மிலேச்சத்தனமான தாக்குதல்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாகக் கண்டிக்கின்றது » Sri Lanka Muslim

மிலேச்சத்தனமான தாக்குதல்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாகக் கண்டிக்கின்றது

jamathul-islami

Contributors
author image

ஊடகப்பிரிவு

இன்று காலை முதல் இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த நாட்டு மக்கள் அனைவரையும் துயரத்திலும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள கொடூரமான தாக்குதல்களால் உயிர்களை இழந்த, படுகாயமுற்ற சகோதரர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் தேவாலய சமூகத்தினருக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களுக்கு இதயத்தில் ஆழத்திலிருந்து ஆறுதல் சொல்கிறது.

இலங்கை திரு நாட்டை மீண்டுமொரு முறை இருண்ட யுகத்துக்குக் கொண்டு செல்லும் இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்கள் முழு மனித சமூதாயத்துக்கும் எதிரான ஏற்பாடுகளின் வெளிப்பாடுகளாகும். கத்தோலிக்க மக்கள் தமது முக்கியமான சமய ஆராதனையில் ஈடுபட்டிருக்கின்ற நேரத்தில் இடம்பெற்ற இந்தகுரூரமான தாக்குதல்கள் முழு சமூகத்துக்கும் எதிரானவையாகும்.

இனவாத, மதவாத, கோத்திரவாத மிலேச்சத்தனமான இதுபோன்ற தாக்குதல்களின் மூலம் அப்பாவி மக்களின் உயிர்களை பலிகொள்வதைத் தவிர வேறெதனைத்தான் சாதிக்க முடியும். இந்தக் கோழைத்தனமான தாக்குதல்களின் நோக்கத்தை தோல்வியடையச் செய்வது நாகரிகமான மனித சமூகத்தின் பொறுப்பாகும்.

இந்த தாக்குதல்களின் பின்னணியைக் கண்டறிந்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வலியுறுத்துகிறது.

இது போன்ற மிலேச்சத்தனமாக தாக்குதல்களை எமது நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு இன, மத கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம்.

அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
21.04.2019

Web Design by The Design Lanka