காஷ்மீரில் காவிக் கொடியில் இருந்து பச்சைக் கொடிக்கு மாறிய பாஜக - முஸ்லிம் வாக்காளர்களை கவரவா? » Sri Lanka Muslim

காஷ்மீரில் காவிக் கொடியில் இருந்து பச்சைக் கொடிக்கு மாறிய பாஜக – முஸ்லிம் வாக்காளர்களை கவரவா?

_106342859_03e1a161-a97c-4851-b9d3-d0791f88b618

Contributors
author image

BBC


ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான ஷேக் காலித் ஜஹாங்கிரின் தேர்தல் விளம்பர போஸ்டர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் வந்துள்ளது. அதில் காவி நிறத்திற்கு பதிலாக பச்சை நிறத்தில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் பாஜகவின் வேட்பாளர் காலித் ஜஹாங்கிருக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

காஷ்மீரில் பாஜக தனது பாரம்பரிய காவி நிறத்தில் இருந்து, பச்சை நிறத்திற்கு மாறியிருப்பது இதுவே முதல்முறை.

அந்த விளம்பர போஸ்டரின் மேற்பகுதியில் பிரதமர் நரேந்திர மோதியின் புகைப்படம் உள்ளது.

இந்த விளம்பரங்கள் ‘கிரேட்டர் காஷ்மீர்’ மற்றும் ‘காஷ்மீர் உஸ்மா’ ஆகிய இரு முக்கிய உள்ளூர் செய்தித்தாள்களில் இடம் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு செய்தித்தாள்களுமே காஷ்மீர் பள்ளத்தாக்கில் பலராலும் படிக்கப்படுவதாகும்.

காஷ்மீரில் காவிக் கொடியில் இருந்து பச்சைக் கொடிக்கு மாறிய பாஜக - முஸ்லிம் வாக்காளர்களை கவரவா?படத்தின் காப்புரிமைTWITTER

விளம்பரத்தின் நிறம் மட்டும் பச்சையாக இல்லாது, பாஜக என்ற கட்சியின் பெயரும் பச்சை நிறத்திலேயே காணப்பட்டது. அக்கட்சியின் சின்னமான தாமரை எப்போதும் போல வெள்ளை நிறத்தில் இருந்தது.

காஷ்மீரில் ஏற்கனவே பாஜக வெற்றி பெற தொடங்கிவிட்டதாகவும், அதனால்தான் பச்சை நிறத்தை தேர்ந்தெடுத்ததாகவும் அம்மாநில பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் தாக்கூர் கூறுகையில், “இதில் புதிதாகவோ அல்லது வியப்பாகவோ எதுவுமில்லை. நீங்கள் பாஜக கொடியை கவனித்திருந்தால், அதில் பச்சை நிறம் இருக்கும். பாஜக கொடியில் பச்சை மற்றும் காவி நிறங்கள் இருக்கும். அமைதி மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக பச்சை நிறம் இருக்கிறது. இங்கு நகராட்சி அமைப்பு தேர்தல்களில் பாஜக எப்படியான வெற்றியை பார்த்தது என்பதை அறிந்திருப்பீர்கள்.

காஷ்மீரின் முஸ்லிம் பெரும்பான்மையினர் பாஜகவை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது. காஷ்மீரின் பாஜக கொடியில் பச்சை நிறம் இல்லாமல் இருந்தது. ஆனால், எங்கு எந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டாலும், அதில் பச்சை நிறம் சேர்க்கப்படுகிறது. எனினும், பாஜகவுக்கு நிறங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அனைவரும் ஒன்று, அனைவருக்கும் முன்னேற்றம் என்பதையே பாஜக நம்புகிறது” என்றார்.

காஷ்மீரில் காவிக் கொடியில் இருந்து பச்சைக் கொடிக்கு மாறிய பாஜக - முஸ்லிம் வாக்காளர்களை கவரவா?படத்தின் காப்புரிமைEPA

இது பொதுமக்களை கவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையா என்று கேட்டபோது, “இல்லை. மக்கள் ஜனநாயக கட்சிக் கொடி முழுவதும் பச்சை நிறம்தான். தேசிய மாநாடு கட்சிக் கொடியின் நிறம் சிவப்பு. பாஜக கொடியில் மட்டும்தான் அனைத்து மதத்தின் நிறங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. வெற்றியின் நிறம்தான் பச்சை. எங்கள் வெற்றியை தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மற்றுமொரு பாஜக தலைவரும், ஜம்மு காஷ்மீர் பாஜகவின் மாநில பொதுச் செயலாளருமான ஆஷிக் கவுல், நிறங்கள் குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்று கூறினார்.

பாஜகவின் பாரம்பரிய காவி நிறத்தை பற்றி கேள்வி எழுப்பியபோது, “பாஜகவுக்கு பாரம்பரிய நிறம் என்று ஒன்று கிடையாது. அனைவரும் ஒன்று, அனைவருக்கும் வளர்ச்சி என்பதுதான் எங்கள் அடையாளம். அதில் எந்த தவறும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான ஒமர் அப்துல்லா, “காஷ்மீர் மாநிலத்தை அடையும்போது மட்டும் பாஜகவின் காவி நிறம், பச்சையாக மாறுகிறது. வாக்களர்களை முட்டாள் ஆக்குவதற்கா? அல்லது தன்னைத் தானே முட்டாள் ஆக்கிக் கொள்வதற்கு இதனை செய்கிறதா என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் அரசியலில் பச்சை நிறம் எப்போதும் ஒரு உணர்ச்சிகரமான பங்கை ஆற்றியுள்ளது என்றும் இந்த நிறமாற்றம் அம்மாநில மக்களை கவரத்தான் என்றும் சில விமர்சகர்கள் நம்புகின்றனர். பச்சை நிறம் மதம் மற்றும் இஸ்லாமையும் அடையாளப்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளரான ஹரூன் ரெஹ்ஷி, “பச்சை நிறத்திற்கு மாற வேண்டும் என்பது வேட்பாளரின் முடிவாக இருக்கலாம். விளம்பரங்களில் பச்சை நிறம் இருப்பது வாக்காளர்களை கவரும் என்று அவர் நினைத்திருக்கலாம். வாக்காளர்கள் அப்பாவியானவர்கள். இந்த மாதிரியான விஷயங்கள் அவர்களிடையே வேலை செய்யும். பச்சை நிறம் பாகிஸ்தான் நாட்டு கொடி போலவே இருக்கும். காஷ்மீரின் அரசியல்வாதிகள் பச்சை நிறத்தால் எப்போதும் அரசியல் ஆதாயத்தை பார்த்திருக்கின்றனர். எப்படி பாஜகவின் காவிக் கொடி இந்துக்களின் நிறமாக பார்க்கப்படுகிறதோ, அதேபோல பச்சை, இஸ்லாமிய நிறமாக பார்க்கப்படும்” என்றார்.

இதுகுறித்து காலித் ஜஹாங்கிரை தொடர்பு கொள்ள பிபிசி முயற்சித்த போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.

Web Design by The Design Lanka