காச நோயற்ற தேசத்தினை உருவாக்குவதற்கு சகல தரப்பினரும் முன்வரவேண்டும் - Sri Lanka Muslim

காச நோயற்ற தேசத்தினை உருவாக்குவதற்கு சகல தரப்பினரும் முன்வரவேண்டும்

Contributors
author image

S.Ashraff Khan

இந்த நாட்டிலே வாழுகின்ற சகல மக்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கின்ற ஒரே நோக்கின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் சுகாதார அமைச்சின் ஊடாக, இலவச சுகாதார சேவையினை வழங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் ஆரோக்கியமாக வாழுகின்ற போதுதான் எமது நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுத்தீன் தெரிவித்தார்.

உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய மார்பு நோய் கிளினிக் பிரிவும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையும் இணைந்து ஏற்பாடு செய்த காசநோய் தொடர்பான விழப்புணர்வுக் கருத்தரங்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில்அண்மையில்  இடம்பெற்றது.

காச நோயற்ற பொத்துவில் பிரதேசத்தை உருவாக்க நாம் ஒன்றினைவோம் எனும் தொனிப்பொருளில், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.ரஜாப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே வாழுகின்ற சகல மக்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக வாழுகின்ற போதுதான் எமது நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும். அதற்காக இலங்கை அரசாங்கம் அதிகூடுதலான நிதியினை செலவு செய்து இலவச சுகாதார சேவையினை வழங்கிக்கொண்டிருக்கிறது.

உலக காச நோய் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 24ஆம் திகதி நிணைவு கூறப்படுகிறது. காச நோயானது இன்று பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. காச நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் முறையான சிகிச்சையினை பெறுகின்ற போது தான் அதனை முற்றாக குணப்படுத்த முடியும். இலங்கையிலே கிட்டத்தட்ட 3000-4000 வரையான காச நோயாளர்கள் வருடா வருடம் இணங்கானப்படுகின்றனர்.

காச நோயற்ற பொத்துவில் பிரதேசத்தை உருவாக்க நாம் ஒன்றினைவோம் எனும் தொனிப்பொருளில், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கு மிகவும் பெருமதியானதாகும். எமது கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொத்துவில் பிரதேசத்திலேதான் அதிகமான காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்கருத்தரங்கின் ஊடாக இங்குள்ள மக்கள் அதிகம் நன்மையடையக்கூடும் என எதிர்பார்க்கின்றோம். அதன் காரணமாகவே காச நோய் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

காச நோய் தொடர்பான பரிசோதனைகளை செய்ய சகல வைத்தியசாலைகளிலும், ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. எனவே காச நோய் தொடர்பான அறிகுறிகள் அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு சென்று ஒவ்வொருவரும் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ள முடியும். குறிப்பாக ஒவ்வொருவரும் தமக்கு காச நோய் உள்ளதா இல்லையா? என்பதனை பரிசோதனை செய்து அறிந்துகொள்வதன் மூலம் காச நோயை முற்றாக ஒழிக்க முடியும்.

காச நோயற்ற ஒரு தேசத்தினை உருவாக்குவதற்கு சகல தரப்பினரும் பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும். சுகாதார துறையினரால் மாத்திரம் இந்த நோயினை ஒழிக்க முடியாது. குறிப்பாக பொதுமக்களுடைய ஒத்துழைப்பே மிகவும் அவசியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரீ.எம்.மர்சூக், கல்முனை பிராந்திய மார்பு நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர், பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் மற்றும் வைத்திய அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கின் போது கல்முனை பிராந்திய மார்பு நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர், காச நோய் தொடர்பாக விளக்கமளித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team