கோட்டாவின் இருமுனை வாள்; அவரை பாதுகாக்குமா அறுக்குமா? - Sri Lanka Muslim

கோட்டாவின் இருமுனை வாள்; அவரை பாதுகாக்குமா அறுக்குமா?

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Purujoththaman Thangamayl


இரு வாரகால அமெரிக்கப் பயணத்தை முடிந்துக் கொண்டு கடந்த வாரம் நாடு திரும்பிய கோட்டாய ராஜபக்ஷ ஒரு வெற்றி வீரனைப் போல விமான நிலையத்தில் வைத்து ஆதரவாளர்களினால் வரவேற்கப்பட்டார். இறுதிப் போரின் இறுதி நாட்களில் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, வெற்றிச் செய்தியைக் கேட்பதற்காக பயணத்தை இடைநடுவில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்புக்கு அண்மித்த வரவேற்பொன்று கோட்டாபயவுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கின்றது.

இறுதிப் போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் போர் வெற்றி வாதத்தை முன்னிறுத்திக் கொண்டு தேர்தல்களை வெற்றி கொள்ள முடியும் என்கிற கட்டத்தை தென் இலங்கை குறிப்பிட்டளவில் பேணி வருகின்றது.

அதுதான், கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளருக்கான ஓட்டத்தில் முதன்நிலையில் வைத்துக் கொண்டிருக்கின்றது. ஏனைய ராஜபக்ஷக்களின் விரும்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மஹிந்த அளவுக்கு போர் வெற்றியை பங்கிடும் ஒருவராக கோட்டாபய இன்னமும் இருக்கிறார். அதுதான், அவருடைய பலமாகவும் அவரது ஆதரவாளர்களினால் முன்வைக்கப்படுகின்றது. ஏனெனில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களின் வெற்றி என்பது தனிச் சிங்கள வாக்குகளினால் தீர்மானிக்கப்பட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. அப்படியான நிலையில், பேரினவாதமும், அது காவிச் சுமக்கும் போர் வெற்றி வாதமும் முக்கியமான இடங்களைப் பிடிக்கும்.

இன்று வரை அமெரிக்கப் பிரஜையாக இருக்கும் கோட்டாவுக்கு, அந்நாட்டில் அவருக்கு எதிராக தொடுக்கப்படுகின்ற வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அந்த வழக்குகள் ஏற்படுத்தும் சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ளாமல், அமெரிக்கப் பிரஜாவுரிமையிலிருந்து விலகுவது அவ்வளவு இலகுவாக இருக்காது. அதன்போக்கில்தான், அவருக்கு எதிராக அண்மையில் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட இரு சிவில் வழக்குகளையும் தென் இலங்கை ஒட்டுமொத்தமாக அரசியல் கண்ணோட்டத்தோடு நோக்குகின்றது. அந்த வழக்குகள், ரணில் தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக தொடுக்கப்பட்டவை என்றும் திரும்பத் திரும்ப கூறப்படுகின்றது. ரணிலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வேறு யாரோ, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் போது, தங்களுக்கு எதிரான வேட்பாளர் போர் வெற்றி வாதத்தைத் தாங்கி நிற்பது, குறிப்பிட்டளவான அச்சுறுத்தலை வழங்கும். அப்படியான நிலையில், கோட்டாவை சட்டரீதியாக முடக்கும் சூழல் கனியும் போது, அதனை யாரும் கைவிடத் தயாராக இருக்கமாட்டார்கள்.

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளும், கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளான ஒருவரும் தொடுத்த வழக்குகளையே கோட்டா அமெரிக்காவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஒரு வழக்கின் நீதிமன்ற அறிவித்தலும் கோட்டாவிடம் அவரின் பயணத்தின் நடுவில் வழங்கப்பட்டுவிட்டது. அதுதான், தென் இலங்கையின் அடிப்படைவாதிகளை இன்னும் மேலேழ வைத்தது. விமான நிலையத்தில் அவ்வளவு வரவேற்பளிக்கவும் காரணமானது. உள்நாட்டில் தொடரப்பட்டிருக்கின்ற வழக்கு விசாரணைகளிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளில் குறிப்பிட்டளவு வெற்றிகளை கோட்டா பெற்றிருப்பதாகக் கொள்ளப்படுகின்றது. அவருக்கு ஆதவாக வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்குள்ளேயே அவரை போர் வெற்றி நாயகனாகவும், நாட்டின் காவலனாகவும் சித்தரிக்கும் காட்சிகளும் அரங்கேறுகின்றன. நீதிமன்றங்களுக்குள்ளேயே அதுதான் நிலமை என்றால், நீதிமன்றத்துக்கு வெளியே கோட்டாவை முன்வைத்துக் கட்டமைக்கப்படும் பிம்பம் என்ன மாதிரியாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து கோட்டாவும், அவருக்கு இணக்கமானவர்களும் சிந்திக்கத் தலைப்பட்டார்கள். மஹிந்தவுக்கும், அவரது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்கிற சூழலில், ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி தன்னிடம் இருப்பதாக கோட்டா கருதியது இயல்பானதுதான். அன்றிருந்து அதற்கான திட்டமிடல் என்பது, அனைத்துக் கட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. கடைநிலை சமூகக் கட்டமைப்புக்களிலிருந்து பௌத்த மகாநாயக்க பீடங்கள் வரை கோட்டாவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக உணர வைக்கும் கைங்கரியங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு, புலமை மற்றும் வர்த்தகத் தரப்புக்களின் பங்களிப்பும், ஊடகங்களின் பிரச்சாரப் பலமும் அதிகளவில் கைகொடுத்தன. ஓக்டோபர் சதிப்புரட்சிக் காலத்தில் கோட்டாவுக்கான கதவு பூட்டப்படுவதற்கான சூழல் எழுந்தாலும் சதிப்புரட்சியின் தோல்வி, மீண்டும் அவருக்கான கதவுகளை அகலத் திறந்துவிட்டது. அதுதான், அவர் இன்றைக்கு அடைந்திருக்கின்ற தவிர்க்க முடியாத இடத்திற்கு காரணமாகும்.

கோட்டாவைப் பொறுத்தளவில் அவரின் அமெரிக்கப் பிரஜாவுரிமை என்பது இரு முனை கொண்ட வாளைப் போன்றது. அது, ஒரு கட்டம் வரையில் அவரை சர்வதேச நெருக்கடிகள், சட்டச் சிக்கல்கள், வழக்குகளில் இருந்து பாதுகாப்பதற்கு உதவியிருக்கின்றது. ஒரு அமெரிக்கப் பிரஜைக்கு எதிரான வழக்கினை தமது நாட்டில் முன்னெடுத்துச் செல்வதால், அது அமெரிக்காவுடனான இராஜதந்திர முறுகல்களை ஏற்படுத்தும் என்பது ஐரோப்பிய நாடுகள் பலவற்றினதும் நிலைப்பாடு. அவ்வாறான கட்டத்தில், கோட்டாவுக்கு எதிரான மனநிலை இருந்தாலும், அதனை அவர்கள் சட்டரீதியாகவோ, இராஜதந்திர ரீதியாகவோ ஒரு கட்டத்துக்கு அப்பால் கொண்டு செல்லவில்லை. அதனால், அவர் பாரியவில் பாதுகாக்கப்பட்டார்.

ஆனால், இன்றைக்கு அவர் அமெரிக்கப் பிரஜாவுரிமையை விட்டுக்கொடுக்கும் கட்டத்திற்கு வந்திருப்பது என்பது, அவரைப் பாதுகாத்து வந்த வாள் அவரை நோக்கித் திருப்புவதற்கான கட்டங்களையும் திறந்துவிட்டிருக்கின்றது. மனரீதியான பிரச்சினைகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு இராணுவத்திலிருந்து விலகி அமெரிக்காவுக்குச் சென்ற கோட்டா இலங்கைப் பிரஜாவுரிமையைக் கைவிட்டு, அமெரிக்கப் பிரஜையானார். அவர், மீண்டும் 2006ஆம் ஆண்டிலேயே இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொண்டார். சுமார் 13 வருடங்களுக்கும் அதிகமான காலம் அவர் இரட்டைப் பிரஜாவுரிமையோடுதான் இருக்கிறார்.

இலங்கையின் இறைமை வழியும், அதன் ஜனநாயகக் கட்டமைப்பினாலும் தேர்தெடுக்கப்படும் ஒருவர், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு அப்பால் செல்ல முடியாது. அப்படியான கட்டத்தில், இன்னொரு நாட்டின் சட்ட திட்டங்களையும், கொள்ளை கோட்பாடுகளையும், அதன் இறைமையையும் ஏற்றுக்கொள்வதாகச் சத்தியப்பிரமாணம் எடுத்த ஒருவரால், எந்தவொரு தருணத்திலும் இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பில் ஒரு பிரதிநிதியாக வர முடியாது என்பதே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அதன்போக்கில்தான், சுவிஸ் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த கீதா குமாரசிங்க என்கிற காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில ஆண்டுகளுக்குப் முன்னர் பதவியிழந்தார். அந்தச் சிக்கலின் வழியை கோட்டா கடக்க வேண்டிய கட்டாயத்தின் போக்கில்தான், அவர் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அமெரிக்கப் பிரஜாவுரிமையிலிருந்து விடுபடுவதற்கான அனைத்து ஆவணங்களையும கையளித்துத் திரும்பியிருப்பதாவும், அதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் கோட்டாவும், அவரது ஆதரவாளர்களும் கூறுகிறார்கள். ஆனால், அமெரிக்க இராஜதந்திரக் கட்டமைப்பு, கோட்டா குறித்து என்ன முடிவெடுக்கப் போகின்றது என்பதுவும், அவருக்கு எதிரான சிவில் வழக்குகளில் என்ன முடிவு கிடைக்கப் போகின்றது என்பதும்தான், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

இதில் இன்னொரு முக்கிய விடயமும் இருக்கின்றது. அது, அமெரிக்காவோடு ஒத்துழைக்கும் இணக்கப்பாடொன்றுக்கு கோட்டா வந்திருப்பதன் போக்கிலேயே, அவரைக் குறித்த நடவடிக்கைகளில் அமெரிக்கா பெரிய இடர்பாடுகளைச் செய்யாதிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், சிரேஷ்ட இராஜதந்திரிகளும், புலமையாளர்களும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ‘கோட்டா சிலவேளை ஜனாதிபதியானாலும், கடந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தைப் போன்றதொரு சூழல் இனி எழுவதற்கு வாய்ப்பில்லை. அவர் சீனச்சார்ப்பு நிலையிலிருந்து அமெரிக்கச் சார்பினை எடுப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம்’ என்கிறார்கள். இல்லையென்றால், அவரை இதுவரை பாதுகாத்த இருமுனை வாள், என்றோ ஒருநாள் அவரைப் பதம் பார்க்கும் என்பது, அவர்களின் எண்ணப்பாடாகும்.

-தமிழ்மிரர் பத்திரிகையில் ஏப்ரல் 17ஆம் திகதி வெளியான எனது பத்தி.

Web Design by Srilanka Muslims Web Team