ஹக்கீம் - ஹரீஸ் மோதல் உக்கிரம்! இருவரின் முடிவிலும் திடீர் திருப்பம்!! - Sri Lanka Muslim

ஹக்கீம் – ஹரீஸ் மோதல் உக்கிரம்! இருவரின் முடிவிலும் திடீர் திருப்பம்!!

Contributors
author image

Editorial Team

ஹக்கீமின் நிபந்தனையால் முஸ்லிம்கள் அதிர்ச்சி


சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை இன்று முஸ்லிம் அரசியல் அரங்கில் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்முனை மாநகர மேயராக இருந்த – சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிபை எவ்வித நியாயமான காரணங்களுமின்றி அப்பதவியிலிருந்து அகற்றியதை அடுத்தே சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை அவ்வூர் மக்களால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

சிராஸ் மீராசாஹிபை அப்பதவிலிருந்து அகற்றுவதன் மூலம் ஹரீஸையும் சிராஸையும் எதிரியாக்கிவிடலாம் என்ற ஹக்கீமின் ஆரம்பக்கட்டத் தப்புக்கணக்கே இந்தப் பிரச்சினை இந்தளவு தூரம் விஸ்வரூபம் எடுக்க காரணமாயிற்று.

சிராஸூம் ஹரீஸூம் மோதிக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்த ஹக்கீமுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. சிராஸ் இறுதியில் மக்கள் காங்கிரஸில் இணைந்தார்.

அதன் பின்னர் சாய்ந்தமருதினைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலையும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸையும் மோதவிட்டு கல்முனைத் தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹக்கீம் எடுத்த அடுத்த கட்ட முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. இறுதியில் ஜெமீலும் மக்கள் காங்கிரஸிற்குப் பாய்ந்தார். கடைசியாக ஹரீஸை எதிர்க்க எஞ்சியிருந்த ஜவாத்தும் மக்கள் காங்கிரஸ் பக்கம் ஓடிவிட்டார்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் ஹரீஸைப் பழி வாங்கும் நோக்குடன் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை ஒரு துருப்புச் சீட்டாக கையில் எடுத்தார் ஹக்கீம்.

கல்முனைத் தொகுதியில் செல்வாக்கு மிக்கவராக ஹரீஸ் இருப்பதும் கட்சியின் பிரதித் தலைவராக இருப்பதும், ஹக்கீமைப் பொறுத்தவரையில் மிகவும் உறுத்தலான விடயமாகவே இருந்தது. ஹரீஸின் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தாலும் அவரும் ஹக்கீமுக்கு உறுத்தலாகவே இருந்திருப்பார். இந்த நிலையில் தான் ஹரீஸை ஒரு பொறிக்குள் மாட்டிவிட வேண்டும் என்ற நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரக் காலத்தின் போது நாட்டின் பிரதமர் ரணிலை கல்முனைக்கு அழைத்து வந்த ஹக்கீம் – ரணிலைக் கொண்டே சாய்ந்தமருதுக்கான நகர சபைக்கோரிக்கையை முன்மொழியச் செய்து கல்முனைத் தொகுதியில் தனது செல்வாக்கை ஆழப்பதிப்பதற்கு திட்டம் தீட்டினார்.

இதன் பிற்பாடு தான் ஹரீஸால் எமது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை நிறைவேற்றப்படாது, மாறாக முகா தலைவரினால் தான் நிறைவேற்ற முடியும் என்று நம்பிய சாய்ந்தமருது மக்கள் – மேற்படி ரணிலின் வாக்குறுதியின் பிற்பாடு இக்கோரிக்கை தொடர்பில் அதி தீவிரம் காட்டத் தொடங்கினர்.
இவ்வாறு ஹக்கீம், சாய்ந்தமருது மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை விதைத்து விட்டு புத்தளத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது ‘ரணிலை அழைத்து வந்து சாய்ந்தமருது மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியால் நான் படும் பாடு எனக்கே தெரியும்’ என்று நக்கல் கலந்த தொணியில் பேசினார். அதன் பிற்பாடு சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையில் இருந்து முற்றாக விலகிக் கொண்டார்.

மட்டுமன்றி சாய்ந்தமருது மக்களின் கோரிக்கைக்கு முழுமையான எதிரி ஹரீஸ் என்று வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நிரலையும் ஹக்கீம் முடிக்கிவிட்டார். அந்த அடிப்படையில் தான் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சையும் ஹரீஸிற்கு வேண்டுமென்றே பெற்றுக் கொடுத்தார்.

ஹக்கீமின் முடிவில் திடீர் திருப்பம்
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தொடர்பில் ஹக்கீமிடம் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அந்த திடீர் மாற்றத்தின் உச்சவெளிப்பாடு நேற்றிரவு (29-03-2019) இடம்பெற்ற முகாவின் உயர்பீடக் கூட்டத்தில் தெளிவாக அம்பலமாகியது.

இந்தக் கூட்டத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை ஒன்றை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மேற்படி கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது போன்று காணப்பட்டது. தனக்கு சாதகமானவர்களைக் கொண்டு ஹரீஸை மிகவும் காரசாரமாகத் தூற்ற அனுமதித்த ஹக்கீம், இறுதியில் முக்கிய ஒரு நிபந்தனையுடன் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தினார்.

இங்கு உரையாற்றிய உயர் பீட உறுப்பினர் எஹியாகான், சாய்ந்தமருது விடயத்தில் தடையாக இருப்பது ஹரீஸ் தான் என்றும் தலைவர் அவர்கள் ஹரீஸின் பேச்சைக் கேட்காமல் சாய்ந்தமருது விடயத்தில் சாய்ந்தமருதுக்கு சார்பாக முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் ஆகியோர் சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்கு எதிராக கடுமையான முறையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்திய போது கூட்டத்தில் சலசலப்பு மேலோங்கியது.

‘ஆயுதம் ஏந்தியவர்களாக சாய்ந்தமருதுக்குள் நுழைந்து தேர்தலைச் செய்து காட்டுவோம்’ என ஆரிப் சம்சுடீனும் பிர்தௌஸூம் முழங்கினர். 

இவை எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஹக்கீம், சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் ஒன்றை வழங்குவதற்கு நான் முழு ஆதரவும் வழங்குகிறேன். ஆனால்…. என்று கூறி அவர் அடுத்து முன்வைத்த நிபந்தனை கல்முனைத் தொகுதி முஸ்லிம்களை மட்டுமன்றி அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக அமைந்திருந்தது.

அதாவது ‘கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு தனியான பிரதேச செயலகத்தை வழங்குவதென்றால் மாத்திரமே சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றத்தை நான் வழங்குவதற்கு இணங்குவேன்’ என்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத உயர்பீடத்தினர் பெரும் ஆத்திரமும் ஆவேசமும் அடைந்தனர். எனினும் அவர்கள் ஹக்கீமுக்கு எதிராக வாய் திறக்க முடியாமல் மௌனிகளாகினர்.

கல்முனை முஸ்லிம்கள் அதிர்ச்சி
ஹக்கீமின் மேற்படி நிபந்தனை வடக்கு, கிழக்கில் வாழுகின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புலம்பெயர் தமிழ்ச் சக்திகளுக்கும் அடிமைப்படுத்துவதாக அமைந்துள்ளது. கல்முனை முஸ்லிம்களின் விருப்புக்கு மாற்றமாக ஹக்கீம் எடுத்துள்ள மேற்படி தமிழ் மக்களுக்கான தனிப் பிரதேச செயலகம் என்பது ஒட்டுமொத்த கல்முனை முஸ்லிம்களையும் காட்டிக் கொடுக்கும் ஈனச் செயலாகும் என கல்முனை முஸ்லிம்கள் கோஷம் எழுப்புகின்றனர்.

ஆண்டாண்டு காலமாக கல்முனை முஸ்லிம் சமுகம் போசித்து வந்த தமது பூர்வீகக் காணிகளையும் உடமைகளையும் வர்த்தக நிலையங்களையும் அடாத்தாக தமிழ் பிரதேச செயலகத்திற்குள் கொண்டு வருவதற்கான புலம்பெயர் தமிழர்களின் ஏஜண்டாக ஹக்கீம் மறைமுகமாகச் செயற்படுவதையே இது சுட்டி நிற்பதாக ஆவேசம் கொள்கின்றனர்.

ஹரீஸை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, ஹரீஸூடன் கொண்ட அரசியல் கோபதாபங்களுக்காக முகா தலைவர் ஹக்கீம் – கல்முனை முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக பலிக்கடாவாக்குவது மிகவும் கண்டனத்திற்கும் ஆத்திரத்திற்கும் உரியது.

வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்த்து நிற்கும் முகா தலைவர் ஹக்கீம், கல்முனைத் தொகுதி முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப்போவதில்லை.

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது. ஹரீஸை எதிர்த்தென்றாலும் அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கான தனிப் பிரதேச செயலகம் வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் சாய்ந்தமருது மக்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டுள்ளமையானது முஸ்லிம் சமுகத்திற்கான உச்சக் கட்ட துரோகமாகவே பார்க்கப்படுவதாக கல்முனை முஸ்லிம்கள் மேலும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

ஹக்கீம் – ஹரீஸ் மோதல் உக்கிரம்
இவ்வாறான நிலையில் நேற்றைய உயர்பீடக் கூட்டத்தின் பிற்பாடு முகா தலைவர் ஹக்கீமுக்கும் – முகாவின் பிரதித் தலைவரான ஹரீஸூக்குமிடையில் இது காலவரை இருந்து வந்த உட்பூசல் பாரியளவில் வெடிக்க ஆரம்பித்துள்ளது. உயர் பீடக் கூட்டத்தில் ஹரீஸ் கலந்து கொள்ளாத போதிலும் கூட்டத்தின் பின்வரிசையில் அமர்ந்திருந்த முகா முக்கியஸ்தர் ஒருவர் ‘ஹரீஸை முகாவை விட்டு விரட்டுங்குள்’ என்று கோஷமிட்டதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஹரீஸின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு
முகா தலைவர் ஹக்கீமின் தமிழருக்குச் சார்பான தான்தோன்றித் தனமான தீர்மானம் பொதுவாக கல்முனை வாழ் முஸ்லிம்களையும் குறிப்பாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஆதரவாளர்களையும் பெரும் ஆத்திரத்திற்கும் ஆவேசத்திற்கும் உட்படுத்தியுள்ளது.

ஹரீஸின் ஆதரவாளர்கள் இது தொடர்பில் இரகசிய சந்திப்புக்கள் சிலவற்றை இன்று காலை முதல் கல்முனைப் பகுதியில் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது. அதன்படி கல்முனை முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கும் ஹக்கீமை விட்டு உடனடியாக பிரியுமாறு ஹரீஸை வலியுறுத்துவது என்றும் மாற்றுக் கட்சி ஒன்றுடன் இணைவது குறித்து அழுத்தம் கொடுப்பது என்றும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

மாற்றுக் கட்சி ஒன்றுடன் இணைவது என்பது தமிழர்களிடமிருந்து கல்முனையைப் பாதுகாப்பது மற்றும் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றத்தைப் பெற்றுக் கொடுப்பது என்ற கோஷத்தைக் கொண்டதாக மாற்றுக் கட்சியுடனான ஹரீஸின் இணைவு அமையும் என நம்பப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் முகா எம்பிக்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார் முகா தலைவர் ஹக்கீம். குறித்த கூட்டத்தில் ஹரீஸ் விரும்பினாலோ விரும்பாமல் விட்டாலோ கல்முனை தமிழ் மக்களுக்கு தனிப் பிரதேச செயலகம் வழங்குவதற்கு ஆதரவளிப்பது என்றும் அதேபோன்று சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் வழங்குதல் என்ற முடிவையும் ஹக்கீம் எடுக்கவுள்ளார் என்றே நம்பகரமாகத் தெரிய வருகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team