பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி - மஹிந்த ராஜபக்ஷ குற்றச்சாட்டு - Sri Lanka Muslim

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி – மஹிந்த ராஜபக்ஷ குற்றச்சாட்டு

Contributors
author image

BBC

இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்களை நிரந்தரமான சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியபோது, மஹிந்த ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அரசாங்கத்தால் புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, மிகவும் பாரதூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை, ஊடக சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் கலந்துரையாடல்

அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்படுமானால், தாம் ஆட்சிப்பீடம் ஏறியவுடன், அந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

இதேவேளை, வில்பத்து பகுதியில் காடுகளை அழிப்பதற்கு அனுமதியை, தனது ஆட்சிக் காலத்தில் வழங்கவில்லை எனவும் அவர் கூறினார்.

எனினும், அண்மை காலத்தில் வில்பத்து பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு, புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், போர் முடிந்தவுடன் தமது அரசாங்கம் வட மாகாணத்தில் தேர்தலை நடத்தியதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அதனூடாக வட மாகாண மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கலந்துரையாடல் கடிதம்

எனினும், தற்போதைய அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை கோராதிருப்பது கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த குற்றச்சாட்டு குறித்து, ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமானை பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக முஜுபூர் ரகுமான் தெரிவித்தார்.

எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்திலுள்ள சரத்துக்களை நிரந்தர சட்டமாக்கும் தீர்மானம் எதுவும் கிடையாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அந்த குழுவினர் தற்போது விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துக்கள் நிரந்தரமாக்கப்படும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டை, ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமான் நிராகரித்தார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான காவிந்த ஜயவர்தனவிடமும் பிபிசி தமிழ் வினவியது.

சட்டத்தை தன்னகத்தே கொண்டு ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, தற்போது சட்டத்தின் மீது அக்கறை ஏற்பட்டுள்ளது ஆச்சரித்திற்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை செயற்படுத்தும் தேவை தமக்கு கிடையாது என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, தற்போதுள்ள சட்ட வரையறைக்குள் மக்களின் நலன்களை பேணும் தேவையே தமக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அச்சுறுத்தலை காண்பித்து, அரசியல் செய்யும் தேவை ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு கிடையாது என நாடர்ளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team