மருதமுனை வீட்டுத்திட்டத்தை பயனாளிகளுக்கு உடனடியாக கையளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு - Sri Lanka Muslim

மருதமுனை வீட்டுத்திட்டத்தை பயனாளிகளுக்கு உடனடியாக கையளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Contributors
author image

அகமட் எஸ். முகைடீன்

மருதமுனை மற்றும் நுரைச்சோலை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்திட்டங்கள் பயனாளிகளுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளமை தொடர்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று (3) புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மருதமுனை வீட்டுத்திட்டத்தில் கிட்டத்தட்ட 80 வீடுகள் எந்தவித காரணங்களுமின்றி பல வருடங்களாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதாகவும், இவற்றுக்கான பயனாளிகள் நேர்முகப் பரீட்சையின் மூலம் அரசாங்க அதிபரினால் தெரிவுசெய்யப்பட்டு பயனாளிகளின் பட்டியல் தயார் நிலையில் உள்ளபோதிலும் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளதாகவும் ஜனாதிபதியிடம் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மருதமுனையில் அமைக்கப்பட்டுள்ள அவ்வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதில் ஏன் தாமதப்படுத்தியது என ஜனாதிபதி அரசாங்க அதிபரை கண்டிப்புடன் கேட்டார். அத்தோடு மேலும் தாமதப்படுத்தாமல் உரிய பயனாளிகளுக்கு உடனடியாக கையளிக்குமாறு உத்தரவிட்டதோடு இதனைத் துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநரை கேட்டுக்கொண்டார்.

நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் தொடர்பில் நீதிமன்ற வழக்கு இருப்பதனால் இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் பேசிவிட்டு அடுத்த கூட்டத்தில் மீண்டும் ஆராய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team