சுதந்திரச் சொத்தின் நிரந்தரத் தூக்கம்! - Sri Lanka Muslim

சுதந்திரச் சொத்தின் நிரந்தரத் தூக்கம்!

Contributors
author image

Suaib Cassim

“மனிதர்களை மண்ணினால் படைத்தோம்,மண்ணுக்குள்ளே மீட்போம்.மண்ணிலிருந்தே எழுப்புவோம்” புனித திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் மனித வாழ்வின் நிலைமாற்றங்களை நிரூபித்து இதற்குத் தயாராகுமாறு எச்சரிக்கிறது.இன்று எம்முடனிருந்த எத்தனையோ பேர் இரண்டாம் நிலைமாற்றத்துக்காக மண்ணுக்குள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மர்ஹும் எப்.எம்.பைரூஸின் உடலமும் மண்ணறை வாழ்வுக்குள் மௌனித்து விட்டது.

அவரது ஜனாசாச் செய்தி கேட்டுப் பேதலித்து நின்ற எனது இதயத்தை தேற்றுவதற்கு யாருமில்லை.அவருடன் நன்றாகப் பழகிய அரைவாசிப் பேர் கொழும்பில் இல்லை.எத்தனையோ பிரபலங்கள்.பிடித்தவர்கள்.அரசியல்வாதிகளின் இரங்கல் செய்தியை எழுதிய எப்.எம்மின் செய்தியைப் பிரசுரிக்க எந்தப் பத்திரிகைகளும் இல்லை.இப்படியொரு விடுமுறையிலா?எப்,எம்.பைரூஸ் எம்மை விட்டு விடைபெற வேண்டும் ஆண்டவா! பிரிவுத்துயரில் இதயம் பிளந்து நிற்கையில் அவருடனான நினைவலைகள் பல விடயங்களை மீட்டிக் கொண்டிருந்தன.

சாதாரணமாக அறிமுகமான அவரது உறவுகள் இப்படி இறுக்கி நெருக்கிவிட்டமைக்கு எப்.எம்.பைரூஸின் நேர்மை பெரிதும் பங்காற்றியிருந்தன.தனக்கிருந்த அரசியல் செல்வாக்குகளை சுய தேவைகளுக்காகப் பயன்படுத்தாது முஸ்லிம் மீடியா போரத்தின் வளர்ச்சிக்காகவும்,சமூக.சமய மேம்பாடுகளுக்காகவும் பயன்படுத்திய பொதுநலவாதியாக வாழ்ந்து மரணித்துவிட்டார் தினகரன் எப்,எம்.

பழம்பெரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய அவரை எவராலும் விலைபேச முடியாதிருந்ததால் ஊடகத் துறையின் சுதந்திரச் சொத்தாக மதிக்கப்பட்டார்.சோரம்போகாத எப்.எம்மின் எழுத்துக்கள் “எடுப்பார் கைப்பிள்ளையாக” என்றும் இருந்ததில்லை என்பதில் எனக்கும் பெருமைதான்.அமைதியே அடைக்கலமான அவரது சுபாவத்தைப் புரிந்து கொள்வதில் பலருக்கு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் இங்கித மொழிகளூடாகவே அவரை நெருங்க முடியுமென்பது அவருக்கு நெருக்கமானோருக்கே தெரியும்.இயக்க அரசியல்,இஸ்லாமிய அமைப்புக்களில் சாதாரண உறவுகளிருந்தாலும் அடையாளம் காணமுடியாத அதி சிறந்த ஆத்மீகவாதியாகவே எப்.எம் பைரூஸ் வாழ்ந்திருந்தார்.முஸ்லிம் சமூகத்தின் பன்முக ஆளுமை மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வருடன் எப்.எம்.பைரூஸுக்கிருந்த தொடர்புகள் சமூகத்தின் பன்முறை இயங்கு தளங்களிலும் அவரைச் சுறுசுறுப்பாக்கியிருந்தது.அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடுகளில் பங்கேற்பதுடன் கல்வித்துறையில் முஸ்லிம்களை விழிப்பூட்ட எஸ்.எல்.எம் ஷாபி மரைக்கார்.ஏ.எம்.ஏ அஸீஸ்.டாக்டர் டி.பீ ஜாயா டாக்டர் எம்.சி.கலீல் போன்றோருடன் எடுக்கப்பட்ட முயற்சிகளில் எப்.எம்மின் பங்களிப்புகள் எமது சமூகத்தின் நினைவுப்படிகங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.

.ஜனாஸா நல்லடக்கத்தில் கூடி நின்றபோது பிரிவுத்துயர் தாங்காத மேகங்களும் கண்ணீரைக் காணிக்கையாக்கிய காட்சிகள் என் கண்களையும் குளமாக்கின.குப்பியாவத்தை மையவாடியில் கூடிநின்றோர் அனைவரது நினைவுகளும் மர்ஹும் எப்.எம்.பைரூஸின் நல்லமல்களில் நிலைத்து நின்று கண்ணீர் மல்கியதை மழைத்துளிகள் மட்டுமே கண்டு கொண்டன.அன்னாரின் பிரிவுத்துயரால் தவிக்கும் நான் உட்பட.எப்.எம்மின் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் “ஸகீனத்” என்ற மேலான பொறுமையை ஆண்டவன் அருளட்டும். “ஆமீன்”

Web Design by Srilanka Muslims Web Team