பிரான்ஸ் தூதுவர் - வடமாகாண ஆளுநர் சந்திப்பு - Sri Lanka Muslim

பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Contributors
author image

ஊடகப்பிரிவு

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் Eric LAVERTU அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை உற்சாகமாக வரவேற்ற கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் வடமாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையில் பாரியதொரு மாற்றம் இன்னும் ஏற்படாமல் அவர்கள் இன்றும் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அடிப்படையிலான வழிமுறைகளை மேற்கொள்ள முயற்சி செய்து வருவதாக ஆளுநர் அவர்கள் பிரான்ஸ் தூதுவருக்கு தெரிவித்ததுடன், இந்த மாற்றத்தை ஏற்படுத்த பிரான்ஸ் அரசினால் மேற்கொள்ளக்கூடிய உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்ப்பிரச்சனை காணப்படுவதுடன் அதனை நிவர்த்தி செய்வதற்கு சாத்தியமான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் இந்த நீர்ப்பிரச்சனையை தீர்ப்பதற்கு தற்போது 4பிரதான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதை குறிப்பிட்ட ஆளுநர் அவர்கள், இவற்றிற்கு பிரான்ஸ் நாட்டினால் வழங்கக்கூடிய உதவிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆராயுமாறு பிரான்ஸ் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், வடமாகாண இளைஞர்கள் மத்தியில் சமூக கலந்துரையாடல்களை ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்களின் திரையிடல்களை ஒழுங்குசெய்யுமாறு ஆளுநர் அவர்கள் பிரான்ஸ் தூதுவரிடம் இந்த சந்திப்பின்போது கேட்டுக்கொண்டார்.

ஆளுநருடனான இந்த சந்திப்பு மிகுந்த ஆக்கபூர்வமாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டிய பிரான்ஸ் தூதுவர், பிரான்ஸ் நாட்டினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய உதவிகள் திட்டங்கள் குறித்து ஆராய்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

Web Design by Srilanka Muslims Web Team