அறுவைக்காடு பிரதேச மக்களுடன் ஜனாதிபதி, பிரதமர் பேச வேண்டும் ; பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim

அறுவைக்காடு பிரதேச மக்களுடன் ஜனாதிபதி, பிரதமர் பேச வேண்டும் ; பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்

Contributors
author image

ஊடகப்பிரிவு

அறுவைக்காடு பிரச்சினை தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சு நடாத்த வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம் (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த திட்டம் விஞ்ஞான பூர்வமாக முன்னெடுக்கப் படுவதாக கூறினாலும் மக்களுக்கு இது தொடர்பில் சந்தேகங்கள் இருப்பதால் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு சுற்றுலா மற்றும் மகாவலி அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது.

திண்மக்கழிவு பிரச்சினைக்கு தீர்வாக அறுவைக்காட்டில் திட்டம் அமைக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி சபையில் கருத்து தெரிவித்தார். இந்த பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையிலும் அதற்கு வெளியிலும் நானும், அமைச்சர் றிசாத் பதியுதீனும், பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவும் பிரதேச மக்களின் எதிர்ப்பு தொடர்பாக தெளிவுபடுத்தி இருக்கிறோம். இந்த திட்டத்தை அப்பிரதேச சகல மதத் தலைவர்களும் எதிர்க்கின்றனர். இந்த திட்டத்தை செயற்படுத்த முன்னர் அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடனும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சு நடத்த அவகாசம் வழங்க வேண்டும். மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் உரிய தரப்பினருடன் பேசி அவர்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.

வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது. பொதுமக்களின் இடங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளதால் சிவில் சமூகம் பாதிக்கப்படுகிறது. சிலாவத்துறையில் பொதுமக்களின் காணியில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கடற்படை முகாமை அகட்ட வேண்டும். மீனவர் பிரதேசங்களும் விடுவிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். கல்குடா இராணுவம் முகாமை கிரானுக்கு மாற்ற பொருத்தமான இடம் அடையாளங்காணப்பட்டுள்ளது. ஆனால் தேவையில்லாத நபர்களின் தலையீட்டினால் இதனை ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் புன்னக்குடா என்பது பாசிக்குடாவைப் போன்று முக்கிய சுற்றுலா பிரதேசமாகும்.

Web Design by Srilanka Muslims Web Team