கல்முனையில் போதைக்கெதிரான போருக்கு முழுமையாக ஒத்துழைப்போம் - Sri Lanka Muslim

கல்முனையில் போதைக்கெதிரான போருக்கு முழுமையாக ஒத்துழைப்போம்

Contributors
author image

Aslam S.Moulana

கல்முனையில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள்களுக்கு எதிரான போருக்கு கல்முனை மாநகர சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனையில் செயற்படும் சிவில் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகள், நேற்று கல்முனை மாநகர முதல்வரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், அம்பாறை மாவட்ட உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி, செயலாளர் அஷ்ஷெய்க் நாஸிர் கனி, கல்முனை போதை ஒழிப்பு செயலணியின் செயலாளர் டொக்டர் எம்.எச்.றிஸ்வின், பிரதிச் செயலாளர்கள் எஸ்.எல்.அஸீஸ், என்.எம்.நௌஷாட், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனைகளை முற்றாக ஒழிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நடவடிக்கைகளுக்கு கல்முனை மாநகர சபை வழங்கக் கூடிய பங்களிப்பு குறித்தும் ஆராயப்பட்டது. மாநகர சபையின் பொதுச் சபை அமர்வொன்றில் இவ்விடயம் தொடர்பிலான பிரேரணையொன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டும் என அமைப்புகளின் பிரதிநிதிகளினால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபை அமர்வில் கௌரவ உறுப்பினர் சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் அவர்களினால் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டு, அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் இது விடயத்தில் வர்த்தகர்களை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் பொருட்டு சில இறுக்கமான அறிவுறுத்தல்களுடன் மீண்டும் ஒரு முறை அவ்வாறான பிரேரணையை சபையில் கொண்டு வந்து, நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

“எமது இளைஞர்களினதும் மாணவர்களினதும் எதிர்கால சந்ததியினரதும் நலன்களைக் கருத்தில் கொண்டு இங்குள்ள சிவில் அமைப்புகளினால் கல்முனையில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கவையாகும். இது ஒரு பாரிய போராகும். இதில் முன்னிற்பவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பாரிய வலைப்பின்னலுடன் மிகவும் சூட்சுமமாக இயங்கி வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்கின்ற நிலைமையிலேயே இதனைக் கட்டுப்படுத்த வேண்டியவர்களின் செயற்பாடுகளைக் காண்கின்றோம். எவ்வாறாயினும் சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு கல்முனை மாநகர சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்” என்று முதல்வர் ஏ.எம்.றகீப் உறுதியளித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team