நாட்டின் கல்வித்துறை பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் அல்ல - ஜனாதிபதி » Sri Lanka Muslim

நாட்டின் கல்வித்துறை பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் அல்ல – ஜனாதிபதி

MAITHRY

Contributors
author image

Presidential Media Division

நாட்டின் கல்வித்துறை பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பினை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்காது அதனை நாட்டின் கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகளும் கல்விமான்களும் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பிள்ளைகள் எதிர்கால உலகினை வெற்றிகொள்ளத்தக்க வகையிலும் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலுமான தேசிய திட்டமொன்றினை விரைவில் நாட்டில் அமுல்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதோடு, அது தொடர்பிலான உரையாடலொன்றினை அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் பங்குபற்றலில் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று பிள்ளைகளின் கல்வியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவித்தார்.

பிரபல பாடசாலைகள் இலக்குடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போட்டித்தன்மை எமது நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு சிறந்ததல்ல என்பதோடு, இந்நிலைமை பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி விரைவில் மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பிரபல பாடசாலைகள் மற்றும் சிறந்த பாடசாலைகள் போன்ற எண்ணக்கருக்களால் இன்று எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளில் பாரியளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளதோடு, முறையான கல்வித்திட்டத்தின் ஊடாக சகல பாடசாலைகளையும் சிறந்த பாடசாலைகளாக மாற்றி அனைத்து பிள்ளைகளுக்கும் சம கல்வி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் பிரச்சினைகள் காரணமாக கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையான கொள்கையொன்றின் உருவாக்கம் தொடர்பில் விரைவில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

பிரபல பாடசாலைகள் எண்ணக்கருவினால் பெருமளவிலான மாணவர்கள் கொழும்பு நகர பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவதனால் கொழும்பு நகரத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி இல்லாதுபோகும் அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளதையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கல்வியில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மை காரணமாக ஒரு பாடசாலைக்கு அதிகளவிலான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதனால் கல்வித்தரம் மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவதில் ஏற்படும் சவால்களையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்து, அதற்காக முன்வைக்கப்படும் மாற்று செயற்திட்டம் தொடர்பில் இதன்போது கல்வியியலாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கல்வித்துறைசார் நிபுணர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.04.11

Web Design by The Design Lanka