனவே இந்த தொழிநுட்ப உபகரணங்கள் கடந்த 25, 30 வருடங்களில் எமது அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுக்காமையும் போதைப்பொருள் கடத்தற்காரர்களின் தேவையை நிறைவேற்றியிருக்கின்றது என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன். பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான முன்னாள் அரசியல்வாதிகள் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று சலூட் அடிக்கும் வேலையை தான் செய்திருக்கிறார்கள். செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை. எனவே பொலிஸுக்கு தேவையான வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அரச அதிகாரிகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் சேவையில் ஈடுபடுவது சிரமமாகும். நான் பொலிஸ் திணைக்களத்தை பொறுப்பேற்றது முதல் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நடாத்திய முன்னேற்ற கூட்டங்களின்போது 30 நிலையங்களுக்கு ஒரு வாகனம் கூட இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு வேலை செய்ய முடியுமா? நான் அந்த இடத்திலேயே அதற்கான கேள்விப் பத்திரத்தை கோரி வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தேன்.

எனவே பொருளாதார, அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் எமக்கு முன்னாள் இருக்கின்ற சவால்களை விளங்கிக்கொண்டு சிறந்ததோர் தேசத்தை கட்டியெழுப்புவற்காக எமது மக்களுக்காகவும் எமது எதிர்கால தலைமுறைக்காகவும் சுபீட்சமான தேசத்தை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனக் கேட்டு விடைபெறுகிறேன். நன்றி
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2019-03-28

Web Design by Srilanka Muslims Web Team