• போதைப்பொருள் சவால்களை எதிர்கொள்வதற்குரிய உள ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளது - Sri Lanka Muslim

• போதைப்பொருள் சவால்களை எதிர்கொள்வதற்குரிய உள ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளது

Contributors
author image

Presidential Media Division

பெரும் அழிவுகளை ஏற்படுத்திவரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலானது பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினரால் மேற்கொள்ளப்படும் கைதுகள், தேடுதல்கள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றினால் மூலமாக மாத்திரம் கட்டுப்படுத்த முடியாத அளவில் காணப்படுவதோடு, குடும்ப கட்டமைப்பு முதல் சமூக கட்டமைப்பு வரையான பரந்தளவிலான உள ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அதற்கான பிரவேசமாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஒட்டுமொத்த நாட்டினரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” ஏப்ரல் 03ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை உருவாக்குவதற்கான சித்திரை மாத உறுதிமொழி தொடர்பில் அரச அதிகாரிகள் உள்ளிட்ட சகல துறைகளினரையும் தெளிவுபடுத்துவதற்காக நேற்று(28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள், நியாயாதிக்க சபைகளின் பிரதானிகள், பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலானது இன்று மிகவும் அபாயகரமான நிலையை அடைந்து சமூகத்தை சீரழித்து வருவதுடன் எதிர்கால சந்ததியினருக்காக அதனை தடுக்கும் பொறுப்பினை நிறைவேற்றுவதில் அனைவரும் தாமதமின்றி ஒன்றிணைய வேண்டுமெனவும் தெரிவித்தார். போதைப்பொருட்களை முற்றுமுழுதாக சமூகத்திலிருந்து இல்லாதொழிக்க முடியாதாயினும் அது துரிதமாக பரவிச் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் சமயம் சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்களும் இன்றியமையாதவை என்றும் குறிப்பிட்டார்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவொன்றினை ஸ்தாபிக்குமாறு அரசாங்கம் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களிலும் ஆலோசனைகளை வழங்கியுள்ளதோடு அச்செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதன் அவசியம் பற்றி ஜனாதிபதி அவர்கள் இதன்போது நிறுவனத் தலைவர்களுக்கு வலியுறுத்தினார்.

தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள சகல, அரச கூட்டுத்தாபன, நியாயாதிக்க சபைகளின் தலைவர்கள், ஏனைய ஆளணியினர் ஆகியோரின் தொடர்ச்சியான பங்களிப்புடனும் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவ மாணவிகளின் பங்குபற்றுதலுடனும் போதையிலிருந்து விடுபட்ட நாட்டிற்கான சித்திரை மாத உறுதிமொழி ஏப்ரல் 03ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது. அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்ப்பண வைபவம் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளதோடு, அனைத்து உத்தியோகத்தர்களும் அதனுடன் இணைந்ததாக தமது நிறுவனங்களில் இருந்தவாறு சித்திரை மாத உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் இணைந்துகொள்ளவுள்ளனர். இதன்போது ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். அத்தோடு போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்திற்கு அனைவரும் தமது உண்மையான பங்களிப்பினை வழங்கி, தாமதமின்றி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் தேவை குறித்து நிறுவனத் தலைவர்கள் தெளிவுபடுத்தவுள்ளனர்.

அத்தோடு நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களும் தமது பாடசாலைகளிலிருந்தே இந்த சித்திரை மாத உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைசல் முஸ்தபா, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பாதுகாப்புத் துறை பிரதானிகள் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.03.28

Web Design by Srilanka Muslims Web Team