நடந்தால் தோப்பு! வீழ்ந்தால் நெருப்பு! கத்தி முனையில் கடக்கும் அரசியல் களம். - Sri Lanka Muslim

நடந்தால் தோப்பு! வீழ்ந்தால் நெருப்பு! கத்தி முனையில் கடக்கும் அரசியல் களம்.

Contributors
author image

Suaib Cassim

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் இவ்வருட இறுதிக்குள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல்,காலந்தாழ்த்தப்படுமா?என்பதை நீதிமன்றம் சொல்ல நேரிடலாம்.ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடமென அரசியலமைப்பி ன் 19 ஆவது திருத்தம் தௌிவாகச் சொல்கிறது. திருத்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தா? அல்லது ஜனாதிபதி பதிவியேற்றதிலிருந்தா? இந்தக்காலம் என்ற பொருட்கோடலை உச்ச நீதிமன்றத்திடம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரவுள்ளதால்
அரசியல் களம் வேறு திசைக்கும் திரும்பலாம்.திருத்தம் நிறை வேறியதிலிருந்தெனத் தீர்ப்பு வந்தால் ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஓகஸ்டிலே நிறைவடை யும். இல்லையெனத் தீர்ப்பளித்தால் இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்.

இந்தச் சூழலே ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கட்சிகளைச் சுறுசுறுப்பாக்கி உள்ளன.ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்த வரை தற்போதைக்கு “ரெடிமேட்டாக” உள்ள வேட்பாளர் ரணில்தான்.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ள ஒரேயொரு தெரிவு மைத்திரிதான்.ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவிடமே அதிக வேட்பாளர்கள் கையிலுள்ளனர்.கோட்டாபய, பஷில்,சிரந்தி எனச் சொந்த வேட்பாளர்களையும் சகோதரக் கட்சியில் மைத்திரியையும் மனதில் வைத்துக் கொண்டுதான் மஹிந்த காய்களை நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில் பட்ஜட்டின் இறுதி வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்து கொண்ட விதம் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் மைத்திரியின் நம்பிக்கையை மலினப்படுத்தி விட்டது. இது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமாகலாம் எனக்கருதிய ஐக்கிய தேசியக் கட்சி,ஜேஆரின் பாணியில் பந்துகளை எறியத் தொடங்கியுள்ளது. பண்டாரநாயக்காவின் குடும்பத்தைப் பிரித்து ஆட்சியில் நிலைத்ததைப்போல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஶ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன என்பவற்றின் புரிதல்களைத் தூரமாக்கி தனது வெற்றியை இலகுபடுத்துவதே ரணிலின் திட்டம்.

இந்தத் திட்டங்களின் வௌிப்பாடுகளில் ஒன்றே கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்குகள். பத்து வருடங்களுக்கு முன்னால் இடம்பெற்ற படுகொலைக்கு இப்போது நீதி கேட்பது தந்தை மீதான பாசமா?அல்லது ரணிலுக்கு ஆட்சிக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசியல் சந்தரப்பவாதமா? சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரின் மகள் அஹிம்சா விக்கிரமசிங்க மனம் திறக்க வேண்டும். ஆகக் குறைந்தது ஆட்சிமாறிய காலத்தில் 2015 இல் இந்த வழக்குத் தொடரப்பட்டி ருப்பதே நியாயம். இப்போது ஏன் இந்த வழக்கு?இது மட்டுமல்ல தன்னைக் கடத்தி சித்திரவதை செய்ததாக கனேடிய தமிழர் ரோய் என்பவரும் அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கோட்டாபயவுக்கு எதிரான இவ்விரு வழக்குகளும் கலிபோர்னியாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை மஹிந்தவுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்த சந்தோசமாக இருக்கும்.1983 ஆம் ஆண்டு ஜேஆரின் அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்த “ஒபரேசன் லிபரேசன்” இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து படிப்படியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று பத்து இலட்சத்துக்கும் அதிகம். இதில் அரைவாசி ஐந்து இலட்சம் பேர் கனடாவிலே உள்ளனர். ஏனையோர் ஜேர்மன், பிரிட்டன், சுவீடன், நோர்வே,அவுஸ்திரேலியா,அமெரிக்கா எனப் பரந்து வாழ்கின்றனர்.இந்தக் கனேடியர் இப்போது ஏன் வழக்காட வேண்டும்? என்கிறார் விமல்வீரவன்ச. இவர்களை நாடுகடந்த தமிழீழவாதிகளாகவே சிங்கள தேசம் இன்று வரைக்கும் பார்க்கின்றது. அல்லது பார்க்க வைக்கப்படுகின்றது. புலம்பெயர் தமிழ் டயஸ்பொராக்களின் செயற்பாடுகளை சிங்கள கடும்போக்காளர்கள் எடுத்தாளும் விதங்கள், தெற்கின் அரசியல் களத்தை திகிலூட்டுவதுடன்,பௌத்த தேசம் ஆபத்தில் என்ற எச்சரிக்கையையும் வேரூன்ற வைத்துள்ளன. இந்தப் பின்னணிகளும்,மஹிந்த ஏற்கனவே பெற்றிருந்த “ரஜத்துமணி”சிங்கள தேசத்து அரசன் என்ற புகழும் கோட்டாவின் விவகாரம் கோர்ட்டுக்குச் சென்றுள்ளதால் உயிர்ப்புறும். பின்னர் என்ன! தேர்தல் காலப்பிரச்சாரங்கள் சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தது போலதான்.மஹிந்தவைப் பொறுத்தவரை இனித்தான் தேர்தல் வெற்றி. இலங்கையின் ஆளுமையைப் பங்கிடுமாறு போராடிய புலிகளை ஒழித்த வியூகனுக்கு புலம்பெயர் தமிழர்கள் விலங்கிட்டுவிட்டதாக பொதுஜன பெரமுன கர்ஜிக்கும்.

அடுத்தது தன்னை மின்சாரக்கதிரையில் அமர்த்தி, சிங்களவர்களை ஏதிலிகளாக்குவதுதான் திட்டம் என்பார் மஹிந்த.இதை முன்கூட்டி எச்சரித்தது ஞாபகமில்லையா? எனக் கடந்த காலத்தைக் கிளறி சிங்களவர்களின் உணர்ச்சியை ஶ்ரீலங்கா பொதுஜனமுன மேலெழுப்பும்.இதற்குப்பதிலடி கொடுக்க ஐ.தே.க தயாராகா விட்டால் தோல்வியை ஏற்கத் தயாராக நேரிடும்.

ராஜபக்ஷக்களின் இந்த யுக்திகளின் வெற்றி கோட்டாவின் விடயங்கள் அமெரிக்காவால் கையாளப்படும் முறைகளிலே தங்கியிருக்கும்.பிற சமூகமொன்றின் சீண்டல்கள் ஏனைய சமூகத்தை விழிப்பூட்டும் என்பதைப் போல,டயஸ்பொராவின் சீண்டல்களுக்குள்ளான சிங்கள சமூகம் விழித்துக் கொள்ளாமல் பாதுகாப்பதில் தான் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலமுள்ளது.உண்மையில் போர் முடிந்த பின்னர் இலங்கையில் எழுந்த புதிய சூழலை சர்வதேசம் கையாண்ட விதங்கள் 2013 இல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
“தாருஸ்மன் றிப்போர்ட்” வௌியான போது நாடு அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகுமோ! என்ற மனநிலை பலரையும் பற்றிக் கொண்டது.மக்களின் இந்த மன நிலைமைகளை அரசியல் மூலதனமாக்கும் நோக்கிலே பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சியை கட்டாயமாக்கியிருந்தார் கோட்டாபய. அது மட்டுமல்ல இலங்கையை சிங்கப்பூராக்கும் ஜே.ஆரின் கனவை நனவாக்கியவரும் கோட்டாதான்.போரை முடித்து வைத்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.துரதிஷ்டவசமாக ரணிலுக்கு இந்த வாய்ப்பு ஏற்படவில்லை.ஒட்டு மொத்தமாக ஜே.ஆர் காணத்துடித்த இலங்கை என்ற இலக்கை எட்டியவர்கள் ராஜபக்‌ஷக்களே.

யுத்தத்தை ஒழித்தமை,இலங்கையை சிங்கப்பூராக அழகு படுத்தியமை,இந்தப் பெருமைகளுக்கு தன்னால் உரிமைகோர முடியாத நிலையில் கோட்டா உரிமைகோருவதா?இதெல்லாம் தேவையில்லை, வழக்கில் மாட்டிவிட்டால் போட்டிக்கு வேட்பாளர் இல்லை. எத்தனை நாட்களுக்கு பிரதமர் பதவியிலிருப்பது. ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வதில்லையா?இந்த ஆசைகளே ரணிலின் மூளையில் புதுப்புது வியூகங்களைப் பிறப்பிக்கிறது.சிறுபான்மையினரைத் தொடர்ந்து அரவணைப்பது,அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தி தெற்கில் பலப்படுவது ,அல்லது பலப்படுவதற்குத் தடையாக உள்ள எதிரிகளைத் தகர்த்தெறிவது. முதலாவது எதிரியை சங்கடத்தில் மாட்டியாயிற்று.இரண்டாவது யார்?.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதைக்கு உதாரணமாகவுள்ள மைத்திரியை வீழ்த்த ரணிலுக்கு பெரிய திட்டம் எதுவும் தேவையில்லை.மஹிந்தவிடமிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தூரமாக்கிய அதே வேகத்தில் தமிழ் முஸ்லிம் தலைவர்களை தம்வசப்படுத்தும் திட்டம் இனித் தயாரகும்.தமிழ் கைதிகளை விடுவித்தால் கொள்ளை இலாபம்தான்.என்ன செய்வது பிரதமரின் கையில் இந்த அதிகாரம் இல்லையே!

பொறுத்திருங்கள் எதிர்வரும் தேர்தலில் என்னை ஜனாதிபதியாக்கினால் காணி விடுவிப்பா?கைதிகள் விடுதலையா?காணாமல்போனோர் விவகாரமா? எல்லாம் என் கையில் என்று தமிழ் தரப்புக்கு நம்பிக்கையூட்டப்படும்.இந்த நம்பிக்கைகள் சிங்களத்துக்கு எதிரானதாகக் காட்டப்படும் என்ற அச்சமே ரணிலை மௌனத்தில் ஆழ்த்தியுள்ளது. முஸ்லிம் தலைமைகளும் இந்த அரசியல் களத்தின் கூர்மையைக் கவனமாகக் கடக்க நேரிடும்.பேரம் பேசும் அரசியல் பலம் பலமிழக்கும் சந்தர்ப்பம் ஏற்படுமானால் பெரும்பான்மையினர் விருப்புக்கு இணங்கிப் போவதே பொருத்தமாக இருக்கும்.வெற்றி வாடை எந்தப் பக்கம் வீசும் என்பதையும் ராஜபக்‌ஷக்களின் நகர்வுகள் ஜெயிக்காது என்பதையும் இப்போதைக்கு எதிர்வு கூற முடியாத அரசியல் சூழலில் சிறுபான்மைத் தலைமைகள் கத்திமுனையிலே காய்களை நகர்த்த நேரிடும்.”திட்டம் பலித்தால் தோப்பு, தோற்றால் நெருப்பு” என்ற நிலைமையே தற்போது சிறுபான்மையினருக்கு…

Web Design by Srilanka Muslims Web Team